டி20 லீக் தொடரில் பங்கேற்க யாஷ் தயாளுக்கு தடை விதித்த நிர்வாகம்!
உத்தரபிரதேச டி20 லீக் தொடரின் 3-வது சீசன் வரும் 17-ம் தேதி தொடங்க உள்ளது. இந்தத் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முக்கிய பந்துவீச்சாளராக இருந்த யாஷ் தயாள் விளையாடுவதாக இருந்தது, ஆனால் தற்போது தொடரில் பங்கேற்க வேகப்பந்து வீச்சாளரான யாஷ் தயாளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்திருந்த உத்தரபிரதேச டி20 லீக் நிர்வாகம் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கியதன் காரணமாக அவருக்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவித்திருக்கிறது.

உத்திரபிரதேசம் மாநிலம் காசியாபாத் நகரை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த ஜூன் மாதம் திருமண மோசடி புகார் அளித்திருந்தார். இந்த வழக்கில் யாஷ் தயாள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. எனினும், இந்த வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் யாஷ் தயாளை கைது செய்ய இடைக்கால தடை விதித்தது.

பின்னர் இந்த பரபரப்பு முடிவடைதற்குள் யாஷ் தயாள் மீது ஜெய்ப்பூரை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீராங்கனை ஒருவரும் பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார். அந்த புகாரில், யாஷ் தயாள் தன்னை கிரிக்கெட்டில் வளர்த்துவிடுவதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 2 ஆண்டுகளாக தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியிருந்தார். அந்த பெண் பாதிக்கப்பட்டபோது, அவருக்கு 17 வயதே ஆனதால், யாஷ் தயாள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் யாஷ் தயாளை ரூ.7 லட்சம் கொடுத்து கோரக்பூர் லயன்ஸ் அணியினர் ஏலத்தில் வாங்கியது குறிப்பிடத்தக்கது.
— மு. குபேரன்.