அங்குசம் சேனலில் இணைய

நாட்டுப்புறக் கலைகளில் தலித் கலைஞர்களின் பண்பாடும் பங்களிப்பும் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

உலகப்பண்பாட்டைப்பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22-ஆம் தேதி உலக நாட்டுப்புறவியல் நாளாகக் கொண்டாடப்டுகிறது.உலகில் உள்ள ஒவ்வொரு இனமும் தனக்கென்று தனித்த பண்பாட்டுக்கூறுகளை, அடையாளங்களை பல்வேறு நிலைகளில் பாதுகாத்தும்பரவலாக்கம் செய்தும் வருகின்றன. அந்தந்த இனத்துக்குரியதனித்துவங்களைஅறிய, உணர்ந்துகொள்ள இந்த அடையாளங்களே அடிப்படையாக அமைகின்றன.தமிழர் வாழ்வில் அந்தந்த நிலம் சார்ந்தே மக்களின் வாழ்க்கையும் உழைப்பு சார்ந்த இசையும்பாடல்களும், பண்பாடும்தோன்றியுள்ளன.

நாட்டுப்புறக் கலைகளில் தலித்கலைஞர்களின் பண்பாடும் பங்களிப்பும் இல்லாமல் நாட்டுப்புறக்கலைகளே இல்லை எனலாம். அந்த அளவிற்கு நாட்டுப்புறக்கலைகளில் தலித்கலைகள் உற்பத்தியோடும் இனவாழ்வோடும் பின்னிப்பிணைந்து காட்சியளிக்கின்றது. நாட்டுப்புறக்கலைகள் இன்று பல வடிவங்களில் வெளிப்படுகின்றன. ஆட்டக்கலைகளில் பறையாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், தேவராட்டம், குறவன்குறத்திஆட்டம், கழிலாட்டம், கும்மிகோலாட்டம், இராசாராணி ஆட்டம் ஆகியன. பாட்டு வகைகளுள் கதைப்பாடல்கள், தாலாட்டுப்பாடல்கள், கிராமியப்பாடல்கள், ஒப்பாரிபாடல்கள், கானாப்பாடல்கள் ஆகியன. கூத்துவகைகளில் தெருக்கூத்து, கருப்பாயிகூத்து ஆகியன, இவற்றோடு நடனம், நாடகம் என்று பலவடிவங்களில் நாட்டுப்புறக்கலைகள் நிகழ்த்தப்படுகின்றன. இவை அனைத்திலும் தலித் கலைஞர்களின் பண்பாடும் பங்களிப்பும் நிறைந்து காணப்படுகின்றது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

தலித்கலைகள் ஆதிக்கச்சாதியினர் தலித்மக்களின் உழைப்பையும், உடைமையையும் பரித்துக்கொண்டது போல் அவர்களின் கலைகளையும், பண்பாட்டையும், பங்களிப்பையும் தனதாக்கிக்கொண்டனர். தலித்மக்களில் பெரும்பாலோர் உழைப்பாளிகள், கூலிவிவசாயிகள், கிராமப்புறங்களில் வசிப்பவர்கள், கலை ஆர்வம் உள்ளவர்கள். எனவே நாட்டுப்புறக்கலைகளில் தலித்மக்களின் பண்பாடும் பங்களிப்பும் கூடுதலாக இருந்திருக்கின்றது. “தலித்மக்களின் சக்தி, ஆளுமை அவர்தம் கலை இலக்கியங்களில் மறைந்து கிடக்கும் ஆற்றலாக இருக்கின்றது. இக்கலைகள் உற்பத்தி உறவுகளோடும், சமூக வாழ்க்கையோடும் பின்னிப்பிணைந்தவையாய் உள்ளன” என்று எழுத்தாளர் இரவிக்குமார் குறிப்பிடுகிறார். தலித் மக்களின் வாழ்வியலை நாட்டுப்புறக்கலைகள் படம் பிடித்துக்காட்டுகின்றன. மனிதன் பிறக்கின்றபோது அவனுடன் இணைந்தே கலையுணர்வும் பிறக்கின்றது. மனிதன் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்காகவே கலைகளைக் கற்றுக்கொண்டான். “வயல்வெளிச் சகதிகளில் கால்பதிந்து உழுபவர்கள், விதைப்பவர்கள், களையெடுப்பவர்கள், காடுகளில் மரம்வெட்டுபவர்கள், மீன்பிடிப்பவர்கள் போன்ற உழைக்கும் மக்களால் உருவானவையே நாட்டுப்புறக்கலைகள். உழைப்பினூடே எழும், உடல் அசைவுகளோடு பின்னிப்பிணைந்ததே நாட்டுப்புறப்பாடலும் ஆடலும் ஆகும்.” என்று சமுத்திரம் குறிப்பிடுகிறார்.

