ஆசிரியர் பணியில் கால் நூற்றாண்டு ! அனுபவங்களுக்கு அளவே இல்லை !
20.08.2001 முதல் 20.08.2025 …
அரசுப் பள்ளி ஆசிரியராக (இடைநிலை ஆசிரியர்) முதல் முதலில் ஒரு பள்ளிக்குள் நுழைந்து இன்றுடன் இருபத்தி நான்கு ஆண்டுகள் முடிந்து விட்டன. இருபத்தி அய்ந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். கால் நூற்றாண்டு என்பதை மிக நீண்ட பயணமாகவேக் கருதுகிறேன். சேலம் மாவட்டத்தில் செட்டிமாங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி தான் எனது முதல் அரசுப் பணி அனுபவத்தைக் கொடுத்த பள்ளி.
செட்டிமாங்குறிச்சி மேல்நிலைப்பள்ளி சாலை ஓரத்திலேயே பேருந்து நிறுத்தம் அருகே அமைந்திருக்கும் பெரிய பள்ளி. எனது இருபத்தி நான்கு வயதில் வேலை வாய்ப்பு அலுவலகம் வழியாகப் பெற்ற அரசுப் பணி ஆணையை எடுத்துக் கொண்டு ஒரு சனிக்கிழமை நாளன்று (18/08/2001) நான் பள்ளிக்குச் செல்ல, அன்று விடுமுறை என்று கூறி திங்கள் கிழமை வாங்க என்று தலைமை ஆசிரியர் கூறி விட்டதாக வாட்ச்மென் அண்ணா கூறினார். பக்கத்தில் இருந்த செட்டிமாங்குறிச்சி அம்மன் கோவிலுக்குச் சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பி வந்து விட்டேன். (அப்போது இரவுக் காவலர்கள் அரசுப் பள்ளிகளில் நிரந்தரப் பணியாளர்களாக இருந்த காலம்)
பிறகு திங்கட்கிழமை காலை 8.45 க்குச் சென்று பணியில் சேர, முதன்முதலாக வருகைப் பதிவேட்டில் என் பெயர் எழுதப்பட்டது.
அப்போது வகுப்பறை நிறைய மாணவர்கள் இருப்பார்கள்.எனது வகுப்பு 98 பேர் தமிழ்வழி வகுப்பு. ஆறாம் வகுப்புகள் அ, ஆ, இ என்று மூன்று பிரிவுகள் கொண்டதில், எனக்கு ஆறாம் வகுப்பு ‘அ ‘ பிரிவு. சீருடையாக காக்கி டிராயரும் வெள்ளைச் சட்டையும் போட்ட ஆண் குழந்தைகளும் அடர் நீலநிற பாவாடையும் வெள்ளை நிற மேல் சட்டையும் போட்ட சீருடை அணிந்த பெண் குழந்தைகளும் நிரம்பிய வகுப்பறை. அப்போது A, B, C என்றெல்லாம் ஆங்கிலத்தில் கூறாமல் அ, ஆ, இ பிரிவு என்றே கூறும் காலம். ( பயிற்று மொழி தமிழ் மட்டுமே).
அரசுப் பள்ளிகள் மட்டுமே பெரும்பான்மை இருந்த நாட்கள். தனியார் மயம் மெதுவாகத்தான் தலை காட்டிய காலம். பொதுக் கல்விமுறைக்கு முக்கியத்துவம் இருந்த காலம். கல்வி உரிமைச் சட்டம் இல்லாத காலம்.
EMIS வருகைப் பதிவு போடாத வருகைப் பதிவேட்டில் மட்டுமே மாணவர்கள் பெயர் எழுதி, பேர் கூப்பிட்டு, ‘உள்ளேன் அம்மா ‘ என்று கூறும் மாணவர்கள் இருந்த காலம். வாட்ஸ் அப் தொல்லை கிடையாது. கைப்பேசி/திறன்பேசி… ஒரு பேசியும் இல்லாத மகிழ்ச்சியான வகுப்பறைகள் எங்கள் வகுப்பறைகள். வகுப்பை நடத்த விடாமல் உடனே எமிஸ் அப்டேட் செய்ய வேண்டும் திருவிழா நடத்த வேண்டும் போட்டி நடத்த வேண்டும் என்ற எந்த நிர்ப்பந்தமும் இல்லாத வகுப்பறைகள் அவை. ஆசிரியர் மாணவர் மட்டுமே, கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் மட்டுமே நிறைந்த நாட்கள் அவை.
வருடத்திற்கு ஒருமுறை மட்டும் ஆண்டாய்வு வரும் முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் கல்வி அலுவலர்கள் ஆசிரியர்களை மரியாதையாக நடத்திய காலம். மாவட்ட ஆட்சியர் இன்னபிற வருவாய்த்துறை… போன்ற எந்தத் துறை அதாகாரிகளும் பள்ளிக்குள் வரும் அவசியம் இல்லாத நாட்கள். எங்கள் வகுப்பறைகளை கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை தலைமை ஆசிரியர் மட்டுமே பார்வையிட்டு பாராட்டிய அல்லது ஆலோசனைகள் வழங்கிய காலம்.
எனக்கு எனது முதல் தலைமை ஆசிரியர் திருமிகு இராஜேந்திரன் அவர்களை மறக்கவே முடியாது. எந்தத் தலைமை ஆசிரியரையும் மறக்க முடியாது தான். ஆனால் இவர் முதல் தலைமை ஆசிரியர் என்பதால் கூடுதல் சிறப்பு. முதல் முதலாக உடன் பயணித்த ஆசிரியர்கள் குணசேகரன், பழனிசாமி, ஜெயச்சித்ரா, கலைச்செல்வி, லட்சுமி பிரபா, சித்ரா, ஆலிஸ் லதா ராணி, அலுமிஷா பேகம், சாயிரா பானு…. இவர்களையும் மறக்க இயலவில்லை.
முதல் முதல் என்னுடன் பயணித்த மாணவர்கள் பட்டாளம்…. செங்கோட்டையன், பிரபுதேவா, கருப்பசாமி,சித்தையன், ஆனந்த லட்சுமி… இவர்களையும் மறந்துவிட முடியாது. சுதந்திரமான வகுப்பறை, ஆசிரியர் மாணவர் உரையாடி மகிழ்ந்து கதை பேசிய வகுப்பறைகள். இப்படித்தான் ஆரம்பித்தது எனது ஆரம்ப நாட்கள். இன்றும் பசுமையாக.,
இன்று வரை ஆயிரக்கணக்கான மாணவர்களைக் கடந்துவந்தாயிற்று. அனுபவங்களுக்கு அளவே இல்லை. முதல் நாளில் இருந்த அதே உற்சாகத்துடன் இன்று வரை பயணிக்கத் துணை நிற்கும் குழந்தைகளுக்கு அன்பு. ❤
எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன். இன்னும் பயணம் நீளம்…. உற்சாகமாக இரு… வாழ்த்துகள்🎉🎊
— உமா மகேஸ்வரி