’ஆட்டி’ பட விழாவில் சீமானின் பேச்சு நாராசப் பேச்சு!
லட்சுமி கிரியேஷன்ஸ் பேனரில் இசக்கி கார்வண்ணன் தயாரித்திருக்கும் படம் ‘ஆட்டி’. குடும்பத்தலைவி, ஊர்த்தலைவி, பெண்குலதெய்வங்களைக் குறிக்கும் சொல் தான் ஆட்டி. இப்படத்தை ‘மேதகு பாகம்-1’, ‘சல்லியர்கள்’ படத்தை டைரக்ட் பண்ணிய தி.கிட்டு டைரக்ட் பண்ணியுள்ளார். கதையின் நாயகனாக இசக்கி கார்வண்ணனும் நாயகியாக ‘அயலி’ அபிநட்சத்திராவும் நடித்துள்ளனர். ‘எங்கள் குடியில் பெண்களே முதலாம்’ என்ற டேக்லைனுடன் வருகிறது ‘ஆட்டி’.

கடந்த வெள்ளிக்கிழமை இப்படத்தின் பாடல்கள் & டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேப்பில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக சீமான், ‘சாட்டை’ துரைமுருகன், எழுத்தாளர் சுகா, தயாரிப்பாளர் கசாலி, நடிகர் திருமுருகன், கார்ட்டூனிஸ்ட் பாலா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இசக்கி கார்வண்ணன் மூலம் சீமானின் நடபு கிடைத்தது குறித்து ரொம்பவே சிலாகித்துப் பேசிய டைரக்டர் தி.கிட்டு, பெண் குலதெய்வங்களை மையப்படுத்தி இந்த ‘ஆட்டி’யை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
திருமுருகன், சாட்டை துரைமுருகன், சுகா, கசாலி உள்ளிட்ட பலரும் தமிழ் சினிமாவை சீமான் தான் காப்பாற்ற வேண்டும் எனப் பேசி, சீமானிடமிருந்தும் அரங்கில் இருந்த சீமானின் தம்பிகளிடமிருந்தும் கைதட்டல்களை வாங்கினார்கள்.
படத்தில் நடித்ததை பெருமையாக நினைப்பதாக ஹீரோயின் அபிநட்சத்திரா சொன்னார்.
”தமிழ் சினிமாவில் பெரிய தடுப்புச் சுவராக ரெட் ஜெயண்ட் இருக்கு” என ஓவராக கொந்தளித்தார் இசக்கி கார்வண்ணன்.
கடைசியாக மைக் பிடித்த சீமான், படத்தைப் பற்றியும் டைரக்டர் கிட்டுவைப் பற்றியும் சில நிமிடங்கள் பேசிவிட்டு, தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரை சகட்டுமேனிக்கு நாராசமாகப் பேசினார். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் பொங்கிய சீமானின் பேச்சில் எம்.ஜி.ஆரைப் பற்றியோ, ஜெயலலிதாவைப் பற்றியோ பேசாமல் அமுக்கி வாசித்து விசுவாசத்தைக் காட்டினார் சீமான்.
–மதுரை மாறன்