வாழ்வின் கூறுகளைக் கலைகள் பிரதிபலிக்கின்றன. கடின உழைப்பால் நாள் முழுவதும் உழைத்த தலித்மக்கள் உழைப்பின் களைப்பை மறக்கவும், கவலையைப் போக்கவும் இசைப்பது, பாடுவது, ஆடுவது போன்றவை அவர்களின் கலையாக ருந்துள்ளது. தாளம் தட்டக்கூடிய ற்களையும், மரப்பட்டைகளையும், சோளத்தட்டைகளையும் விலங்கின் தோல்களையும் பயன்படுத்தி தோல்கருவிகள், துளைக்கருவிகள், நரம்புக்கருவிகள் உள்ளிட்ட இசைக்கருவிகளைத் தயார் செய்துள்ளனர். நாட்டுப்புறப் பாடலுக்கும், தாளத்திற்கும் உதவும் தோல்கருவிகள், துளைக்கருவிகள், நரம்புக்கருவிகள் ஆகியன கலைப்படைப்புகளாகப் போற்றப்படுகின்றன. தலித்கலைகளில் நவரச உணர்வுகள் உண்டு. ஒடுக்கப்பட்ட மக்களின் கலகக்குரலாக வெளிப்படுத்தும் இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழையும் தன்னுள் அடக்கியவைதான் தலித்கலைகள் ஆகும்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

ஆட்டவகைகள்

குதிரை ஆட்டம், கரடி ஆட்டம், எருமை ஆட்டம், காளை ஆட்டம், புலி ஆட்டம், மான் ஆட்டம், ஆடு ஆட்டம், ஒநாய் ஆட்டம், மாடுபிடிஆட்டம், குரங்குஆட்டம், வாத்து ஆட்டம், ஆந்தை ஆட்டம், மயிலாட்டம், மரக்கால் ஆட்டம், பேய் ஆட்டம், பேயுறுவ ஆட்டம், பொய்க்கால்குதிரை ஆட்டம், கரகாட்டம், தப்பாட்டம், ஜிக்காட்டம், தேவராட்டம், கோலாட்டம்,ஒயிலாட்டம். கும்மி  ஆட்டம், ஒயில்கும்மி ஆட்டம், குறவன்குறத்தி ஆட்டம், மகுடாட்டம், காவடிஆட்டம், மீன் ட்டம், இலை ஆட்டம், கூடை ஆட்டம், பரவச ஆட்டம், மேபோல் ஆட்டம், ஆர்ப்பரிக்கும் ஆட்டம். அறுவடை  ஆட்டம், வேட்டை ஆட்டம், மான்கொம்பு ஆட்டம், பாம்பு ஆட்டம், குச்சி ஆட்டம், போர் ஆட்டம், வயிற்று ஆட்டம், வாள் ஆட்டம், சூரிய ஆட்டம், காற்கொட்டுதாள ஆட்டம். பொம்மலாட்டம் போன்று மேலும் பலவகை ஆட்டங்கள் நாட்டுப்புறக்கலைகளில் உள்ளன. இதில் ஒரு சிலவற்றைக் காணலாம்.

கரகாட்டம்

கரகத்தைத் தலையில் வைத்துக் கொண்டு ஆடுவது. இது ஒரு சடங்கு சார்ந்த கலையாகும். பின்னாளில் தொழிற்கலையாக ஆட்டக்கலையாக மாறியுள்ளது. முளைப்பாரி சடங்குகளின் போது மாரியம்மனுக்கு நீர்நிலைகளிலிருந்து ஆடவர் மட்டும் மண்குடங்களில் புனிதநீர் எடுத்து வந்து சாமியையும், சாமி அமைவிடத்தையும் சுத்தம் செய்து பூசை செய்வதற்குப் பயன்படுத்தும் பாத்திர மேகரகம்எ னப்படும். பயிர் செழித்து விவசாயத்தொழில் தழைத்தோங்க மழை வேண்டி கரகம் எடுத்து பெண் தெய்வங்களிடம் மன்றாடிக் கேட்பது கிராமங்களிலுள்ள பழக்க வழக்கங்களில் ஒன்றாகும்.

இதை அம்மன் கரகம், சக்திக்கரகம் என்று அழைப்பர். சக்தி கரகத்தை ஆண்கள் மட்டுமே எடுத்து வருவர். பெண்கள் எடுக்க முடியாத ஒருநிலை இருந்தது. பின்னாளில் இது இருபாலரும் ஆடும் கரகாட்டமாகப் பரிணமித்தது. தமிழகத்தில் தென்மாவட்டங்களில் மட்டுமே நிகழ்த்தப்படும் இந்த ஆட்டத்திற்கு கரகசெம்பு ஆட்டம், கரகக்கொடம், கரகாட்டம், கும்பாட்டம் என பல பெயர்கள் உண்டு. பக்தியுள்ளவரே கரகம் ஆட முடியும் என்பது கிடையாது. புவிஈர்ப்பின் தன்மையைப் புரிந்து கொண்டால், தலையில்கரகம் இருக்கும் போது சமநிலைப்படுத்திக் கொண்டு கரகாட்டம் ஆட முடியும். இக்கரகாட்டங்களில் தலித்கலைஞர்களின் பண்பாடும் பங்களிப்பும் நிறைந்து இருக்கும்.

ஒயிலாட்டம்

நாட்டுப்புறங்களில் ஆடும் ஒயில் கும்மியை ஒயிலாட்டம் என்கிறார்கள். தோல் கருவிகளில் எழுச்சியான ஓசையில்தான் ஆட்டம் சிறக்கிறது. “ஒயிலாகவும் கம்பீரமாகவும் அழகாக ஆடிக்கொண்டு வருவதை ஒயிலாட்டாம்” என்று துளசி குறிப்பிடுகிறார். ஒயிலாட்டம்தான் சிலம்பாட்டாம், தேவராட்டம், கரகாட்டம் போன்ற கலைகளுக்கு அடிப்படை ஆகும். கால்களில் சலங்கையும் கைகளில் கைக்குட்டையும் இருக்கும். மந்தநிலை, மத்திமநிலை, துரிதநிலை போன்ற நிலைகளில் ஆடுவர். இதுவும் போர்க்கலையிலிருந்து மருவி வந்த ஒரு ஆட்டமாகும்.

