இரயில், கப்பல் மற்றும் விமானத்தில் கேட்டரிங் வேலை வாய்ப்புகள் ! ஹோட்டல் தொழில் என்றொரு உலகம் பகுதி –21
ஹோட்டல் மேனேஜ் மெண்ட் படித்தவுடன் கப்பலில் வேலைக்கு சேர்ந்தால் வாழ்கையில் செட்டில் என்று ஒரு நம்பிக்கை இருந்தது. இன்றெல்லாம் கப்பல் மட்டுமல்லாமல் பல வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் அதிகம் வருகிறது. ஆனால், கப்பல் வேலை என்பது இன்றும் கேட்டரிங் படிக்கும் பல மாணவர்களுக்கு ஒரு லட்சியமாகவே உள்ளது. அந்த கப்பல் வேலை பற்றியும், அதனைவிட இன்னும் அதிகமான சொகுசான விமான வேலை பற்றியும் இத்தொடரில் காண்போம்.
பொதுவாக கப்பலில் வேலைக்கு செல்பவர்கள் செஃப் வேலைக்கு மட்டுமல்லாமல், சர்வீஸ் மற்றும் ஹவுஸ் கீப்பிங் வேலைக்கும் செல்லலாம். கப்பல் வேலையின் மிக முக்கிய நன்மை, செலவுக்கு வாய்ப்பு குறைவு. ஆனால்,கப்பலின் சூழலும் தட்ப வெட்பமும் நமக்கு ஒத்துவர வேண்டும். கப்பல் வேலைக்கு, கேட்டரிங் படித்து ஸ்டார் ஹோட்டல் போன்ற நிறுவனத்தில் தகுந்த அனுபவம் இருந்தால் விண்ணப்பிக்கலாம்.
சொகுசு கப்பல் மற்றும் சரக்கு கப்பலில் வேலை கிடைக்கும். சரக்கு கப்பலை விட பயணிகள் பயணம் செய்யும் சொகுசு கப்பலில் சம்பளம் அதிகமாக இருக்கும். கப்பலில் சம்பளம் மற்றும் வேலைப்பளு இரண்டுமே சற்று கூடுதலாக இருக்கும். படிப்பும் அனுபவமும் இருந்தால் எளிதில் இந்த வேலைக்கு செல்லலாம். அதிக சம்பளம்,சேமிப்புக்கு வாய்ப்பு அதிகம் என்பதால் இதனை பலரும் விரும்புகின்றனர். மேலும், ஒரு கான்ட்ராக்ட் என்பது 6 முதல் 10 மாதம் வரை இருக்கும். அதன் பின்னர் 2 முதல் 4 மாதங்கள் வரை விடுமுறை இருக்கும். வேலை மற்றும் விடுமுறை கால அளவு, நிறுவனம் மற்றும் பதவிக்குத் தகுந்தாற்போல் மாறுபடும். விடுமுறை காலங்களில் வீட்டிற்கு வந்து செல்லலாம்.
முதல் கான்ட்ராக்ட் செல்வதுதான் சற்று சிரமம். இண்டர்வியூ, விசா என பல கட்டங்களைத் தாண்ட வேண்டும். ஒருமுறை கான்ட்ராக்ட் முடித்துவிட்டால், அடுத்தமுறை வர விருப்பம் உள்ளதா? என கேட்டு, அப்போதே அவர்களுக்கான அடுத்த வேலை நாளை முடிவு செய்து அனுப்பி வைப்பார்கள்.
சில கப்பல்களில் விண்ணப்பிக்க கடல் பாதுகாப்பு குறித்து பயிற்சி பெற்று சான்றிதழ்கள் பெற்றிருப்பது அவசியம். இந்த பயிற்சி சென்னை, மும்பை போன்ற பெருநகரங்களில் குறுகியகால பயிற்சியாக நடத்தப்படுகின்றன. இந்த Seaman course நாம் செல்லும் பதவி, வேலை ஆகியவற்றுக்குத் தகுந்தாற்போல் படிக்க வேண்டும். 2 முதல் 6 வாரங்கள் வரை நடத்தப்படும். இது சில கப்பலில் கட்டாயம் இல்லை என்றாலும் இந்த சான்றிதழ்கள் இருந்தால், அனைத்து கப்பலிலும் வேலைக்கு முன்னுரிமை தரப்படும்.
