தேர்வு முடிவுகளை பெற தனது ஆட்டுடன் வந்த பள்ளி மாணவி!
இங்கிலாந்தின் லாங்காஷையரில் வசிக்கும் 16 வயது மாணவி மில்லி ஜான்சன், இவர் கடந்த மாதம் தனது பள்ளியில் பொது தேர்வு எழுதி இருந்தார். இந்த நிலையில் அதன் முடிவுகள் தற்போது வெளியாகி இருந்தது. இந்த பொதுத் தேர்வு முடிவுகளைப் பெற பள்ளியில் படிக்கும் மற்ற மாணவர்கள் பெற்றோர் அல்லது நண்பர்களுடன் பள்ளிக்கு வந்திருந்தபோது, மில்லி மட்டும் தனது நெருங்கிய நண்பனான ஒரு ஆட்டுடன் வந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது, இது குறித்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. “நார்த் ரொனால்ட்சே” இனத்தைச் சேர்ந்த இந்த ஆட்டிற்கு மில்லி “கெவின்” என்று பெயர் வைத்துள்ளார்.
மேலும் இது குறித்து பேசியிருந்த மாணவி மில்லி ஜான்சன், கெவின் எனக்கு மிக நெருங்கிய நண்பன். நான் எங்கு சென்றாலும் என்னுடன் வருவான். தனது பொதுத் தேர்வு முடிவுகள் வரும் நாளில் நான் மிகவும் பதட்டமாக இருந்தேன், ஆனால் கெவின் என்னுடன் இருந்ததால் மிகவும் நிம்மதியாக உணர்ந்தேன். கெல்வின் பள்ளிக்கு வருவது இது முதல் முறை அல்ல, இதற்கு முன்னதாகவே கெவின் பள்ளி விழாக்கள், நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளதாக மில்லி கூறினார்.
இந்த தேர்வில் மில்லி நல்ல மதிப்பெண்களைப் பெற்றதோடு, விலங்கு மருத்துவ நிலையத்தில் நர்ஸ் பயிற்சிக்கான அழைப்பையும் பெற்றிருக்கிறார்.
மேலும், மில்லியும் கெவினும் இணைந்து வரும் நவம்பரில் நடைபெறும் “யங் ஷெப்பர்ட் ஆஃப் தி இயர்” போட்டிக்குத் தயாராகி வருகின்றனர். இதற்கு முன் நடந்த வேளாண் கண்காட்சியில், கெவின் முதலிடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
— மு. குபேரன்