Feminaஒரு கையில் கேடயமும் மறுகையில் வாளும் பிடித்து மற்போர் புரிந்த வீரச்செயலை வெளிப்படுத்தும் வகையில் இருகைகளிலும் கைக்குட்டையைப் பிடித்து வாள்வீசுவதைப்போல தடுத்து மறிப்பதைப் போல ஆடும் ஆட்டமாகும். இதில் கால்வைப்பு முறையும், கைவீசும் முறையும், குதித்தலும், சுற்றித்துள்ளுதலும் ஆட்டத்திற்கு அடிப்படையாகும். பாடலைப்பாடிக்கொண்டே பின்னிசைக்கு ஏற்ப இயைந்து அசைந்தாடும் ‘ஒத்திசைவு’ இந்த ஆட்டத்தின் தனிச் சிறப்பாகும். பார்த்து இரசிப்பதற்கு அழகியல் தன்மையோடு காணப்படும் ஒயிலாட்டம், சிறுவர் முதல் பெரியோர் வரை ஆண் பெண் அனைவராலும் ஆடக்கூடியதாகும்.

கழிலாட்டம்

தென்தமிழகத்தின் கடற்கரையோரப் பகுதிகளான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இக்கழிலாட்டம் நிகழ்த்தப்படுகிறது. தொல்குடித்தமிழர்கள் தலித்மக்கள் தற்காப்புக் கலைகளில் ஆர்வமுடையவர்கள் எதிரிகளிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ள கத்தி, கம்பு, வாள், அரிவாள் , மான்கொம்பு, சுருள்வாள் போன்ற கருவிகளைக்கொண்டு இரவுநேரங்களில் பயிற்சி செய்வதை இன்றும் பல கிராமங்களில் பார்க்கலாம். அத்தகைய தொரு போர்க்கலையிலிருந்து தழுவிவந்ததுதான் கழிலாட்டம். இருகைகளிலும் இரு கம்புகளைக்கொண்டு அடித்தாடுகிற போது சிலம்பாட்டம் போல காணப்படும். இதில் பாம்புக்கழில், சதுரக்கழில், வட்டக்கழில், முக்குக்கழில், சிலுவைக்கழில், பறந்துகழில், பிரண்டுகழில், நெடுங்கழில், கும்மிக்கழில் என வட்டாரத்திற்கு வட்டாரம் வகைவகையான ஆட்டங்கள் இருக்கின்றன. இவ்வகையான ஆட்டங்களை கலைவிழா மேடைகளில், திருவிழாக்கொண்டாட்டங்களில் காணலாம்.

கும்மிகோலாட்டம்:

மாரியம்மன், காளியம்மன், செல்லியம்மன் போன்ற பெண் தெய்வங்களுக்கு விழா எடுக்கிறபோது முளைப்பாரி, பொங்கல்பானை உள்ளிட்டவை வட்டமாக வைத்து அதைச்சுற்றி இரவு நேரங்களில் பெண்களால் பாடிக்கொண்டே நிகழ்த்தப்படும் ஆட்டம் கும்மிகோலாட்டம் ஆகும்.

இராசாராணி ஆட்டம்

சமூகவாழ்வியல் சார்ந்த பிரச்சனைகளை கேலி, கிண்டல், சிரிப்பு போன்ற நவரச உணர்வுகளோடு அதே வேளைகளில் சமூகத்தின் மீதான கோபத்தை சூசகமாக வெளிப்படுத்தும் வித்தியாசமான கலை வடிவம் ஆகும். முகத்தில் அரிதாரம் பூசிக்கொண்டு, விதவிதமான உடைகள் அணிந்து காட்சிக்குக் காட்சி கதாபாத்திரத்தை மாற்றி ஆடல், பாடல், வசனம், பகடி என மாறிமாறி நையாண்டித்தனமான முறையில் அழுத்தமான நடப்பியல் பிரச்சனைகளை எளிமையாய் வெளிப்படுத்தி ஒரு முழு இரவை விடியவைக்கும் ஒரு அற்புதமான உயிரோட்டமான கலையாகும்.

பாட்டு வகைகள்

ஆட்ட வகைகளைப்போலவே பாட்டுகளும் பலவகையாக உள்ளன. கதைப்பாடல், வரலாற்றுக்கதைப்பாடல், புராணக்கதைப்பாடல், சமூகக்கதைப்பாடல், நாட்டுப்புறக்கதைப்பாடல், மரபுக்கதைப்பாடல், தொழிற்பாடல்உழவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, இறவைப்பாட்டு, ஓடப்பாட்டு, படகோட்டியபாட்டு, குழந்தைப்பாட்டு, தொட்டில்பாட்டு, தாலாட்டு, பக்திப்பாட்டு, காவடிப்பாட்டு, பூசாரிப்பாட்டு, பாவைப்பாட்டு, மறத்தியர்பாட்டு, குறத்தியர்பாட்டு, ஒப்பாரி, கையறுநிலை, இறங்கர்பாட்டு, ஆரத்திப்பாட்டு, நலுங்குப்பாட்டு, ஊஞ்சல்பாட்டு, விகடப்பாட்டு, புதிர்ப்பாட்டு, பழமொழிப்பாட்டு, கோமாளிப்பாட்டு, கப்பற்பாட்டு, வீரயுகப்பாட்டுபள்ளுப்பாட்டு, வண்ணான்பாட்டு, காதற்பாட்டு, உணர்ச்சிப்பாட்டு, வாய்மொழிவிளையாட்டுப்பாட்டு, கல்லுளிப்பாட்டு, கவணெறிப்பாட்டு அல்லது ஏலோலப்பாட்டு, ருசப்பாட்டு, பலகடைப்பாட்டு, கண்ணாலப்பாட்டு, வள்ளைப்பாட்டு, வைகறைப்பாட்டு, வில்லுப்பாட்டு போன்று மேலும் பலவகைகள் உள்ளன. இப்பாடல்களில் தாளம் இருக்கும், ஓசை இருக்கும், சொல் அழகு இருக்கும்.