கப்பல் வேலை எந்த அளவுக்கு மகிழ்வோ அதேபோல் விமான வேலையும் சொகுசான வேலைதான். விமானத்தில் கிட்சன், சர்வீஸ் போன்ற இரண்டு வேலை வாய்ப்புகள் அதிகம். கிட்சன் வேலை ஃப்ளைட் கேட்டரிங் என்ற வேலை ஆகும். இங்கு அதிகபட்ச சுகாதாரத்தை கடைபிடித்து நல்லதொரு உணவைத் தயாரிக்கப் பழகிக் கொள்ளலாம்.
ஃப்ளைட் கிட்ச்சன் வேலை விமானம் சார்ந்து இருந்தாலும், விமானத்தில் செல்லத் தேவையில்லை. இந்த பணியிடம் பெரும்பாலும் விமான நிலையத்திற்கு அருகில் இருக்கும். சர்வீஸ் வேலைக்கு விமானத்தில் செல்ல விரும்புபவர்கள் கேபின்க்ரூ என அழைக்கப்படும் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். விமான கேபின்க்ரூவிற்கான பயிற்சி சற்று எடுத்துக் கொண்டால் மட்டுமே இந்த வேலை கிடைக்கும். இந்த வகுப்பின் மூலம் விமான பாதுகாப்பு குறித்தும் மற்ற விதிமுறைகள் குறித்தும் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். தங்கும் வசதியினை விமான நிறுவனமே இலவசமாக ஏற்படுத்தித் தரும். விமானப் பயணக் களைப்பு,நேர மாற்றம் போன்ற சில சவால்களை மட்டும் நாம் பழகிக்கொண்டால்; இது ஒரு அருமையான வாய்ப்பு ஆகும்.
கப்பல், விமானம் போன்ற வேலைக்கு செல்பவர்களுக்கு வருமானம், வாழ்கைமுறை இரண்டுமே மேம்படும் என்பதில் ஐயமில்லை. அதனால் தான் இன்றளவும் இந்த வேலைகளுக்கு உலகளவில் மவுசு அதிகம்.
இவற்றைப் போலவே, இந்திய ரயில்வே துறையிலும் நிறைய பணிகள் ஒப்பந்தஅடிப்படையிலும், நிரந்தர ஊழியராகவும் உள்ளன. கேட்டரிங் மேனேஜர், கேண்டீன் மேனேஜர் என முக்கியமான பணிகள் நல்ல சம்பளத்துடன் அனைத்து இரயில்வே உரிமைகளுடன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இதற்கு இரயில்வே பணியின் தேர்வு எழுத வேண்டும். கேட்டரிங் தகுதி வேண்டும். அதற்கு சம்பந்தப்பட்ட கேள்விகள்; தேர்விலும், இண்டர்வியூவிலும் கேட்கப்படும். இது ஒரு மத்திய அரசுப் பணி ஆகும்.
IRCTC வேலை எனில், ரயில்வே ஸ்டேசனில் இருக்கும் அனைத்து உணவகங்களையும் கண்காணிக்கும் பொறுப்பு ஆகும். நம்ம திருச்சியிலேயே மங்களேஸ்வரன் மற்றும் சந்திர பிரகாஷ் என இரு அலுவலர்கள் ரயில்வே அதிகாரியாக கேட்டரிங் துறையில் உள்ளனர். இருவரும் நமது திருச்சி துவாக்குடியில் அரசு கேட்டரிங் கல்லூரியில் படித்தவர்கள்.
கப்பல் விமான வேலைக்கு எடுத்துக்காட்டு சொல்ல வேண்டுமானால், ஒவ்வொரு ஊரிலும் நிறைய பேர் இருப்பார்கள். இவ்வாறு பல வாய்ப்புகளை அள்ளித்தரும் கேட்டரிங் துறையின் இன்னும் இருக்கும் வாய்ப்புகளைப் பற்றி அடுத்தடுத்த தொடரில் காண்போம்.
தொடரும்
கபிலன்