அமர்க்களமான ஆரம்பம் ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ வி.வி.ஐ.பி.யின் ஆச்சர்ய எண்ட்ரி!
மனைவி ஆர்த்தியின் விவாகரத்து வழக்கு, ஒரு சினிமா கம்பெனி தொடுத்த கோர்ட் வழக்கு, ஈ.சி.ஆர்.ரோட்டில் உள்ள வீட்டை ஜப்தி செய்யப் போவதாக தனியார் வங்கி ஒன்றின் நோட்டீஸ் இதெல்லாம் சேர்ந்து வந்து தாக்கினாலும் சோர்ந்து போகவில்லை போல ரவி மோகன் [ ஜெயம் ரவி].
தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ ஐ சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள டிரேட் செண்டரில் ஆகஸ்ட்.26—ஆம் தேதி காலை அமர்க்களமாக தொடங்கினார் ரவிமோகன். இவரது மனசுக்குப் பிடித்த மிகவும் நெருங்கிய தோழியான பாடகி கெனிஷா தமிழ் எழுத்துக்கள் உள்ள சேலை காஸ்ட்யூமில் தனது வருங்காலம் ரவிமோகனுடன் சேர்ந்து விழாவுக்கு வந்து கொண்டிருந்த சினிமா பிரபலங்களை கைகூப்பி பணிந்து வணங்கி வரவேற்றார்.
ரவிமோகனின் நெருங்கிய சினிமா நண்பர்களான கார்த்தி, சிவகார்த்திகேயன், அதர்வா, எஸ்.ஜே.சூர்யா, யோகிபாபு கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ஷிவராஜ்குமார், ‘பராசக்தி’ இயக்குனர் சுதா கொங்கரா, கோபுரம் பிலிம்ஸ் அன்புச் செழியன், தனஞ்செயன், டைரக்டர்கள் ‘அயலான்’ ரவிக்குமார், பேரரசு உட்பட ஏராளமான சினிமா பிரபலங்கள் வந்து ரவிமோகனை ஆரத்தழுவி உச்சிமுகர்ந்து வாழ்த்தினார்கள். ’சந்தோஷ் சுப்பிரமணியம்’ படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த ஜெனிலியா, தனது கணவர் ரித்தேஷ் தேஷ்முக்குடன் வந்திருந்தார்.
இந்த சினிமா வி.ஐ.பி.க்களைவிட பெரிதும் ஆச்சர்யப்படுத்திய வி.வி.ஐ,பி. யார்னா தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருகமகன் சபரீசன் தான். சுமார் முக்கால் மணி நேரம் விழாவில் இருந்தார். ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ எம்பளத்தை ரவிமோகனின் தாயார் வரலட்சுமி ரிமோட்டை ஆன் பண்ண, பெரிய ஸ்க்ரீனில் பளிச்சிட்டது. இதற்கடுத்த சில நிமிடங்களில் விடை பெற்றார் சபரீசன்.
இதன் பின் மேடையில் இருந்த பிரம்மாண்ட பெருமாள் படத்தின் முன்பாக வைணவ முறைப்படி ஐயர்கள் மந்திரம் ஓத, தனது முதல் தயாரிப்பான ‘ப்ரோ கோட்’ படத்தின் ஸ்கிரிப்டை வைத்து பூஜை செய்தார் ரவிமோகன். படத்தின் டைரக்டர் கார்த்திக் யோகி, ஹீரோயின்கள் கெளரி ப்ரியா, மாளவிகா மனோஜ், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் படம் குறித்தும் ரவிமோகன் குறித்தும் பெருமிதமாக பேசினார்கள்.
இந்த நிகழ்வு முடிந்ததும் ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கத்தையும் தயாரிக்கப் போகும் படங்களைப் பற்றியும், நல்ல கண்டெண்ட் உள்ள படங்களை வாங்கி ரிலீஸ் பண்ணும் திட்டம் குறித்தும் சுருக்கமாக ரவிமோகன் பேசிய விஷுவல் காண்பிக்கப்பட்டது. இதைப் பார்த்து ரவிமோகனின் அண்ணனான டைரக்டர் மோகன் ராஜாவின் முகமெல்லாம் மலர்ச்சி, கண்களில் ஆனந்தக் கண்ணீர்.
அடுத்ததாக ரவிமோகன் முதல்முறையாக டைரக்டராகவும் களம் இறங்கி, யோகிபாபு கதையின் நாயகனாக நடிக்கும் ‘ஆன் ஆர்டினரி மேன்’ படம் பற்றிய சுவாரஸ்ய க்ளிம்ப்ஸ் ஸ்கிரீன் பண்ணப்பட்டது.
‘ப்ரோ கோட்’ படத்தின் தமிழ், தெலுங்கு வெர்ஷன்களின் ஃபர்ஸ்ட் விஷுவல் க்ளிப்பிங்கும் காண்பிக்கப்பட்டது.
தனக்கும் ரவிமோகனுக்குமிடையிலான நெருங்கிய நட்புறவு குறித்து ரொம்பவே சிலாகித்துப் பேசினார் கார்த்தி.
சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பிக்கும் ரவிமோகனின் தைரியத்தையும் அதற்கான திறமையையும் பாராட்டிய சிவகார்த்திகேயன், எதிர்காலத்தில் ரவிமோகன் ஸ்டுடியோ பேனரில் நடித்தாலும் நடிப்பேன் என்பதையும் மறக்காமல் குறிப்பிட்டார்.

”தனது தம்பி ஸ்தானத்தில் இருக்கும் ரவிமோகன் தயாரிப்பிலும் நிச்சயம் ஜொலிப்பார்” என்றார் கன்னட சூப்பர் ஸ்டார் ஷிவராஜ்குமார்.
ஜெயம் ரவியாக இருந்த போது பழகிய நாட்களையும் அவரின் நடிப்பாற்றலையும் இப்போது பக்காவாக ப்ளான் போட்டு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருப்பது குறித்தும் ஜெனிலியா தேஷ்முக் பேசிய போது கண் கலங்கினார் ரவிமோகன்.
“நான் டைரக்டராகிட்டேன்” என ரவிமோகன் உற்சாகக் குரலில் சொன்னதும் அவரின் அன்புக்குரிய ரசிகர்களின் கைதட்டலால் அரங்கம் அதிர்ந்தது.
ரவிமோகனின் அதிரடி ரவுண்ட் ஆரம்பிச்சிருச்சு….
— மதுரை மாறன்