தலித்மக்களிடம் பொதுவாக காணப்படும் சொத்துக்களில் ஒன்று பாடல். உழைப்பின் வாயிலாக உணர்ச்சி ஓசை கிளம்புவதை போன்றே உணர்ச்சி ஓசையின் மூலமாக பாட்டு எழுகின்றது. நாட்டுப்புறத் தொழில் வகைகள் பலவாக இருக்கும்போது நாட்டுப்புறப்பாடல் இசை வகைகளும் பலவாக இருக்கின்றன. இழப்பதற்கு எதுவுமின்றி அனைத்தையும் இழந்த அவர்களுடைய வாழ்க்கையைப் போலவே அவர்களுடைய பாடல்களும் சோகத்தையும், கோபத்தையும் சுமந்து கொண்டு நிற்கின்றன. சீரழிவு சினிமாப்பாடல்களுக்கு மத்தியில், இரட்டை அர்த்தங்களோடு வக்கிற புத்தியில் வரிகளை எழுதி பிழைப்பு நடத்தும் கவிஞர்கள் மத்தியில், எளிமையான சந்தத்தில், அழகான கருத்தை எண்ணற்ற பாடல்களாகப் படைத்துள்ளனர்.

Nadhaswaram Naiyandi Melam - video Dailymotionதெம்மாங்கு, நையாண்டி, சிந்து, தாலாட்டு, ஒப்பாரி, நலுங்கு, ஆரத்தி போன்ற இராக அமைப்புகளின் கீழ் தொழிற்பாடல், நடவுப்பாடல், உழவுப்பாடல், ஏற்ற இறவைப்பாடல், வண்டியோட்டிப்பாடல், எசப்பாட்டு, மாரடிப்பாடல், காவடிப்பாடல், கும்மிப்பாடல், ஒயில்பாடல்கதைப்பாடல், விடுகதைப்பாடல் என ஏராளமான பாடல்களை ஒவ்வொரு சூழலுக்கும் பொருந்தி வருகின்ற வகையில் பாடியுள்ளார்கள். இதில் கதைப்பாடல் வழியே சமூகத்தில் நடந்த அவலங்களையும், துன்ப நிகழ்வுகளையும் வரலாற்றுச் செய்திகளாகப் பதிவு செய்துள்ளார்கள்.

தாலாட்டுப்பாடல்

பிறந்த குழந்தைகளை உறங்கவைப்பதற்கும் அழுகையைநி றுத்துவதற்கும் உணர்ச்சி மிகுந்த வார்த்தைகளோடும் கற்பனையோடும் பாடப்படுவது தாலாட்டுப்பாடல்கள். பெண்களின் “வாழ்க்கைப் பயணத்தில் தாம் கடந்து வந்த நிலையில் ஏற்பட்ட உணர்வுகளான இன்பம், துன்பம், சோர்வு, வெற்றி, தோல்வி, மகிழ்ச்சி, வெறுமை, வடுக்கள் ஆகியவற்றைத் தொகுத்து தனது பட்டறிவினால் பாடுகின்ற பாடல் தாலாட்டு” என்று பறை இதழில் அருட்செல்வி குறிப்பிடுகின்றார். இதுதான் ஒரு குழந்தை தன் தாயின் வாயிலாக கேட்கும் முதல் வரலாற்றுப்பாடலாகிறது. இதுமண்மீதும், உழைப்பின்மீதும், பண்பாட்டின்மீதும் மதிப்பு ஏற்பட வழிவகுக்கின்றது. இதைப்பாடும் தாய்மார்களே பெண் கவிஞர்களாகத் திகழ்கிறார்கள்.

ஒப்பாரி

இறப்பு வீடுகளில் இறந்தவரின் வாழ்க்கை வரலாறு, பண்பு நலன்கள், வீரச்செயல்கள் ஆகியவற்றை எளிய மெட்டுகளில் பாடுவது ஒப்பாரி எனப்படும். உஞ்சை அரசனின் ‘துணிவு’என்னும் சிறுகதையில் யார் வீட்டில் சாவு என்றாலும், “ஒப்பாரி பாடும் மாணிக்கம் பொண்டாட்டி இனிமையாக  பாடியபோது அவருடன் சரோசா, பூவாயி, வேலாயி இன்னும் ஐந்தாறு பெண்கள் நின்று பாடுவர்” எப்படித்தான் இவர்களுக்கு இத்தனை ஒப்பாரிகளும் தெரியுமோ என்று குறிப்பிடுகிறார்.

