வீட்டில் செல்ல பிராணி இருக்கா? உங்கள் கவனத்திற்கு ….
வீட்டில் செல்ல நாய், பூனை வளர்ப்பதில் பலருக்கும் நாட்டம் இருக்கும் ஆனால் நாய்/பூனை மூலம் உயிர் கொல்லும் ஒரு நோய் மனிதனுக்கு பரவலாம் என்பதையும் அந்த நோயின் அறிகுறிகள் தோன்றிவிட்டால் அதற்கு சிகிச்சை இல்லை மரணம் தான் அந்த நோய் தரும் வேதனைக்கு ஒரே மருந்து என்பதையும் பலரும் அறிவதில்லை.
ஆம்…
ரேபிஸ் எனும் கொடிய வைரஸ் நோய் குறித்து தான் பேசுகிறேன்.
செல்ல நாய்கடித்து இறந்த இந்த சகோதரரின் உறவினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் உரித்தாகுக.
அவருக்காக அனைவரும் பிரார்த்தனை செய்யவும்.
ரேபிஸ் மற்றும் செல்ல நாய்/பூனை வளர்ப்பு குறித்து அனைவரும் அறிந்திருக்க வேண்டிய கட்டாயமான விசயங்களை இந்த கட்டுரையில் பார்ப்போம்.
கீழ்க்காணும் கட்டுரை உலக சுகாதார நிறுவன வழிகாட்டால், இந்திய அரசின் ரேபிஸ் குறித்த அறிவுரைகள் மற்றும் எனது சொந்த அனுபவங்களை வைத்து எழுதப்படுகிறது
- வளர்ப்பு செல்ல நாய்/பூனை வளர்க்கலாமா???
இந்திய நாட்டுச் சட்டப்படி தாராளமாக வளர்க்கலாம். ஆனால் அவற்றை எவ்வாறு பராமரிக்க வேண்டும்? என்பதை நன்கு அறிந்து கொண்டு வளர்க்க வேண்டும். நம்மைப்போலவே அவற்றையும் பராமரித்து வர வேண்டும்.
முக்கியமாக அவற்றிற்கு வழங்க வேண்டிய தொற்று நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகளை முறையே வழங்கி வளர்க்க வேண்டும். நமக்கு எப்படி குடும்ப மருத்துவர் உண்டோ அதைப்போலவே அவற்றிற்கும் விலங்கு நல சிறப்பு நிபுணரிடம் அவ்வப்போது சென்று சிகிச்சை அளிக்க வேண்டும். முக்கியமாக தடுப்பூசிகளை அட்டவணைப்படி முறையாக வழங்க வேண்டும்.
- செல்லப்பிராணிகளுக்கு ரேபிஸ் நோய் வராமல் காக்கும் தடுப்பூசிகள் இருக்கின்றனவா??
ஆம். ஒரு நாய்க்குட்டி பிறந்ததில் இருந்து மூன்றாவது மாதம் – ரேபிஸ் நோய் அந்த நாய்க்கு வராமல் இருக்கும் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும். அதற்குப்பிறகு பிரதி வருடம் ஒருமுறை ரேபிஸ் நோய்க்கு எதிரான பூஸ்டர் ஊக்க ஊசி வழங்கப்பட வேண்டும்.
- தடுப்பூசி முறையாக வழங்கப்படாத செல்ல நாய்கள் வளர்ப்பாளர்களை கடித்து விட்டால் என்ன செய்ய வேண்டும் ???
தமிழக அரசின் மேற்கோள்படி நாய் கடித்து விட்டால் அந்த நாய்க்கு தடுப்பூசி வழங்கப்பட்டிருக்கிறதா இல்லையா என்பதையெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் சந்தேகத்தின் பலன் கடிபட்டவருக்கு வழங்கப்பட்டு உடனே மனிதர்களுக்கு நோயைத்தடுக்கும் ரேபிஸ் தடுப்பூசி வழங்கப்பட்டுவிடும்.
இருப்பினும் உலக சுகாதார நிறுவனம் கூறுவது உங்களது செல்லப்பிராணிக்கு முறையாக ரேபிஸ் தடுப்பூசிகளை கொடுத்து இருந்தால் உங்களுக்கு அவை கடிப்பதால் ரேபிஸ் வரும் வாய்ப்பு மிக மிக குறைவு என்கிறது. எனினும் நாம் நமது நாட்டின் சுகாதார மேற்கோள்களை மதிப்பது நல்லது.
