திருச்சி மாவட்டத்தில் தரம் உயர்த்தப்பட்ட 8 காவல் நிலையங்கள் ! தீர்ந்தது பெரும் தலைவலி !
கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் போலீசு துறை மானியக்கோரிக்கையின் மீதான விவாதத்தில், அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தற்போது, தமிழகத்தில் சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் செயல்பட்டுவரும் காவல் நிலையங்கள், படிப்படியாக இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான காவல் நிலையங்களாக தரம் உயர்த்தப்படும் என்பதாக அறிவித்திருந்தார். இதன் மூலம், ஒரே இன்ஸ்பெக்டரின் கீழ் இரண்டு முதல் மூன்று காவல் நிலையங்களையும் சேர்த்து கவனித்தாக வேண்டும் என்றிருந்த நிலை மாறியிருக்கிறது.
தமிழகம் முழுவதும் உள்ள 1366 தாலுகா அளவிலான காவல் நிலையங்களில், 424 காவல் நிலையங்கள் சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் இயங்கி வந்த நிலையில், அவற்றுள் தற்போது முதல் கட்டமாக 280 காவல் நிலையங்களை தரம் உயர்த்தியிருக்கிறார்கள். ஜூலை-04 ஆம் தேதியிட்டு போலீசு துறை சார்பில் அரசாணை எண் : 383 வெளியிட்டிருக்கிறார், கூடுதல் தலைமை செயலர் தீரஜ் குமார்.
இதன்படி, திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் இயங்கி வந்த மணிகண்டம், பெட்டவாய்த்தலை, கல்லக்குடி, கொள்ளிடம், காட்டுப்புத்தூர், உப்பிலியபுரம், புத்தாநத்தம், வளநாடு ஆகிய 8 காவல் நிலையங்களும் தரம் உயர்த்தப்பட்டிருக்கின்றன.
தற்போது அரசாணை வெளியாகியிருக்கும் நிலையில், விரைவில் இப்புதிய பணியிடங்களுக்கான காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில், தகுதிவாய்ந்த உதவி ஆய்வாளர்கள் ஆய்வாளர்களாக பதவி உயர்த்தப்பட்டார்கள். இதனை தொடர்ந்து, தற்போது காவல் நிலையங்களும் தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது. இரண்டு – மூன்று காவல் நிலையங்களையும் சேர்த்து கவனித்துக்கொண்டிருந்த இன்ஸ்பெக்டர்கள் பெரும் தலைவலியிலிருந்து விடுபட்டிருப்பதாகவே போலீசு வட்டாரத்தில் சொல்கிறார்கள்.
— அங்குசம் செய்திப்பிரிவு.