வழுக்கை விழுந்தால் வாழ்க்கையே விழுந்துராது ‘சொட்ட சொட்ட நனையுது’ சொல்லும் சேதி!
‘அட்லெர் எண்டெர்டெய்ன்மெண்ட்’ பேனரில் அசார் & நவீத் எஸ்.ஃபரீத் தயாரிப்பில் உருவாகி வரும் 22—ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீசாகிறது ‘சொட்ட சொட்ட நனையுது’ படம். நவீத் எஸ்.ஃபரீத் டைரக்ட் பண்ணியிருக்கும் இப்படத்தில் ஹீரோவாக நிஷாந்த் ரூசோ, ஹீரோயின்களாக பிக்பாஸ் வர்ஷிணி, புதுமுகம் ஷாலினி, ‘கல்லூரி’ வினோத், பிரியங்கா நாயர், ஆனந்த் பாண்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் ஒளிப்பதிவு : ரயீஷ், இசை : ரஞ்சித் பணிக்கர், எடிட்டிங் ; ராம் சதீஷ், ஆர்ட்: ராம்குமார், நடனம் : அசார், தமிழ்நாடு ரிலீஸ் : ஜார்ஜியஸ் எண்டைட்டில்மெண்ட், பி.ஆர்.ஓ. : ஏ.ராஜா.
இப்படத்தின் பாடல்கள் & டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் ஆக.06—ஆம் தேதி நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் சி.வி.குமார், ரோபோ சங்கர், ‘கேபிள்’ சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஆனந்த் பாண்டி,
‘கல்லூரி’வினோத், நடிகைகள் வர்ஷிணி, ஷாலினி, பிரியங்கா நாயர், வசனகர்த்தா ராஜா, இசையமைப்பாளர் ரஞ்சித் பணிக்கர் ஆகியோர் படத்தில் வாய்ப்பளித்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி சொல்லி, படம் சொல்லும் சேதியையும் சுருக்கமாக பேசினார்கள்.

தயாரிப்பாளர் அசார்,
“நானும் நவீத்தும் சேர்ந்து பிஸ்னஸ் செய்து சம்பாதித்த மொத்த பணத்தையும் இப்படத்தில் போட்டு பதினெட்டே நாட்களில் ஷூட்டிங்கை முடித்தோம். எங்களின் பத்து வருடக் கனவு நிறைவேறியுள்ளது. இந்தப் படத்திற்கும் அடுத்து நாங்கள் எடுக்கப் போகும் பெரிய படத்திற்கும் மீடியாக்கள் ஆதரவு தர வேண்டும்”.
டைரக்டர் நவீத் எஸ்.ஃபரீத்,
“இந்தப் படத்தில் நடித்த அனைவருமே பணத்தைப் பற்றி யோசிக்காமல் எங்களின் திறமையை கணக்கில் கொண்டு நடித்துக் கொடுத்தனர். இப்போதைய இளைஞர்களுக்கு வழுக்கை விழுந்து திருமணம் தடைபடும் சிக்கல் இருக்கிறது. அதனால் முடியுடன் வாழ்க்கை முடிந்துவிடுவதில்லை என்பதை காமெடியாகவும் உணர்வுப்பூர்வமாகவும் சொல்லியுள்ளோம். யார் மனைதையும் காயப்படுத்தாமலும் சொல்லியுள்ளோம். அதனால் மீடியா நண்பர்களின் பேராதரவு எங்களுக்குத் தேவை”.
ஹீரோ நிஷாந்த் ரூசோ,
“இது எனக்கு ஐந்தாவது படம். இந்தக் கதை இளம் வயதிலேயே வழுக்கை விழுந்து அதனால் வேதனைப்படும் 90 கிட்ஸின் வலியை இதில் சொல்லியுள்ளார் டைரக்டர். வழுக்கை விழுந்தால் வாழ்க்கையே விழுந்துராது என்ற நம்பிக்கையை இளைஞர்களிடம் காமெடி சொட்டச் சொட்ட சொல்வது தான் இந்த ‘சொட்ட சொட்ட நனையுது’. இப்படம் வழுக்கை விழுந்தவர்களை கேலி செய்பவர்களின் மனைத மாற்றும்”.
சிறப்பு விருந்தினர்களான சி.வி.குமார், கேபிள் சங்கர், ரோபோ சங்கர் ஆகியோர் படக்குழுவையும் அவர்களின் நம்பிக்கையையும் பெரிதும் வாழ்த்தி மகிழ்ந்தனர்.
— மதுரை மாறன்