நாய்க்கு /பூனைக்கு முன்கூட்டியே தடுப்பூசி போட்டிருந்தாலும் நம்மை அவை கடித்தாலோ பிராண்டினாலோ நமக்கான ரேபிஸ் தடுப்பூசியை அட்டவணைப்படி பெற்றுக் கொள்ள வேண்டும்.
- செல்ல நாய்கள் வழி எப்படி ரேபிஸ் பரவுகிறது ???
நம்மில் நாய்கள் வளர்க்கும் சிலர் முறையாக அவற்றை பராமரித்து தங்களது பிள்ளைகள் போல அவற்றுக்கு ஏற்ற உணவு- இடம்- தடுப்பூசிகள் என்று வளர்க்கிறார்கள்.
தங்களது வீடுகளுக்குள் மட்டும் வைத்து வெளிப்புற நாய்களுடன் தொடர்பு கொள்ளாதவாறு வளர்க்கிறார்கள் இது பாதுகாப்பான வளர்ப்பு முறை.
ஆனால் வளரும் நகர்ப்புறங்களில் கிராமப்புறங்களில் வளர்ப்பு நாய்களை வீட்டுக்குள் மட்டும் வைத்து வளர்ப்பது கடினம். இதனால் அந்த நாய்கள் வீட்டிலும் இருக்கும் வெளியேவும் சுற்றித்திரியும்.
அந்த வளர்ப்பு நாயானது வெறி நாய் கடி நோயால் பாதிக்கப்பட்ட நாயால் கடிக்கப்பட்டால் அதற்கும் ரேபிஸ் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
அந்த ரேபிஸ் வந்த நாய் வீட்டில் உள்ளவர்களை கடித்தால் ரேபிஸ் மனிதர்களுக்கும் பரவும்.
ஏற்கனவே நாய்க்கு ரேபிஸ்க்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும் ரேபிஸ் வருவதற்கான வாய்ப்பு குறைவான அளவேனும் அதற்கு இருக்கிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.:max_bytes(150000):strip_icc()/ddhp-vaccine-for-dogs-489833270-2000-66fa8db94d9c48c69ea320572ad2f00b.jpg)
- முறையாக தடுப்பூசி போடப்படாத
முறையாக வீட்டுக்குள் மட்டும் வைத்து வளர்க்கப்படாத நாய்கள் கடித்து விட்டால் என்ன செய்வது ? நம்மில் பலரும் செய்யும் தவறு.
நாம் வளர்க்கும் நாய்க்கு எந்த நோயும் இருக்காது என்று தவறான நம்பிக்கை கொள்வது. மேலும் அவற்றுக்கு வழங்க வேண்டிய தடுப்பூசிகள் குறித்து விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது.
ஒருவேளை பாதுகாப்பற்ற உங்களது செல்ல நாய் கடித்து விட்டால் உடனே உங்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டும். இதை Post Exposure Prophylaxis என்கிறோம்.
கடித்த நாய்க்கு ரேபிஸ் இருக்குமா இருக்காதா? என்ற ஆராய்ச்சியெல்லாம் தேவையற்றது. உடனே அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைகளுக்குச் சென்றால் இலவசமாக ரேபிஸ் தடுப்பூசி வழங்கப்படும்.
முதல் நாள்
மூன்றாவது நாள்
ஏழாவது நாள்
இருபத்தி எட்டாவது நாள் என்று நான்கு நாட்கள் முறையாக அந்த தடுப்பூசியை எடுத்துக்கொள்ள வேண்டும்.
ரேபிஸ் நோய்க்கு எதிராக நாம் தடுப்பூசியை உடனே போட்டுக்கொள்வதால் அந்த நாயிடம் இருந்து நமக்கு வருவது பெரும்பாலும் தடுக்கப்படும். இந்த தடுப்பூசி கடித்த ஒரு நாளுக்குள் வழங்கப்பட்டால் இன்னும் சிறப்பு.
கடித்த இடத்தில்/பிராண்டிய இடத்தில் சிறிதளவு ரத்தம் வந்தாலும் ரேபிஸ் இம்யூனோகுளோபுளின் ஊசி கடிபட்ட இடத்தில் போடப்பட வேண்டும்.
- நாய் கடித்துவிட்டால் உடனே செய்ய வேண்டிய முதலுதவி என்ன?
எல்லா நாய் கடியையும் ரேபிஸ் பாதித்த நாய் கடியாகவே கருத்தில் கொள்ள வேண்டும். முக்கியமாக தெரு நாய் கடித்தால் சிறிதும் தாமதம் அலட்சியம் இருக்கக்கூடாது.
