நியோமேக்ஸ் – நிலங்களை மதிப்பிடும் பணி என்னதான் ஆச்சு ?
நியோமேக்ஸ் | நிலங்களை மதிப்பிடும் பணி என்னதான் ஆச்சு ?
நியோமேக்ஸ் மோசடி வழக்கு விவகாரத்தில், நியோமேக்ஸ் தொடர்புடைய நிலங்களின் தற்போதைய சந்தை மதிப்பை மதிப்பிடும் பணி, இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஒரு இறுதி நிலையை எட்ட முடியாமல் இழுத்துக் கொண்டு இருக்கிறது.
நீதியரசர் பரதசக்ரவர்த்தியின் முன்பாக விசாரணையில் இருந்து வரும் பிணை ரத்து தொடர்பான வழக்கில், இதுவரையில் 11 இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறார். செய்தி தாள்களில் விளம்பரம் வெளியிட வேண்டும் என்பதாக கடந்த 19.10.2024 ஆம் தேதியன்று முதல் உத்தரவு வெளியானது. இதனை தொடர்ந்து, கடந்த 29.04.2025 இல் வெளியான 5-வது இடைக்கால உத்தரவில்தான், 11 மாவட்டங்களுக்கான கமிட்டிகளை அமைத்து விரிவான உத்தரவை பிறப்பித்திருந்தார். 13.06.2025 ஆம் தேதிக்குள் அந்த கமிட்டி மதிப்பீட்டு பணிகளை முடிக்க வேண்டுமென்றும் கெடு விதித்திருந்தார்.

ஆனால், அரசு துறைகளுக்கே உரிய நிர்வாக நடைமுறை சிக்கல்களின் காரணமாக, கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. இவை தொடர்பான சிக்கல்கள் ஒவ்வொன்றும் அடுத்தடுத்து நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அவை ஒவ்வொன்றும் சரிசெய்யப்பட்டு பணிகள் தொடர்ந்து வருகின்றன. குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகா வெள்ளையன்கோட்டையில் நியோமேக்ஸூக்கு சொந்தமான நிலங்களை மோசடியான முறையில் விற்றுவிட்டார்கள் என்பது நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்ததையடுத்து, நியோமேக்ஸ் தொடர்புடையை நிலங்களை பத்திரப்பதிவு மேற்கொள்ள தடை விதித்து பதிவுத்துறை தலைவர் வழியாக அந்தந்த மாவட்ட பதிவாளருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும்; நிலங்களை மதிப்பீடு செய்யும் பணி தொய்வின்றி நடைபெற உரிய ஏற்பாடுகளை செய்து தர வேண்டுமென்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, மீண்டும் அவகாசம் வழங்கி 26.06.2025 அன்று இரவு 8.00 மணிக்குள் மதிப்பீடு செய்யப்பட்ட நிலங்களின் விவரங்களை பொருளாதாரக் குற்றப்பிரிவு இணைய தளத்தில் வெளியிட வேண்டுமென்று கெடு விதிக்கப்பட்டது. அந்த விவரங்களை யார் வேண்டுமானாலும் பார்வையிட்டு சரிபார்க்கவும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
மேலும், நியோமேக்ஸ் தொடர்பான நேரடி சொத்துக்கள் மற்றும் அவர்களது பினாமி பெயரில் பதிவான சொத்துக்கள் குறித்த தகவல்களையும் வழக்கின் விசாரணை அமைப்பிடம் எவர் ஒருவரும் நேரடியாக தெரிவிக்கலாம் என்பதற்கான வாய்ப்பையும் நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது.

அதுபோலவே, இதுவரை புகார் அளிக்காதவர்களும் புகார் அளிப்பதற்கான வாய்ப்பை வழங்கியிருப்பதோடு, அவ்வாறு புதியதாக வரப்பெறும் புகார்களை தனிப்பட்டியலாக பராமரிக்கவும் உத்தரவிட்டிருக்கிறது நீதிமன்றம்.
அடுத்து, மதிப்பீடு செய்யும் குழுவினருக்கான ஊதியம் நடைமுறை செலவுகள் குறித்த விவாதம் வந்தபோது, நியோமேக்ஸ் நிறுவனத்தின் முன்னணி இயக்குநர்கள் பிணை கேட்டு நீதிமன்றத்தில் கட்டியுள்ள பிணைத்தொகை 10 கோடியிலிருந்து 10 இலட்சத்தை விடுவித்தும் அதனை டி.ஆர்.ஓ. பொறுப்பில் ஒப்படைத்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
நிறைவாக, 22.08.2025 ஆம் தேதிக்குள் முதற்கட்டமாக 16 மாவட்டங்களுக்கான மதிப்பீட்டு பணியை முடிக்க அவகாசம் வழங்கியிருக்கிறது. இதன் தற்போதை நிலை குறித்த தகவலை 11.08.2025 அன்று விசாரணையில் தெரிவிக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பான முழுமையான வீடியோவை காண