கானாப்பாடல்

கானம் எனும் வடசொல்லுக்கு ‘பாட்டு’ என்று பொருள். இந்தி மொழியில் கானா என்றால் பாடுதல், பாட்டு எனப் பொருள்படும். நவீனமயமாதலினாலும், பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டமையாலும் வாழ்விழந்து நகரை நோக்கி வருகின்ற அடித்தட்டு மக்களால் பாடப்படும் தலித்பாடல்களே கானா பாடல்கள் எனப்படும். தலித் இசையை உள்வாங்கிய ஒரு புதிய கலையாக இன்று அவை விளங்கி வருகின்றது.சென்னையில் வசிக்கும் மக்களின் கலை, கலாச்சாரத்தின் ஒரு கூறுதான் கானாப்பாடல்கள். “1971இன் கணக்குப்படி சென்னையில் மட்டும் 1022 சேரிகள் இருப்பதாக ஓர் அறிக்கை சொல்கிறது. நகரச் சேரிகளில் 37% மக்கள் தலித் மக்களாகவே வாழுகின்றனர். இவர்களின் கலை கலாச்சாரத்தின் ஒரு கூறுதான் கானாப்பாடல்கள்” என்று எழுத்தாளர் ரவிக்குமார் குறிப்பிடுகிறார்.

கொரோனா காய்ச்சலடி... ஊரெல்லாம் பேசுதடி” - கானா பாடல் மூலம் செம்ம விழிப்புணர்வுகானாப்பாடல்கள் பாடுவதில் ஆண்கள்தான் முதன்மையில் இருக்கின்றனர். இதற்கு சிறிய அளவிலான தோற்கருவி அலுமினியக்கலன்கள், வாத்தியப்பெட்டி போன்ற இசைக்கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. சாவு வீடுகளில் ஒப்பாரிப்பாடலுடன் கானாப்படல்களையும் பாடி வருகின்றனர். ஒருவர் இறப்பு ஏற்பட்டால் அவரைச் சார்ந்த அனுபவங்கள்பற்றி அவர்கள்அறிந்த வட்டார மொழிகளிலே கற்பனையின்றிப்பாடல் புனைந்து சுயமாகப்பாடுகிறார்கள். துயரத்தின் காயலின்றி, மரணச்சுவடியின்றிப்பாட்டும் இசையுமாய் ‘கானா’ என்ற பெயரில் பாடி வருகின்றனர். இக்கானாப்பாடல்கள் எதிர்க்கலாச்சாரத்தை உள்ளடக்கியுள்ளவை. தெய்வம், மதம், சாதி, அரசியல், இலக்கியம், மனிதவாழ்வியல் போன்ற தளங்களை ஒட்டிய கருத்துகளைவிட தலித் மக்களின் உழைப்பு, தொழில் சார்ந்த வாழ்க்கை, சாதிக்கொடுமை, சமூக விமர்சனம் பற்றிய கருத்துக்களை மையப்படுத்தி பாடப்படுகின்றன.

It's the gold standard! Download Peppy Gold now and use my code for a sparkling start: 'PG*YVWWWW5225'

கதைப்பாட்டு

தலித்மக்களின் வாழ்க்கை அவலங்களையும் நலன்களையும், வீழ்ச்சிகளையும், ஏக்கங்களையும், உணர்வுகளையும், கலைகளையும் கதைப்பாடல்கள் வழியாக அறியலாம். இவற்றுள் காத்தவராயன், மதுரைவீரன், முத்துப்பட்டன் போன்றவர்களின் கதைகள் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

கூத்துவகைகள்

கிராமிய கலையில் தெருக்கூத்து பகுதி சார்ந்த நிலையில் நிகழ்த்தப்படுகிறது. சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் வண்ணான்கூத்து, கருப்பாயிகூத்து, தோற்பாவை நிழற்கூத்து நடத்தப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் கனியான்கூத்தும் நடத்தப்படுகிறது.

தெருக்கூத்து

ஆடல், பாடல், இசை போன்ற பலவற்றையும் ஒன்றிணைத்து மக்களைக் கவர்ந்திழுக்கக்கூடியது கூத்துக்கலை ஆகும். இதில் தலித்மக்களின் பேச்சும் பாட்டும் இடம் பெறுகின்றன. தெருக்கூத்து என்னும் சொல்லுக்கு “தெருவெளியில் நடக்கும் நாடகம் என்றாலும் நகைக்கத்தக்கது” என்ற பொருளைத் தருவதாகத் தமிழ்ப்பேரகராதி கூறுகின்றது. அரண்மனையில் உலா வந்த ஆதிக்கக் கலைக்கு நிகராகத் தெருக்கூத்து உருவாக்கப்பட்டுள்ளது. தெருக்கூத்து என்பது “நாடகமேடையோ, திரைக்காட்சிகளோ இல்லாமல் எளிய முறையில் தெருவில் திறந்தவெளிகளிலும் பெரும்பாலும் இரவுநேரங்களிலும் நடைபெறும்” எனக் கலைக் களஞ்சியம் கூறுகின்றது.

