நீயெல்லாம் க்ளாஸ் எடுத்தா எனக்கு அட்மிஷன் வராது … நீதிமன்றத்துக்கே சவால் விடும் திருச்சி BIM !
நீயெல்லாம் க்ளாஸ் எடுத்தா, எனக்கு அட்மிசன் வராது … சாதிய ரீதியில் பழிவாங்கப்பட்ட பேராசிரியர் ! நீதிமன்றம் உத்தரவிட்டும் பணியில் சேர்க்க மறுக்கும் BIM !
சாதிய ரீதியில் இழிவுபடுத்தியும் சட்டவிரோதமான முறையிலும் தன்னை பழிவாங்கும் நோக்கத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் முறையிட்டு வென்றிருக்கிறார், BIM என்றழைக்கப்படும் பாரதிதாசன் மேலாண்மை நிறுவனத்தில் பணியாற்றிய பேராசிரியர் ராம்நாத்பாபு.
வீடியோ லிங்
”இரண்டு வருட சட்டப்போராட்டத்திற்கு பின்பு, நீதிபதிகள் ஜி.எஸ்.சுவாமிநாதன், ராஜசேகர் ஆகியோரை கொண்ட மதுரை உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவுக்கு பின்பும் என்னை மீண்டும் பணியில் சேர்க்க BIM நிர்வாகம் மறுக்கிறது. சாதிய காழ்ப்புணர்ச்சி அடிப்படையில் நான் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறேன். எனது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.” என்பதாக, வேதனை தெரிவிக்கிறார் அவர்.

”நீயெல்லாம் க்ளாஸ் எடுத்தா, எனக்கு அட்மிசன் வராது. நீயெல்லாம் டீச்சிங்கிற்கே இலாயக்கில்லாதவன்” என்று சாதிய ரீதியிலும் தனிப்பட்ட முறையிலும் பெருத்த அவமானத்திற்குள்ளாக்கி வேலையை விட்டு நீக்கினார்கள் என்கிறார், பேராசிரியர் ராம்நாத்பாபு.
ஒரு காலத்தில் திருச்சியின் அடையாளங்களுள் ஒன்றாக விளங்கிய உலகளவில் தலைசிறந்த ஆளுமைகளை உருவாக்கிய பாரம்பரியமான Bharathidasan university ‘school of excellence’ கல்வி நிறுவனமான, பாரதிதாசன் மேலாண்மை நிறுவனத்திற்கு (Bharathidasan Institute of Management – BIM) எதிராகத்தான் இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கிறார், பேராசிரியர் ராம்நாத்பாபு.
என்.ஐ.டி. திருச்சியில் பொறியியல் படிப்பை முடித்து; இதே பி.ஐ.எம். இல் எம்.பி.ஏ. படிப்பையும் நிறைவு செய்து பி.எச்.டி. பட்டத்தோடு தான் படித்த பி.ஐ.எம். இலேயே பேராசிரியராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்து முழுமையாக மூன்றாண்டு முடிவதற்குள்ளாகவே, ஒற்றை வரியில் வேலை நீக்கம் செய்து தூக்கி கடாசியிருக்கிறார்கள் பி.ஐ.எம். நிர்வாகத்தினர்.
உலகத்தரமான கல்வியை தொழிற்துறை அனுபவத்தோடு இணைந்து வழங்க வேண்டுமென்ற உயரிய நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட ஒரு முன்மாதிரி கல்வி நிறுவனம். 1984 இல் அப்போதைய, மத்திய நிதி அமைச்சராக இருந்த சி.சுப்ரமணியம் முன்முயற்சியில், அப்போதைய பாரதிதாசன் பல்கலை கழக துணைவேந்தர் மணிசுந்தரம் ஒத்துழைப்பில், (industrial institutional collaboration) தொழில்துறை நிறுவன ஒத்துழைப்பு என்ற ஏற்பாட்டின் அடிப்படையில் உருவான பாரம்பரியமான நிறுவனம்தான் பாரதிதாசன் மேலாண்மை நிறுவனம் (BIM).
ஆனால், தற்போதைய நிலையில் BIM நிர்வாகத்திற்கும் பாரதிதாசன் பல்கலை கழகத்திற்கும், பெல் நிறுவனத்துக்கும் சம்பந்தமே இல்லை என்றாகிவிட்டது. தன்னிச்சையான சுயேட்சையான தனியார் நிறுவனமாகவே மாறிவிட்டது BIM. பி.ஐ.எம். இன் 300 கோடிக்கும் அதிகமான சொத்தை ஆட்டையப்போடும் நோக்கில், முறைகேடான வகையில் ஒரு கும்பலின் ஆக்கிரமிப்பில் BIM மாறிவிட்டதாகவே குற்றஞ்சுமத்துகிறார்கள், முன்னாள் மாணவர்கள்.
