பத்திரிகையாளனின் டைரி குறிப்புகள்! ஓர் உறையில் இரண்டு கத்திகள்!
விகடன் தீபாவளி மலர் தயாரிப்பு என்றால் அலுவலகத்தில் ஒரே கலகலப்புதான். ’தீபாவளி மலருக்குப் பங்களிப்பு செய்வதற்கான ஐடியாக்களை சொல்லுங்கள்’ எனக் கேட்டு சர்க்குலர் ஒன்று, எல்லோருடைய மேசைக்கும் வந்து கையெழுத்து வாங்குவார்கள். யோசனையைச் சொல்லி அனுமதி வாங்கிய பிறகுதான் கட்டுரைகளை எழுத முடியும். அப்படி 2007 தீபாவளி மலருக்கு நான் சொன்ன யோசனைகளில் ஒன்று பொக்கிஷம். வி.ஐ.பி-கள் தங்களின் பொக்கிஷமாகப் பாதுகாத்து வைத்திருக்கும் பொருட்கள் பற்றிய ஐடியா. அன்றைக்கு ஆளுநராக இருந்த பர்னாலா, சசிகலாவின் கணவர் நடராசன் உள்ளிட்ட பிரபலங்கள் பாதுகாத்து வைத்திருக்கும் பொக்கிஷங்கள் பற்றி தீபாவளி மலரில் எழுதியிருந்தேன்.
‘ஓர் உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியாது’ என்று காலம் காலமாகச் சொல்லப்பட்டு வரும் சொல்லாடலைப் பொய்யாக்கிக் காட்டினார் நடராசன். அவர் பாதுகாத்து வைத்திருக்கும் பொக்கிஷத்தை என்னிடம் காட்டி, ‘’ஓர் உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியும்’’ என்றார். ’’போயஸ் கார்டனில் இருந்து நான் எடுத்து வந்த அபூர்வமான பொருள் இது. ஒரே உறையில் இரண்டு கத்திகள் கொண்ட அபூர்வப் பொருள்தான் அந்தப் பொக்கிஷம். அந்த உறையின் பக்கவாட்டில் இருக்கும் கிளிப்பை லாவகமாக நகர்த்தினால் இரண்டு பக்கத்திலும் இருந்து கத்திகளை வெளியே எடுக்க முடியும். அதனை என்னிடம் செய்தும் காட்டினார் நடராசன்.
என்னோடு வந்த போட்டோகிராபர் எம்.உசேன் அந்தக் கத்தியை வைத்து நடராசனை விதவிதமாகப் புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்தார். பக்கத்தில் நின்றிருந்த என்னை அழைத்த நடராசன், ’’நீங்களும் புகைப்படம் எடுத்துக் கொள்ளுங்கள்’’ எனச் சொல்லி உறையையும் ஒரு கத்தியையும் பிடித்துக் கொள்ளச் சொன்னார். இன்னொரு கத்தியை அவர் பிடித்துக் கொண்டு போஸ் கொடுத்தார். மூத்த பத்திரிகையாளரான நூருல்லா அவர்களும் அங்கே இருந்தார். இன்னொரு கையில் பிடித்திருந்த வாளில் நூருல்லா அவர்களையும் நடராசன் பற்றிக் கொள்ளச் சொன்னார். 2007 ஆகஸ்ட் 16-ம் தேதி உசேன் எடுத்த அபூர்வப் புகைப்படம்தான் இது!
இந்த அபூர்வக் கத்திக்குப் பின்னால் ஒரு கதையையும் நடராசன் சொன்னார். இந்தக் கத்தி ஜெயலலிதாவுக்குச் சொந்தமானது. அவர் சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த போது அவருக்குப் பரிசாகக் கிடைத்தது. நடராசன் போயஸ் கார்டனில் இருந்த காலத்தில், ‘ஓர் உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியாது’ என்று ஜெயலலிதா ஒரு சந்தர்ப்பத்தில் நடராசனிடம் சொன்னாராம். உடனே இந்தக் கத்தியை எடுத்துக்காட்டி, ‘ஓர் உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியும்’ என்று சொன்னார் நடராசன். பல ஆண்டுகளுக்கு முன்பு போயஸ் கார்டனில் இந்தக் கத்தி இருந்த நேரத்தில், அங்கே இருந்த சிறுவர்கள் ஆளுக்கு ஒரு பக்கம் கத்தியை உருவிக்கொண்டு சண்டை போட்டுக்கொண்டு இருந்தார்கள். எதுவும் விபரீதம் ஆகிவிடக்கூடாது என்பதற்காக அவர்களிடமிருந்து அந்தக் கத்திகளை பத்திரமாக வாங்கி வைத்திருந்தார் நடராசன். கார்டனில் இருந்து வெளியேறிய போது இந்தக் கத்தியையும் நடராசன் கையோடு எடுத்து வந்துவிட்டார். ’’அந்த இரண்டு சிறுவர்கள் வேறு யாருமல்ல திவாகரன், தினகரன்தான்.!” என்று சொன்னார் நடராசன்.
— பரகத்அலி – மூத்த பத்திரிகையாளர்