”பெண்களிடமும் சாதி வன்மம் இருக்கு” -’காயல்’ சினிமாவில் உண்மை சொல்லும் தமயந்தி!
‘ஜே ஸ்டுடியோஸ்’ ஜேசு சுந்தரமாறன் தயாரிப்பில், பிரபல எழுத்தாளர் தமயந்தி இயக்குனராக அறிமுகமாகும் படம் ‘காயல்’. முழுக்க முழுக்க இராமேஸ்வரம், புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு விரைவில் திரைக்கு வரும் இப்படத்தில் லிங்கேஷ், அனுமோல், ஸ்வாகதா கிருஷ்ணன், காயத்ரி, ரமேஷ் திலக் உட்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் ஒளிப்பதிவு : கார்த்திக் சுப்பிரமணியம், இசை : ஜஸ்டின் கெனன்யா, எடிட்டிங் : பிரவீன், பி.ஆர்.ஓ: குணா.
அமெரிக்காவில் வசிக்கும் தமிழரான ஜேசு சுந்தரமாறன், அங்கே உள்ள திரைப்படக் கல்லூரியில் தயாரிப்பு தொடர்பான டிப்ளமோ முடித்துள்ளார். அதன் பின் சில குறும்படங்களையும் மினி மியூசிக் ஆல்பம் ஒன்றையும் தயாரித்து இயக்கியுள்ளார். எழுத்தாளர்கள், ஓவியர்கள், இசைக் கலைஞர்கள், சிற்பக்கலை வல்லுனர்கள் மீது மிகுந்த மரியாதை கொண்ட ஜேசு, எழுத்தாளர் தமயந்தியின் கதைகளைப் படித்துவிட்டு, அவரிடம் அமெரிக்காவிலிருந்தபடி போனிலேயே கதை கேட்டு, பட்ஜெட்டையும் ஒதுக்கி, ஷூட்டிங் முடியும் வரை தமிழ்நாட்டிற்கு வராமல், இப்போது சென்னையில் ஆகஸ்ட்.10-ஆம் தேதி மாலை நடந்த படத்தின் டிரெய்லர் & பாடல்கள் வெளியீட்டு நிகழ்ச்சிக்குத் தான் சென்னைக்கு வந்துள்ளார்.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக தமயந்தி மீது அன்பு கொண்ட நண்பர்களான மாபெரும் ஓவியர் டிராட்ஸ்கி மருது, டைரக்டர்கள் மித்ரன் ஆர்.ஜவஹர், மீரா கதிரவன், அஜயன் பாலா, எழுத்தாளர் அதிஷா ஆகியோர் வந்திருந்தனர்.
விழாவில் பேசியவர்கள்…
தயாரிப்பாளர் ஜேசு சுந்தரமாறன்,
“எழுத்தாளர் தமயந்தியிடம் போனில் கதை கேட்டு, அவர் மெயிலில் அனுப்பிய ஸ்கிரிப்டை படித்து முடித்ததும் இந்தப் படத்தை நாம் தான் தயாரிக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டேன். அதனால் இப்படத்தில் நடித்த நடிகர்-நடிகைகள், பணியாற்றிய டெக்னீஷியன்கள் யாரையும் நான் நேரில் பார்த்ததில்லை. இந்த மேடையில் தான் அனைவரையும் பார்க்கிறேன். இந்த ‘காயல்’ தமிழ் மக்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என்று நம்புகிறேன். இதே போல நல்ல கதைகளை எங்களது ஜே ஸ்டுடியோ தொடர்ந்து தயாரிக்கும்”.
ஹீரோ லிங்கேஷ்,
“இந்தப் படம் எனது கேரியரில் மிக முக்கியமான படம். தமிழ் சினிமாவில் கண்டிப்பாக அதிர்வலைகளை ஏற்படுத்தும். தமயந்தி அக்கா வாழ்க்கையில் சந்தித்த உண்மைச் சம்பவங்கள் தான் இப்படம்”.
அனுமோல்,
“பெண்களின் மனங்களில் ஒளிந்திருக்கும் இன்னொரு உண்மையான முகத்தை, யாரும் சொல்லத் துணியாத பக்கத்தை காட்டியிருக்கிறார் தமயந்தி”.
இயக்குனர் தமயந்தி,
“என்னை நேரில் பார்க்காமல், போனில் கதை கேட்டு என் மீது நம்பிக்கை வைத்து படம் தயாரித்த ஜேசு அவர்களுக்கு மிகவும் நன்றி. என் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவங்கள் தான் இந்த ‘காயல்’. வன்முறை மற்றும் பிரிவினைவாத எண்ணங்கள், சிந்தனைகள், செயல்பாடுகள் எல்லாமே ஆண்கள் பக்கம் மட்டும் இருப்பதைப் போல தமிழ் சினிமாக்கள் வந்துள்ளன, வருகின்றன. ஆனால் உண்மையில் பெண்களிடம் தான் அந்த எண்ணங்களும் சிந்தனைகளும் மிகமிக அதிகம் இருக்கின்றது என்பது தான் உண்மை. அந்தக் கொடிய எண்ணங்களை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு போவதில் அந்த பெண்கள் தான். அப்படிப்பட்ட ஒருத்தியின் கதை தான் இந்த ‘காயல்’. எனக்கு உறுதுணையாக இருந்த அனைத்துக் கலைஞர்களுக்கும் நன்றி”.
— மதுரை மாறன்