இந்த பின்புலத்திலிருந்துதான், பேராசிரியர் ராம்நாத் பழிவாங்கப்பட்டிருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக அவரிடம் பேசினோம். “பி.ஐ.எம். கல்வி நிறுவனத்தின் கடந்த நாற்பது ஆண்டு கால வரலாற்றில் முதன் முதலாக தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த முதல் பேராசிரியராக பணியில் சேர்ந்தேன். அரசு உருவாக்கிய கல்லூரியில் அரசின் இடஒதுக்கீடு முறை இல்லை.
என்.ஐ.டி.யில் படித்து, இதே பி.ஐ.எம்.இல் எம்.பி.ஏ. முடித்து, பி.எச்.டி. நிறைவு செய்து ஆசிரியர் பணியில் 12 ஆண்டு கால அனுபவம் மற்றும் 13 ஆண்டுகால தொழில்துறை அனுபவம் உள்ள என்னை பார்த்து, “டீச்சிங்க்கு லாயக்கு இல்லாதவன் நீ” என்கிறார்கள். அதுவும் இரண்டு ஆண்டுகள் தகுதிகாண் பருவகாலம் (Probation period) முடிந்து மூன்று மாதம் கழித்து எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல் வெளியே போ என்றார்கள். மிகவும் அவமானப்படுத்தி அனுப்பினார்கள்.
எந்தவிதமான குற்றச்சாட்டும் இல்லாமல், காரணமே இல்லாமல் வேலையை விட்டு நீக்கிவிட்டார்களே என்ற மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு போட்டேன். எனது தரப்பு நியாயங்களை உணர்ந்துகொண்ட நீதிமன்றம் எனக்கு சாதகமாக உத்தரவு பிறப்பித்தது. எனது தரப்பு நியாயத்தை உணர்ந்து, களங்கம் நிறைந்த சட்டத்திற்கு புறம்பான பணிநீக்க உத்தரவு என்று குறிப்பிட்டே தடை உத்தரவு பிறப்பித்திருந்தார் நீதிபதி விக்டோரியா கௌரி. அதை வைத்து மீண்டும் பணியில் சேர்ந்தேன். 2023 ஜூலை முதல் டிசம்பர் வரையில் ஆறு மாத காலம் மீண்டும் பணியாற்றினேன். ஆனாலும், அவர்களுக்கு தெரிந்த அரசியல் லாபியை பயன்படுத்தி, தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக நீதிபதிகள் எஸ்.என்.சுப்ரமணியம் மற்றும் வி.லெட்சுமி நாராயணன் அமர்வில் மற்றொரு உத்தரவை வாங்கிக் கொண்டு வந்து மீண்டும் என்னை வெளியேற்றிவிட்டார்கள்.
வீடியோ லிங்
“இப்போதைய இயக்குநர் அசித்குமார் பர்மா மேற்கு வங்கத்தை சேர்ந்தவர். தன்னை சத்ரியன் என்பதாக பெருமையாக சொல்லிக்கொள்பவர். பலம் பொருந்தியவன். என் எதிரிகளை அழிப்பேன் என்பார். உனக்கு கிளாஸ் எடுக்க அனுமதித்தால், எனக்கு அட்மிசன் வராது, என்று அசிங்கப்படுத்தினார். எவன வேனாலும் போயி பாரு. உன்னால எதுவும் பன்ன முடியாது என்று சவால் விடுகிறார். ”
”இதில் வேடிக்கை என்னவென்றால், என்னை வேலைநீக்கம் செய்வதாக இவர்கள் கொடுத்துள்ள அறிவிப்பு என்பதாக நீதிமன்றத்தில் இரண்டு கடிதங்களை சமர்ப்பித்தார்கள். இரண்டுமே ஒரே எண்; ஒரே தேதி; ஒரே பொருளை கொண்டிருக்கிறது. ஆனால், உள்ளடக்கம் மட்டும் மாறியிருக்கிறது. ஒன்றில், இவருக்கு எதிராக மாணவர்கள் மற்றும் சக பேராசிரியர்களிடமிருந்து நிறைய புகார் வந்தது என்பதாகவும்; மற்றொன்றில், திருப்திகரமான முறையில் பணியாற்றவில்லை என்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள். நீதிபதியும் அந்தப்புகார்களை சமர்ப்பியுங்கள் என்றபோது, அவையெல்லாம் “இரகசியமானவை”’ என்று நீதிமன்றத்திற்கே பதில் சொன்னார்கள். இதில் இன்னொரு வேடிக்கையும் இருக்கிறது. எனக்கு எதிராக வழக்கறிஞராக அப்போது வாதிட்ட சதீஷ் பராசரன் இப்போது, பி.ஐ.எம்.இன் நிர்வாக குழுவின் ஒரு உறுப்பினராக மாறிவிட்டார் என்பது. இதிலிருந்தே, இவர்கள் ஒரு உள் நோக்கத்திலிருந்துதான் என்னை வெளியேற்றியிருக்கிறார்கள் என்பது தெரியவரும்.” என்கிறார் அவர்.
