கோழிக்கடை மேலாளர் தாக்குதல்! ரூ. 2 லட்சத்தை கொள்ளையடித்த வடமாநில இளைஞர்கள் !
சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் அருகே காட்டம்பட்டி பகுதியில் உள்ள கோழிக்கடையில் எம்.செட்டிப்பட்டியைச் சேர்ந்த 45 வயதான பார்த்திபன் என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். இக்கடையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களான 20 வயதான சுமீர்குமார் மற்றும் 25 வயதான முகேஷ் ஆகியோர் வேலைசெய்து வந்தனர்.
இந்நிலையில், சம்பவத்தன்று ஞாயிற்றுக்கிழமை கோழி கடையில் வியாபாரம் அமோகமாக நடந்திருக்கிறது. கிட்டத்தட்ட அன்று மட்டும் 2 லட்சத்திற்கும் மேல் கோழி இறைச்சி விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. அதை நோட்டமிட்ட கடையில் வேலை செய்யும் இந்த இளைஞர்கள் அந்தப் பணத்தை எப்படியாவது கொள்ளையடிக்க வேண்டும் என்று திட்டம் தீட்டி இருக்கின்றனர். எனவே அன்று இரவு சுமார் 11 மணி அளவில் கடையின் மேலாளர் பார்த்திபன் அன்றைய கணக்கு முடிப்பதற்காக பணத்தை சரி பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது தூங்கிக் கொண்டிருப்பது போல் நடித்த சுமீர்குமார் மற்றும் முகேஷ் இருவரும் கடையில் கோழி வெட்ட பயன்படுத்தும் கத்தியை வைத்து மேலாளர் பார்த்திபனை மிரட்டினர். இருப்பினும் பார்த்திபன் அவர்களை தடுக்க முயன்றிருக்கிறார். ஒரு கட்டத்தில் பார்த்திபன் கையில் கத்தி வெட்டு பலமாக விழுந்ததால் உயிருக்கு பயந்து கடையை விட்டு வெளியே ஓடி இருக்கிறார். அதை சுதாரித்துக் கொண்ட இந்த இளைஞர்கள் கடையில் இருந்த 2 லட்சத்தை எடுத்து தப்பிச்சென்றனர். அப்போது ரத்த காயத்துடன் பார்த்திபன் ஓடி வருவதை பார்த்த அக்கம்பக்கத்தினர், ஜலகண்டாபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் பார்த்திபனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து சுமீர்குமார், முகேஷ் ஆகியோரை தேடிவந்தனர்.
இந்நிலையில், இவர்கள் இருவரும் சேலத்தில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு தப்பி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சென்னை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சினிமா பாணியில் சமீர்குமார், முகேஷ் இருவரையும் போலீஸார் துரத்திச் சென்று அதிரடியாக கைது செய்தனர் கைதுசெய்தனர்.
— மு. குபேரன்