மாதிரிப்பள்ளி மாணவர்கள் தற்கொலை விவகாரம் : இனி அப்படி நடக்காது ! அமைச்சரின் விளக்கமும் அரசின் அறிவிப்பும் !
தமிழகத்தில் பள்ளிக்கல்வியில் திறன் வாய்ந்த மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களின் தனித்திறமைகளை பட்டைத்தீட்டும் நோக்கில் உருவாக்கப்பட்டதுதான் மாதிரிப்பள்ளிகள். திருச்சியில் இயங்கிவரும் துவாக்குடி மாதிரிப்பள்ளியில், ஒரே கல்வியாண்டில் அடுத்தடுத்து இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்களின் தற்கொலைகள் குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி சில விசயங்களை பத்திரிகையாளர்கள் மத்தியில் தெரிவித்திருக்கிறார். குறிப்பாக, புதிய விடுதி சூழலுக்கு தன்னை தகவமைத்துக் கொள்ள சிரமப்படும் மாணவர்களை தொடர்ந்து அதே சூழலில் தங்கிப்படிக்க கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் அவர்கள் மாதிரிப்பள்ளியிலிருந்து விலக அனுமதிக்கப்பட வேண்டுமென்றும் அறிவுறுத்தியிருக்கிறார். இங்கிருந்து விலகி, இடைநிற்றல் இல்லாமல் அவர்கள் வேறு பள்ளியில் தவறாமல் சேர்கிறார்களா என்பதை மட்டும் கவனித்தால் போதுமானது என்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.
இந்நிலையில், இதுபோன்ற மாணவர்களின் தற்கொலைகளை தடுக்கும் நோக்கில் சில ஏற்பாடுகளை செய்திருப்பதாக திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.

கடந்த ஜூன் மாதம் இப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஒருவர் தன்னை தானே மாய்த்துக் கொண்டத் துயர நிகழ்வு நடந்தது. இதற்கான சட்டப்படியான நடவடிக்கைகள் ஒரு புறம் எடுக்கப்பட்ட போதும், பள்ளியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் மனநலம் சார்ந்து பல நடவடிக்கைகளும் பள்ளிக் கல்வித் துறையால் எடுக்கப்பட்டன.
நிகழ்வு நடந்த அன்றே அரசு உளவியல் மருத்துவர் ஒரு பள்ளிக்குச் சென்று மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் அனைத்து வகைப் பணியாளர்களுக்கும் மன நல ஆலோசனை வழங்கி கலந்துரையாடினார். குறிப்பாக, அம்மாணவியின் வகுப்பு மாணவர்களுக்கும் தலைமை ஆசிரியருக்கும் தனிப்பட்ட முறையில் மன நல ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
உண்டு உறைவிடப் பள்ளியான இங்கு மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, ஒவ்வொரு தளத்திற்கு தனித்தனியாக விடுதிக் காப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வாரந்தோறும் மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடி ஆலோசனைகள் வழங்கினர். அரசு மன நல மருத்துவர் இரு வாரங்களுக்கு ஒரு முறை பள்ளிக்குச் சென்று மாணவர்களைச் சந்தித்து உரிய ஆலோசனைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டது.
தனித்து இருத்தல், சோர்வாக இருத்தல் போன்ற மாணவ மாணவிகளின் நடவடிக்கைள் கவனிக்கப்பட்டு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன. பெற்றோர்-ஆசிரியர் கூட்டம் நடத்தப்பட்டு பெற்றோர்களின் ஆலோசனைகள் பெறப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன.
எனினும் எதிர்பாராத விதமாக கடந்த ஜீலை 31 அன்று ஒரு மாணவர் தன்னைத் தானே மாய்த்துக் கொண்ட அதித்துயர நிகழ்வு நடந்துள்ளது. இது குறித்து சட்ட ரீதியான நடவடிக்கைகளுடன் துறை ரீதியான விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணை முடிவின் அடிப்படையில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
அரசு மன நல மருத்துவர்களுடன் கூடுதலாக மன நல ஆலோசகர்களும் வரவழைக்கப்பட்டு மாணவ மாணவிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் அனைத்து வகைப் பணியாளர்களுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளன. மேலும் பள்ளியில் நிரந்தரமாக மன நல ஆலோசகர் ஒருவரும், செவிலியர் ஒருவரும் நியமிக்க, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மாதிரிப் பள்ளிகள் குழுமத்தின் உறுப்பினர் செயலரும் முதன்மைக் கல்வி அலுவலரும் உடனடியாக பள்ளிக்குச் சென்று மாணவ மாணவிகளை சந்தித்து உரையாடினர்.
மாணவர்களின் மன நலத்தை மேம்படுத்தும் வகையில், கல்விச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நுண்கலை, நிகழ்த்துக் கலைப் பயிற்சிகளும் விளையாட்டு பாட வேளைகளும் மாதிரிப் பள்ளிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற போதும், இனி அனைத்து மாணவர்களும் கூடுதலாக இவற்றில் ஈடுபடும் வகையில் வாய்ப்புகள் உருவாக்கித் தரப்பட்டுள்ளன. மேலும், வாழ்க்கைத் திறன் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. பகுத்தறிவுடன் வாழ்வியல் சார்ந்து உரையாற்றக் கூடிய சிறந்த ஆளுமைகளை அழைத்து வந்து மாணவர்களுடன் கலந்துரையாடத் திட்டமிடப்பட்டுள்ளது.
மாதிரிப் பள்ளிகளில் மாணவர் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது. இம்மாணவர் பேரவை 15 நாட்களுக்கு ஒரு முறை கூடி, மாணவர்களின் நலன் சார்ந்து தலைமை ஆசிரியருடன் உரையாடுவார்கள். பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடத்தி பெற்றோர்களின் ஆலோசனைகளைப் பெற்று அவற்றையும் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இச்செயல்பாடுகள் மூலமாக மாணவர்களின் மன நலத்தை உறுதி செய்யும் வகையில் பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கைள் எடுத்து வருகிறது.” என்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
மாணவர்களின் தனித்திறமைகளை அடையாளம் கண்டு ஊக்குவிக்கும் களங்களாக செயல்பட வேண்டிய மாதிரிப்பள்ளிகள், தற்கொலை களமாக மாறிவிடக்கூடாது என்பதே எல்லோரது எதிர்பார்ப்பும்.
— அங்குசம் செய்திப்பிரிவு.