”இந்த பின்னணியிலிருந்துதான், தற்போது, சாதிய ரீதியிலும் இயற்கை நீதிக்கு முரணாக வகையிலும் நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்பதை அடிக்கோடிட்டு தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. சாதிய ரீதியில் நான் முன் வைத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து போலீசார் உரிய விசாரணை மேற்கொண்டு, முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் வழக்குப்பதிய வேண்டுமென்றும் சுட்டிக்காட்டியிருக்கிறது. தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தும்; அவற்றுக்கு எதிராக பிம் நிர்வாகத்தின் சார்பில் தொடர்ந்த மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தும் நீதிபதிகள் ஜி.எஸ்.சுவாமிநாதன், ராஜசேகர் ஆகியோரை கொண்ட மதுரை உயர்நீதிமன்ற அமர்வு என்னை மீண்டும் பணி வழங்க வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கிறது. சாதிய ரீதியில் பழிவாங்கும் விதத்தில் நடந்து கொண்ட விவகாரம் குறித்து போலீசார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்; அனைத்து உரிமைகளுடன், சலுகைகளுடன் பழையபடி பணியில் அமர்த்த வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறது. ஆனாலும், என்னை மீண்டும் பணியில் சேர்க்க மறுக்கிறார்கள். மூன்றாண்டு காலம் பிழைப்பு இல்லாமல் தடுமாறி வருகிறேன். நண்பர்களின் உதவியோடு நீதிமன்றத்தை நாடினேன். நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் என்னால் பணியில் சேர முடியவில்லை என்பதற்கான காரணம் பிறப்பால் நிர்ணயிக்கப்பட்ட ”சாதி”தான் தடையாக இருக்கிறது என்பதை என்னவென்று சொல்வது?” என உடைந்து பேசுகிறார், பேராசிரியர் ராம்நாத் பாபு.

நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் பேராசிரியர் ராம்நாத்தை பணியில் சேர்க்க மறுப்பது ஏன் என்ற கேள்வியோடு, BIM இயக்குநர் அசித்குமார் பர்மாவை அங்குசம் சார்பில் தொடர்பு கொண்டோம். “போர்டு மீட்டிங்கில் கலந்தாலோசித்துதான் இது குறித்து முடிவெடுக்க முடியும். ஆகஸ்டு-14 அன்று நடைபெற்ற போர்டு மீட்டிங்கில், இந்த விவகாரம் குறித்து பேச அவகாசம் இல்லை. நீதிமன்ற உத்தரவின் உண்மை நகல் இன்னும் கிடைக்கவில்லை. டிஜிட்டல் பிரதியை வைத்துதான் பரிசீலித்து வருகிறோம். இந்த விவகாரத்தில் எங்களுக்கு இன்னும் போதுமான புரிதலும், விளக்கங்களும், தெளிவும் தேவைப்படுகிறது. அதற்கு எங்களுக்கு போதுமான கால அவகாசம் தேவை. விரைவில் எங்களது முடிவை அறிவிப்போம்.” என்கிறார்.
உயர்நீதிமன்றத்தைவிட மேம்பட்ட அதிகாரம் கொண்ட அமைப்பாகவே, பி.ஐ.எம். நிர்வாகம் கருதிக்கொள்கிறதா? என்ற கேள்வி இங்கே இயல்பாக எழுகிறது. இந்த உத்தரவை பெறுவதற்கே மூன்றாண்டு சளையாத சட்டப்போராட்டத்தை நடத்தியிருக்கிறார், பேராசிரியர் ராம்நாத் பாபு. ஏற்கெனவே, வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் தன்னம்பிக்கையோடும், தன்முனைப்போடும் அவரால் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இவர்களை எதிர்த்து நிற்க முடியும்? இதற்கு மேலும், உச்சநீதிமன்றம் வரையிலும் சென்று வாதிடும் மன வலிமையும் பண வலிமையும் அற்றவராய், சோர்ந்து போயிருக்கிறார் அவர்.
இதன் வழியே, சாதிய சமூகத்தில் சாமானியனின் நிலை மட்டுமல்ல; உயர்கல்வி பயின்று சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருந்தாலும் இதுதான் கதி என்பதாக சமூகத்திற்கு விடுத்திருக்கும் செய்தி எவ்வளவு அருவருப்பானது?
– இளங்கதிர்
வீடியோ லிங்