சின்ன சின்ன அன்பில் தானே ஜீவன் இன்னும் இருக்கு! தபால்காரரின் நெகிழ்ச்சி செயல்!
பஞ்சாபைச் சேர்ந்தவர் குர்ப்ரீத் சிங், இவர் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் தபால்துறை ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் தபால் துறையில் டெலிவரி பிரிவில் இருப்பதால் வழக்கம் போல் ஒரு வீட்டிற்கு பார்சல் டெலிவரி செய்யச் சென்று இருக்கிறார். அப்போது திடீரென மழை பெய்ய தொடங்கியது, அந்த வீட்டின் உரிமையாளர் வீட்டின் வாசலின் அருகே துணிகள் காய வைத்திருப்பதை பார்த்திருக்கிறார்.
அந்நேரம் குர்ப்ரீத் எந்த தயக்கமும் இல்லாமல் அந்த துணிகளை எடுத்துக்கொண்டு, மழையில் நனையாமல் வீட்டிற்குள் வைத்திருக்கிறார். வெளியே சென்று இருந்த வீட்டின் உரிமையாளர் வெரிட்டி வாண்டல் வந்து பார்த்தபோது துணிகள் அனைத்தும் பத்திரமாக வீட்டில் வைக்கப்பட்டு இருப்பதை கண்டு ஆச்சரியப்பட்டு இருக்கிறார். உடனடியாக வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவை பார்த்த போது டெலிவரி பாயாக வந்த குர்ப்ரீத் சிங் மழை பெய்ததை கண்டு காய வைத்த துணிகளை எடுத்து வீட்டில் பாதுகாப்பாக வைத்ததை பார்த்திருக்கிறார்.
மேலும் உரிமையாளர் வண்டல் அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த செயலைப் பாராட்டி, பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா தனது சமூக வலைதளத்தில் “One in a million” என கூறி குர்ப்ரீத் சிங்கைப் பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
— மு. குபேரன்