தெருக்கூத்து – பகுதி 4 – சொல்வனம் | இதழ் 348 | 10 ஆக 2025கூத்து நடத்துவோர் மிகுந்த உணர்வுடையவர்கள் சமூக அக்கறை கொண்டவர்கள். தெருக்கூத்தில் கதை, ஆட்டம், பாட்டு காட்சிப்பொருள் ஆகிய அம்சங்கள் அனைத்தும் இடம் பெறுகின்றன. கூத்து தலித்மக்களின் கலைகளுள் முக்கியமானது. தெருக்கூத்துக்குப்பாட்டு இன்றியமையாதது. ‘உரைநடையும் பாட்டும் கலந்த பண்ணத்தி’ பழையபாட்டை உள்ளடக்கியது. கோடு என்ற இசைக்கருவியால் இசைக்கூத்து நடத்தினர். சோழர்காலத்தில் கூத்துக்கலைஞர்களுக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது. சேலத்தில் தாழ்த்தப்பட்டவர்களே தெருக்கூத்து நடத்ததுகிறார்கள். “பெருங்காட்டூர் இராஜகோபால் என்பவர் தெருக்கூத்துக் கலைஞர்களில் மிகவும் புகழ் மிக்கவர். அவரே பெண்களுக்கான தெருக்கூத்து என்ற முயற்சியைக் கொண்டு வந்திருக்கிறார்” என்று முனைவர் ஸ்டீபன், ”பண்பாட்டு வேர்களைத்தேடி” என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். தலித்மக்களின் போர்குணமிக்க விழிப்பும், கலகமும், தன்னுரிமை முழக்கங்களும் தெருக்கூத்தில் வெளிப்படுத்தப்படுகின்றன.

பறையிசை

பறையிசை என்பது இன்று உலகம் முழுவதும் இசைக்கப்பட்டு வரும் மிகச்சிறந்த நாட்டுப்புற இசையாகும். இது மக்கள் வாழ்வியலில் தவிர்க்க முடியாத ஒரு கலையாகும். பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் சார்ந்த கல்வி நிறுவனங்களிலும் தவிர்க்க முடியாத கலையாக இருந்து வருகின்றது. கி.பி.4ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் இருக்கும் பெரியகோயில்களிலிருந்து சிறிய கோயில்கள் வரை இறைவழிபாட்டில் பறையிசைக்கருவியை ஒலிஎழுப்பி இறைவழிபாடு செய்துள்ளனர். இதற்கான ஆதாரங்கள் கல்வெட்டுகளிலிருந்தும், இலக்கியங்களிலிருந்தும் கிடைத்திருக்கின்றன.

தமிழ்நாட்டில் இக்கலைகளை உருவாக்கும் படைப்பாளிகளாக, நிகழ்த்தும் கலைஞர்களாக இருப்பது தலித்மக்களே என்ற நிலை இருந்தது. தற்போது இது மாற்றம் அடைந்துள்ளது. மனிதனுக்கும், மண்ணுக்கும் இடையிலான உறவை வெளிப்படுத்துவது இக்கலைகள். நீண்ட காலமாகவே ஓரங்கட்டப்பட்ட இக்கலைகள் இலக்கிய ஏடுகளிலும், வரலாற்றுச்சாசனங்களிலும், தீட்டுப்பட்டு விடும் என்பதால் பதிவு செய்யப்படாமல் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் பல்வேறு அடக்குமுறைகளையும், தடைகளையும் உடைத்துக்கொண்டு, ஆதிக்கத்தைத் தகர்த்தெறியும் எதிர்ப்புக் குரலாய் பறையிசை இன்று எல்லா அரங்குகளிலும் தடம் பதித்து ஒலித்து வருவது காலத்தின் கட்டாயமாகும்.

ஐவகை நிலத்தில் பறையிசை

1.குறிஞ்சி நிலத்தில் – வெறியாட்டுப்பறை,

2.முல்லை நிலத்தில் – ஏறு கோட்பறை,தொண்டகப்பறை,

3.மருத நிலத்தில் – நெல்லறிபறை,

4.நெய்தல் நிலத்தில் – நாவாய்ப்பறை

5.பாலை நிலத்தில் -ஆறலைப்பறை, சூறை கொண்டபறை,

என்ற பெயர்களில் பறை சிறப்புப் பெற்று இருந்துள்ளது என்பதை இளம்பூரணார் வழியே அறிய முடிகின்றது. பறையிசை உழைக்கும் மக்களுக்குரிய ஆட்டக் கருவி, உலகிலேயே தாளக்கருவிகளின் சுதியை அதிகரிக்க நெருப்பைப் பயன்படுத்தும் ஒரே கருவி பறை மட்டும் தான். அக்காலத்தில் ஐவகை நிலங்களிலும் பறையிசைப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இலக்கியங்களில் பறை என்பது எடுத்துரைத்தல் என்ற பொருளில் வந்துள்ளது. காவல்செய்வோர் அறைவது (காவற்பறை) குறவை ஆட்டத்திற்கு அறைவது (தொண்டகப்பறை) காளையைப் பிடிக்க அறைவது (ஏறுகோட்பறை) எனப் பல நிலைகளில் பறையைப் பயன்படுத்தியுள்ளனர். கோயில் விழாக்களிலும், அரசர்களின் விழாக்களிலும் யானைமீது அமர்ந்து பறையறைந்து அரசனைக் காக்க வேண்டுமென வள்ளுவர் வாழ்த்திப்படுவதாக இருக்கலாம் எனப் பறையிசைப்பற்றி தஞ்சை பல்கலைக்கழக வாழ்வியற் களஞ்சியம் குறிப்பிடுகின்றது. அரசவைகளிலும், போர்க்களங்களிலும் முழங்கியப் பறையொலி மெல்ல மெல்ல இடம்பெயர்ந்து சாதி இந்துக்களின் இறப்புச்சடங்குகளிலும், கோயில் விழாக்களிலும் அடிமைத்தொழிலாய் தஞ்சம் புகுந்தது. 70 வகையான தோலிசைக்கருவிகளை உருவாக்கி ஐந்திணைகளிலும் தொல்குடிச்சமூகமக்கள் வாழ்ந்துள்ளனர். அதில் 32 வகையான பறையிசைக் கருவிகள் வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு தேவைகளின் அடிப்படையில் பயன்படுத்தியுள்ளனர் என்றும் முனைவர் வளர்மதி குறிப்பிடுகிறார்.

