சாட் ஜிபிடி – சுய மருத்துவம் : மன நோயாளியாக மாற்றிய விபரீதம் !
சுய மருத்துவம் செய்து கொள்ள ஆர்டிஃபிசியல் இண்டெலிஜெண்ஸ் / சேட் ஜிபிடி போன்றவற்றை நம்பலாமா ????
நம்பக்கூடாது அது ஆபத்து என்கிறது சமீபத்தில் ஆனல்ஸ் ஆஃப் இண்டர்னல் மெடிசின் (Annals of Internal Medicine) எனும் பிரசித்தி பெற்ற மருத்துவ ஆய்வுகளை பிரசுரிக்கும் மருத்துவ இதழில் ஒரு முக்கியமான நோய்குறி வரலாறு.
நடந்தது என்ன வாங்க பார்க்கலாம்…
அறுபது வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் எமர்ஜென்சி டிபார்ட்மெண்ட்டுக்கு அவரது உறவினர்களுடன் வருகிறார்.
அவர் செய்த முதல் கம்ப்ளய்ண்ட் “எனது பக்கத்து வீட்டுக்காரர் எனக்கு விஷம் வைத்துக் கொள்ளப் பார்க்கிறார்” என்றார்.
அவர் அட்மிட் ஆன முதல் 24 மணிநேரங்களும் தன்னிலை மறந்து வெறித்தனமாக கத்துவதும் பிதற்றுவதும் அதீத சந்தேகம் கொள்வதும் யாரையும் நம்பாமல் இருப்பதும் ( PARANOIA) அடுத்தவரை அடிக்கப் பாய்வதும் எமர்ஜென்சி வார்டை விட்டு தப்பி ஓடப்பார்ப்பதும் என இருந்துள்ளார்.
அதிகமான தாகம் எடுத்தாலும் அவருக்கு தண்ணீர் வழங்கப்படும் போது அதில் விஷம் கலந்திருக்குமோ என்று சந்தேகித்துப் பருகாமல் தவிர்த்து வந்தார்.
அவருக்கு இல்லாத ஏதேதோ குரல்களும் (AUDITORY HALLUCINATIONS) கேட்கத் துவங்க இல்லாத விஷயங்களைப் பார்த்து அச்சப்பட்டுக் கொண்டும்( VISUAL HALLUCINATIONS) இருந்தார்.

இவ்வாறு தன்னிலை மறந்து மாறுபட்ட மனநிலையுடன் இருக்கும் நிலை – சைக்கோசிஸ் ( PYSCHOSIS) எனப்படும்.
உடனடியாக மனநல சிறப்பு மருத்துவ நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அவரை அமைதிப்படுத்தும் சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
அவரிடம் ஏதாவது மருந்துகள்/ சத்துகளை கூட்டும் சப்ளிமெண்ட்கள் உட்கொள்கிறீர்களா? என்று கேட்கப்பட்டதற்கு “இல்லை” என்றே பதில் கூறினார்.
அவரது இதயத்துடிப்பு சுவாசம் நாடித்துடிப்பு மத்திய நரம்பு மண்டல செயல்பாடுகள் அனைத்துமே நார்மலாக இருந்தன.
இவ்வாறு உயிர் வாழத் தேவையான இயக்கங்கள் அனைத்தும் நார்மலாக இருக்க “மனநல பாதிப்பு” ஏற்பட்டுள்ளது எதனால் என்பதை அறிய ரத்தப் பரிசோதனை முடிவுகள் கோரப்பட்டன.
அதில் க்ளோரைடு அளவுகள் நார்மலை விட அதிகமாக இருந்தன. பாஸ்பேட் அளவுகள் குறைவாக இருந்தன. சோடியம் பொட்டாசியம் ( நேர் மின் அயனிகள் – CATIONS) அளவுகளை விட க்ளோரைடு பைகார்பனேட் ( எதிர் மின் அயனிகள் – ANIONS) அளவுகள் அதிகமாக இருந்தன.
இது நிச்சயம் ஏதோ ஒரு விஷத்தன்மையில் தான் இருக்கும் என மருத்துவர்கள் கண்டறிந்து, விஷத்தன்மை சிகிச்சை அளிக்கும் மருத்துவக் குழு அழைக்கப்பட்டது.