நாய் கடித்த இடத்தை பதினைந்து நிமிடங்கள் குழாய் நீரில் சோப் போட்டு நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும். இதனால் அந்த காயத்தில் வைரஸ் இருந்தால் அவற்றைக் கொல்ல வாய்ப்பாக அமையும்
பொதுவாக நாய் குதறிய இடத்தில் தையல் போடப்படுவதில்லை. இதற்கான காரணம்..தையல் போடும் போது ஊசி மூலம் சருமத்தின் வெளிப்புறம் இருக்கும் வைரஸ் ஆழ்திசுக்களுக்குள் சென்று விடக்கூடாது என்பதே ஆகும்.
மேற்சொன்ன முதலுதவியை செய்து விட்டு அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்குச் செல்வது சிறப்பு
ரேபிஸ் நோயின் அறிகுறிகள் யாது???
நாயைப்பொறுத்த மட்டில் நோய் பாதித்த நாய் இரண்டு வகையில் நடந்து கொள்ளலாம்.
முதல் வகை – வெறி பிடித்து பைத்தியம் போல் அங்கும் இங்கும் அலையும். வாயில் இருந்து எச்சில் வடியும். பார்ப்பவரை எல்லாம் துரத்தி துரத்தி கடிக்கும்
இரண்டாம் வகை – சாதுவாக மாறி எந்த அசைவும் இன்றி படுத்திருக்கும். யாராவது அருகில் வந்தால் கடிக்கும்
மனிதர்களைப்பொறுத்த வரை 80% பேருக்கு நோய் அறிகுறி என்பது தண்ணீரைப்பருகுவதில் கடும் சிரமம் . பிறகு தண்ணீரைக்கண்டாலே அதிர்ச்சி. காற்று வேகமாக அடித்தாலே அச்சம் . வெளிச்சம் கண்டாலே பயம். வெறி . ஆக்கிரோஷம் பித்து பிடித்த நிலை பிறகு சிகிச்சை பலனின்றி மரணமே இதற்கு தீர்வாக அமையும். 20%பேருக்கு வாதம் வந்தது போல உடல் முழுவதும் செயலிழந்து பிறகு மரணம் சம்பவிக்கும்.
அறிகுறிகள் தோன்றிவிட்டால் வைரஸ் மூளையை எட்டிவிட்டது என்று அர்த்தம் அதற்குப்பிறகு குணப்படுத்துவது என்பது முடியாத விசயம்.

எனவே செல்லப்பிராணிகள் வளர்க்கும் சொந்தங்களே
நாயைப் பிள்ளைகள் போல வளர்த்து வாருங்கள்.
அவற்றுக்கு நல்ல உணவு இடம் கூடவே வெர்ட்டினரி மருத்துவரிடம் சிகிச்சை கூடவே முறையான ரேபிஸ் உள்ளிட்ட நோய்களுக்கு தடுப்பூசி வழங்கிடவும்.
செல்ல நாய்/பூனை எப்போதும் உங்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டும். வெளியே சுற்றித்திரிந்தால் வெறி நாய் அதைக்கடித்து அதற்கும் ரேபிஸ் வந்து வீட்டில் உள்ள மனிதர்களுக்கும் பரப்பும் வாய்ப்பு உண்டு.
நாய்களை செல்லமாகவே வளர்த்தாலும் அவற்றை வாயோடுவாய் முத்தம் கொடுப்பது. மனிதர்களின் வாய் பகுதியை நக்க அனுமதிப்பது ஆபத்து.
மீறி நாய்/பூனை கடித்தாலோ பிராண்டினாலோ உடனே அரசு மருத்துவமனைக்கு சென்று ரேபிஸ் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளவும்
காரணம் அறிகுறிகள் தோன்றிய பின் ரேபிஸ் நோய்க்கு மரணம் மட்டுமே தீர்வு.
ரேபிஸ் நோயால் ஒரு செல்ல நாயோ/பூனையோ தாக்குண்டு அதை வளர்க்கும் மனிதரின் உயிரோ பறிபோய் விடக்கூடாது என்ற நோக்கில் இந்தக் கட்டுரை தெளிவுபடுத்துகிறது.
Dr.A.B.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்





ரேபிஸ் நோயின் அறிகுறிகள் யாது???


Comments are closed, but trackbacks and pingbacks are open.