தலித்கலைவடிவங்கள்

கரகாட்டம், குறவன் குறத்தியாட்டம், கும்மியாட்டம், கோலாட்டம், ராஜாராணியாட்டம், நையாண்டிமேளம், பறையாட்டம், பெரியமேளம் கணியாட்டம் போன்ற பல்வேறு ஆட்டங்கள் தலித்மக்களின் கலை வடிவங்களாகும். இவை அனைத்தும் அரங்குத் தன்மையும் நிகழ்கலைத் தன்மையும் உடையனவாகும். இக்கலைகளை பெரும்பாலும் தலித்மக்கள் நிகழ்த்துவதாகும். சிலவேளைகளில் தலித்மக்கள் வாசிக்கும் இசைக்கருவிகள் பிற்படுத்தப்பட்ட மக்களின் ஆடல்பாடல் போன்ற நிகழ்ச்சிகளுக்கும் வாசிக்கப்படுவதுண்டு. நாயக்கர்கள் நிகழ்த்தும் தேவர் ஆட்டத்துக்கு அருந்ததியர்களின் இசைக்கருவியாகிய உறுமியை வாசிப்பார்கள். சாமியாட்டம், ஒயிலாட்டம் போன்ற நிகழ்ச்சிகளுக்குப் பறையிசை மற்றும் நையாண்டி மேளம் வாசிக்கப்படுகின்றன. தலித் கலைவடிவங்கள் உடல் உழைப்புடைய உற்பத்தி முறையோடு உறவு கொண்டுள்ளது மட்டுமல்ல, கடுமையான உடல் அசைவுடையது. போர் குணமும் கொண்டது. வேகத்தையும் வீரியத்தையும் தட்டி எழுப்பக்கூடியது ஆகும்.

தலித்நாடகங்கள்

தலித்மக்களின் அன்றாடப் போராட்டங்களையும் ஊர்வலங்களையும், செயல்பாடுகளையும், விழிப்புணர்ச்சிகளையும், நாடக நிகழ்வுகளாக்கி அந்தச் சூழலுக்குக் கூடுதல் அர்த்தங்களை உண்டாக்குவது தலித் நாடகங்கள் ஆகும். தலித் பிரச்சனைகளைப் போராட்டங்களில் நிகழ்வாக்கி, மக்களுக்கு உணர்ந்துவது, தலித் அல்லாதோரால் தலித்துகள் இன்னும் மனிதத் தன்மையற்றவர்களாக நசுக்கப்படுகிறார்கள் என்பதை தலித் நாடகங்கள் வழி காணலாம். பொது அரங்குகளில் தலித்மக்களுக்குத் தடுப்புச்சுவர்களை எழுப்புவதன் விளைவாக அவர்களே நாடகங்களை உருவாக்கிச் சேரிகளில் நடத்தினர். அதில் அரிச்சந்தி ராமயான காண்டம், வள்ளி திருமணம், பவளக்கொடி, சத்தியவான் சாவித்திரி, மதுரைவீரன், காத்தவராயன், கட்டபொம்மன் நாடகங்கள் போன்றவை குறிப்பிடத்தகுந்தவையாகும்.

இந்நாடகங்களில் பயன்படுத்தப்பட்ட சாதியச் சொல்லாடல்களால் பல ஊர்களில் நிகழ்த்துகின்றபோதே கலவரங்கள் வெடித்துள்ளன. கிராமங்களைத்தவிர இந்நாடகங்களை நிகழ்த்தும் எண்ணிக்கைமெல்லமெல்லக்குறைந்தது. நகர்ப்புறங்களில் “நவீனம்” கருதி புறக்கணிக்கத் தொடங்கினர். முனைவர்கே.ஏ. குணசேகரன் ‘பலி ஆடுகள்’ என்ற தலித்நாடகத்தை நிகழ்த்தினர். இதில் பார்ப்பனீயத்தின் சதியால் தலித் பெண்கள் பலியாடுகளாகப் பலியிடப்படுவதை விளக்குகிறார். தொடர்ந்து ‘அறிகுறி’, ‘பாறையைப் பிளந்து கொண்டு’, ‘தொட்டில் தொடங்கி’, ‘ஏககலைவன்’, ‘தண்ணீர்’, ‘சேரியின்தாலாட்டு’, ‘ஓநாய்கள்’, ‘கட்டஅவுறு கயித்தஅவுறு’, ‘சாம்பன்’, ‘உக்கிரம்’ போன்ற தலித் நாடகங்கள் தலித் கலைவிழா மேடைகளிலும், பல்கலைகழ கங்களின் பொது மேடைகளிலும் அரங்ககேறியுள்ளன. தடுப்புச்சுவர்களை தகர்த்தெறிந்து கொண்டு தலித் நாடகங்கள் அரங்கேறியது குறிப்பிடத்தக்கதாகும்.