அவர்களின் விசாரணையில் மருத்துவப் பயனாளியிடம் இருந்து பெற்ற விஷயங்கள் மருத்துவக் குழுவை திடுக்கிடச் செய்தது.
கடந்த சில மாதங்களாகவே உணவு முறை சார்ந்து பல பரிசோதனைகளைச் செய்து வந்துள்ளார். வீட்டிலேயே குடிக்கும் தண்ணீரை காய்ச்சி வடிக்கும் டிஸ்டில்லேசன் முறையைச் செய்து பருகி வந்துள்ளார்.
பால் பொருட்கள் கூட உட்கொள்ளாமல் இருக்கும் தீவிர மரக்கறி உணவு முறையில் சில மாதங்கள் இருந்துள்ளார்.
இதனால் அவரது ரத்த மாதிரியில் விட்டமின் பி12, விட்டமின் சி, ஃபோலிக் அமிலம் ஆகியவை மிகக்குறைவாக இருந்தன.
இதனுடன் இவருக்கு
– சமீபத்தில் உருவான முகப்பருக்கள்
– செர்ரி ஆஞ்சியோமாஸ் (குறு ரத்த நாள கட்டிகள்)
– அதீத சோர்வு
– தூக்கமின்மை
– நடையில் தள்ளாட்டம்
– அதிகமாக தண்ணீர் பருகும் தன்மை
ஆகியன இருந்து வந்துள்ளது. இது எதனால் என்று விசாரித்ததில்,
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இண்டர்நெட்டில் சமையல் உப்பு மூலம் ஏற்படும் தீமைகள் குறித்து பல கட்டுரைகளை வாசித்து வந்துள்ளார். சோடியம் அளவுகளைக் குறைத்தால் நன்மைகள் ஏற்படும் என்றும் பல கட்டுரைகளை வாசித்துள்ளார்.
இதனால் உந்தப்பட்டு, தான் உபயோகித்து வரும் சமையல் உப்புக்கு ( சோடியம் குளோரைடு) மாற்றாக வேறு உப்பை உபயோகிக்க வேண்டும் என்று சிந்தித்துள்ளார்.
தனது யோசனையை சேட் ஜிபிடி (Chat GPT) 3.5 அல்லது 4 எனும் செயற்கை நுண்ணறிவு மூலம் செயல்படும் உரையாடல் பாணியில் கருத்துகளைத் தெரிவிக்கும் செயலியில் பதிவு செய்துள்ளார்.
“சமையல் உப்பான சோடியம் குளோரைடில் குளோரைடுக்கு பதிலாக எந்த உப்பை பயன்படுத்தலாம்” என்று இவர் கேட்டதற்கு
சேட் ஜிபிடி ” குளோரைடுக்கு பதிலாக ப்ரோமைடு பயன்படுத்தலாம் என்று கூறிவிட்டு கூடவே ஆனால் அதை எங்கே பயன்படுத்துகிறோம் ( CONTEXT) என்பதைப் பொருத்து பயன்படுத்த வேண்டும்” என்று கூறியுள்ளது.
இதையே மருத்துவர்கள் சோதித்ததிலும் சேட் ஜிபிடி 3.5 செயலி இதே போன்று க்ளோரைடுக்கு பதிலாக எந்த உப்பை சேர்க்கலாம்? என்ற கேள்விக்கு, விடையில் ப்ரோமைடும் இடம்பெற்றிருந்ததை பதிவு செய்கின்றனர்.
தற்போதைய சேட் ஜிபிடி 5 இல் நான் கேள்வி கேட்ட போது அதிலும் சோடியம் சிட்ரேட்/ அசிடேட் போன்ற உப்புகளுடன் கடைசியாக ப்ரோமைடு அரிதாக உபயோகப்படுத்தப்படுகிறது என்று பதில் கூறியிருக்கிறது. ஆனால் அதனுடன் சில பத்திகள் தள்ளி ப்ரோமைடை சேர்ப்பதற்கு முன்னால் அதன் நச்சுத்தன்மை குறித்து தெரிந்து கொண்டு நன்றாக யோசித்து விட்டு சேருங்கள் என்று அறிவுரை கூறியிருக்கிறது.
