நியோமேக்ஸ் வழக்கு ! 161 ஸ்டேட்மெண்ட் ! நாள் பூரா காத்துக்கிடக்கும் கொடுமை !
நியோமேக்ஸ் – 161 ஸ்டேட்மெண்ட் ! நாள் பூரா காத்துக்கிடக்கும் கொடுமை ! அங்குசம்!
நியோமேக்ஸ் வழக்கில் இதுவரை 14567 புகார்கள் பெறப்பட்டிருக்கின்றன. அவற்றுள் சற்றேறக்குறைய 2000 பேருக்குத்தான், 161 ஸ்டேட்மெண்ட் எனப்படும் முதல்கட்ட விசாரணை அறிக்கையை பெற்றிருக்கிறார்கள். எஞ்சியுள்ள 12 ஆயிரம் பேரிடம் இருந்தும் 161 ஸ்டேட்மெண்ட் பெற்றாக வேண்டும். இதற்கு முன்னர், 161 ஸ்டேட்மெண்ட் பெற்றவர்களிடமிருந்து, அசல் ஆவணங்களை பெற்றாக வேண்டும்.
புதிய புகார்களை பதிவு செய்வது; ஏற்கெனவே, 161 ஸ்டேட்மெண்ட் பெற்றவர்களிடமிருந்து அசல் ஆவணங்களை பெறுவது; புதியதாக 161 ஸ்டேட்மெண்ட் பெறுவது ஆகிய மூன்று வகையான பணிகளையும் தற்போது மதுரை பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.
இதில், அசல் ஆவணங்களை ஒப்படைப்பதற்காக சம்பந்தபட்ட புகார்தாரரே நேரில் வர வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூரை சேர்ந்த பாதிக்கப்பட்ட முதலீட்டாளர் ஒருவர், சமீபத்தில் சர்க்கரை நோய் பாதிப்பில் ஒரு காலின் முழங்காலுக்கு கீழான பகுதியை அறுவை சிகிச்சை மேற்கொண்டு அகற்றியிருக்கும் நிலையில் அவரால் நேரில் ஆஜராக இயலாத நிலையை, அங்குசம் கவனத்திற்கு கொண்டு வந்தார்கள்.

நாமும் இந்த வழக்கின் விசாரணை அதிகாரி டி.எஸ்.பி. இம்மானுவேல் ராஜ்குமாரின் கவனத்திற்கு கொண்டு சென்று அவரது அனுமதியுடன், சம்பந்தபட்ட பாதிக்கப்பட்ட முதலீட்டாளரின் மகள் நேரில் ஒப்படைத்து சென்றிருக்கிறார். இதுபோன்ற தவிர்க்கவியலாத மருத்துவ காரணங்களுக்காக நேரில் செல்ல முடியாதவர்கள், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர் கணவனாக இருந்தால் மனைவி, மனைவியாக இருந்தால் கணவன் மற்றும் மகன் அல்லது மகள் ஆகியோரில் யாரேனும் ஒருவர் மேற்படி இரத்த உறவை உறுதிப்படுத்துவதற்குரிய சான்றுகளுடன் நேரில் சென்று அசல் ஆவணங்களை சமர்ப்பிக்கலாம்.

அடுத்து, புதியதாக 161 ஸ்டேட்மெண்ட் பதிவு செய்வதில் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருவதாக வேதனை தெரிவிக்கிறார்கள். காலையில் சென்றால் எல்லா நடைமுறைகளையும் முடிக்க மாலை ஆகிவிடுகிறது என்கிறார்கள். பொருளாதாரக்குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு எதிரில் உள்ள டி.டி.பி சென்டரில்தான் தட்டச்சு செய்து வர சொல்லி அனுப்பி வைக்கப்படுவதாகவும்; அங்கே ஏற்கெனவே கூட்டம் அலைமோதுவதாகவும் ஆளுக்கு தகுந்தாற்போல, ரூபாய் 200 முதல் ரூ500 வரையில் வசூலிக்கிறார்கள் என்றும் புகார் தெரிவிக்கிறார்கள். இதற்கு மாற்று ஏற்பாடாக, பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசு அலுவலகத்திலேயே தற்காலிக அடிப்படையில் ஊழியர்களை பணிக்கமர்த்தி 161 ஸ்டேட்மெண்ட் பதிவு செய்யும் பணியை மேற்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கையை பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தரப்பில் முன்வைக்கிறார்கள்.
இந்த விவகாரம் குறித்து பேசுகிறது, இந்த காணொளி …
நியோமேக்ஸ் – 161 ஸ்டேட்மெண்ட் | நாள் பூரா காத்துக்கிடக்கும் கொடுமை ! அங்குசம் !
— அங்குசம் புலனாய்வுக்குழு.