தலித்அரங்கம்

தலித் அரங்கியல் என்பது தீண்டமையால் பாதிக்கப்பட்ட தலித்மக்கள் தங்கள் பிரச்சனைகளை வெளிப்படுத்தவும், துணிந்து செயல்படவும் உரிய அரங்கமாக மாற்றுவது ஆகும். எழுதப்படாத தலித்மக்களின் வாழ்வியலையும் வரலாற்றையும் கொண்டது தலித்அரங்கம். தலித்மக்களின் பிரச்சனைகளை மையப்படுத்தி, நிகழ்வுகளை அமைத்து, பொதுமக்களின் பார்வைக்கு வழிவகுக்கும் தன்னமையுடன் நடைபெறும். தலித் விடுதலைக்கான செயல்பாட்டினைத் தன்னுள் அடக்கி, கலக அரங்கமாகச் செயல்படும். மண்ணுக்குரியதாகவும், மக்களுக்குரியதாகவும் பண்பட்டுத்தளத்தில் விவாத அரங்கமாகவும் அமையும்.

தலித்அரங்கின் தடைகள்

சாதியம், அடக்குமுறை, அரசாட்சி மாற்றம் மதமாற்றம் ஆகியவற்றொடு இணைந்து தலித்கலைகளில் தனித்தன்மைகள் இழந்துவிட்டன. “தேசியக் கலை விழாக்கள், சர்வதேசக் கலை விழாக்கள், தேசிய நாடகப்பள்ளி,  சாகித்ய அகாதமி, லலித்கலா அகாதமி” போன்ற நிறுவனங்களும் தலித் அரங்கியலின் தடைகளாக உள்ளன. தஞ்சாவூரில் இயங்கிவரும் தென்னகப் பண்பாட்டு மையம், வடநாட்டுப் பண்பாட்டு மையங்கள் உள்ளிட்ட நிறுவனங்கள் தலித்கலைகளைச் சுரண்டி கலப்புக் கலாச்சாரத்தையும், மொழிகலப்பையும் உருவாக்கியுள்ளன. இதனால் தலித்கலைகள் மதிப்பிழந்து வருகின்றது.

தலித்கலைகள் சமூகச்சிக்கல்களை உள்ளடக்கி மனித உறவின் முக்கியத்துவதையும் ஆதிக்க சாதியினரின் சாதிப் பாகுப்பாட்டால் ஏற்பட்ட தாக்கங்களையும் வெளிப்படுத்துகின்றன. தலித்கலைகள் மக்களைக் கவரக்கூடிவை, ஒடுக்கப்பட்ட மக்களின் கலைகளை விடுதலைக்கான கலைகளாக மாற்றி அரசியல்படுத்தவும் மக்களின் உணர்வோட்டத்தை வெளிப்படுத்தவும் செய்கிறது. நாட்டுப்புறக்கலைகள் அனைத்தும் தலித்மக்களின் கலைகளாகத்தான் இன்றைக்கும் காட்சியாளிக்கிறது. நாட்டுப்புறக் கலைகள் நாட்டார் தெய்வ வழிபாட்டை அடிப்படையாக கொண்டு உழைக்கும் மக்களின் வாழ்வியல் மற்றும் தொழில் சார்ந்த பண்புகளை வெளிப்படுத்துகின்றது.

நாட்டுப்புறக்கலைகள் தங்கள் வாழ்வியல்யதார்த்தங்களை உள்ளடக்கியிருக்கிறது. சமயம், பெரும் தெய்வங்கள், புராண இதிகாசதாக்கங்கள் தலித்கலைகளில் மிகமிக குறைவாகத்தான் பார்க்க முடியும். எனவே நாட்டுப்புறவியல் தன்மைகள் தலித்கலைகளில் மட்டுமே நிரம்பியுள்ளன. தலித்கலைகள் உற்பத்தியோடும் இனவாழ்வோடும் பின்னிப் பிணைந்திருக்கின்றன. அவ்வாறு தனித்தன்மையுடைய தலித்கலைகள் பல்வேறு படையெடுப்புகளாலும் குறிப்பாக ஆரியபடையெடுப்பால் வந்த வருணா சிரமகருத்தாக்கத்தால் சிதைக்கப்பட்டு இந்துசாதி சமூக மேலாதிக்கத்தாலும் அவர்கள் அடக்குமுறைகளாலும் ஓரம்கட்டப்பட்டு பல கலை வடிவங்களும் களவாடப்பட்டு இன்று அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்டுள்ளன. மேலும் சமீபகாலமாக தேசீய ஒருங்கிணைப்பு வெகுசன ஊடகம் என்ற போர்வையில் தலித்கலைகள் பிறகலைகளோடு கலக்கப்பட்டு வருகிறது. இதுதலித்கலைகளின் தனித்தன்மைக்கும், கருத்தாக்கத்துக்கும் ஆபத்து ஏற்படுத்தும். உழைப்பை சுரண்டிய ஆதிக்கவர்க்கத்தினர்  சிறு தெய்வங்களை உள்வாங்கிய இந்து மேலாதிக்க சாதியினர் தலித்கலைகளிலும் கைவைத்திருப்பது ஆபத்தானது. தலித்கலைகளின் பண்பாடும் பங்களிப்பும் உடல் உழைப்பின் உற்பத்தி முறையோடு தொடர்புடையது. அதைப்போன்று அக்கலைகள் கடுமையான உடல்அசைவுகள் கொண்டவை. பாடுவதோடும், ஆடுவதோடும் இசைக்கருவியை வாசித்துக்கொண்டு மூன்று கலைகளையும் ஒரே கலைஞர் ஆற்றுகின்ற அற்புதம் தலித்கலைகளுக்கு மட்டுமே உரியதாகும்.

 

 —   முனைவர் சீமான் இளையராஜா, கட்டுரையாளர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.