இப்போது , பாதிக்கப்பட்ட இந்த மருத்துவப் பயனாளிக்கு வந்திருப்பது “ப்ரோமிசம்” (BROMISM) எனும் ப்ரோமைடு நச்சுத் தன்மை சார்ந்த நோயாகும் என்பது தெரிந்து விட்டது.
அவரது ரத்தத்தில் ப்ரோமைடு அளவுகள் 1700 மில்லிகிராம் /லிட்டர் என்று இருந்தன . நார்மலாக இருக்க வேண்டிய அளவு வெறும் 0.9 முதல் 7.3 மில்லிகிராம் / லிட்டர் மட்டுமே.
அவருக்குரிய சிகிச்சை வழங்கப்பட்டு நல்ல நிலையில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதில் இருந்து நாம் அறிய வேண்டிய பாடம் தான் என்ன?
சுய மருத்துவம் ஆபத்தானது. சேட் ஜிபிடி உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு செயலிகளை உபயோகப்படுத்தி உங்களது அறிகுறிகளைக் கூறும் போது அவை வழங்கும் மருத்துவ தகவல்கள் முழுவதும் சரியாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
(தவறாகவும் இருக்கலாம் என்று அதுவே கூறிவிடுகிறது. கூடவே அதன் செயல் திட்ட அதிகாரியும் சேட் ஜிபிடி தரும் தகவல்களை அப்படியே நம்பாதீர்கள் என்றும் கூறியிருக்கிறார்).
மேலும் , மருத்துவர் போல செயற்கை நுண்ணறிவானது ஒரு போதும் உங்களது அறிகுறிகள் , நீங்கள் கூறும் விஷயங்கள் , கூறாமல் விட்ட விஷயங்கள் , உங்களது நோய் வரலாறு, நீங்கள் எடுத்த மருந்துகள் உள்ளிட்ட பலவற்றைப் பற்றி கேள்வி கேட்டு , மேலும் ரத்தப் பரிசோதனை முடிவுகளுடன் பல்வேறு நோய் சார்ந்த விஷயங்களை அவரது அனுபவ அறிவு கொண்டு தீர ஆராய்ந்து சிந்தித்து முடிவு எடுப்பார். இதை CRITICAL THINKING என்போம்.
ஆனால் செயற்கை நுண்ணறிவு என்பது அவ்வாறு செயல்படுவதில்லை. அது நாம் கேட்கும் கேள்விகளுக்கு ஏற்றவாறு விடை கூறவே பழக்கப்பட்டுள்ளது.
கேள்விகளைத் தவறாகக் கேட்டால் முற்றிலும் தவறான விடைகளை அளிக்கும். கூடவே எதிர் கேள்விகளை மருத்துவர்கள் போன்று சிந்தித்து கேட்கும் தன்மை அதற்குக் கிடையாது.
என்னென்ன தகவல்கள் அதற்கு வழங்கப்பட்டனவோ அதைக் கொண்டே அது முடிவெடுக்கும் என்பதால் தவறான முடிவுகளை எடுக்கவும் வாய்ப்பு உள்ளது.

இதன் காரணமாக தவறான கருத்துகள், தகவல்கள் செயற்கை நுண்ணறிவு செயலிகளால் பரவும் வாய்ப்பு உள்ளது. தயவு கூர்ந்து
மருத்துவம் பயின்று – பல மருத்துவப் பயனாளிகளுக்குச் சிகிச்சை அளித்து அனுபவம் பெற்ற மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுவதே மருத்துவப் பயனாளிகளுக்கு நல்லது.
மனிதனைப் போன்று சிந்திக்க நாம் கற்றுக் கொடுத்து உருவாக்கியவையே செயற்கை நுண்ணறிவு அவற்றால் ஈவு – இரக்கம் கொண்ட வலி இன்பத்தை அனுபவிக்கக் கூடிய நன்மை தீமைகளை பகுத்தாராயக்கூடிய கடந்த காலம் நிகழ் காலம் எதிர்காலம் ஆகிய மூன்று குறித்தும் சிந்தித்தரியக்கூடிய மனிதனாக ஒருபோதும் ஆக முடியாது.
அறிவியலினால் கிடைக்கும் நன்மைகளை சரியான முறையில் பயன்படுத்துவோமாக..
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்