ஜி.எஸ்.டி. மாற்றம் எதிரொலி ! சிக்கலில் காலண்டர், டைரிகள் தயாரிப்பாளர்கள் !
சில தினங்களுக்கு முன்பாக, ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் மாற்றங்களை செய்து ஒன்றிய நிதியமைச்சகத்தின் சார்பில் அறிவிப்பு வெளியான நிலையில், 12 சதவீதம் ஜிஎஸ்டி அடுக்கில் இருந்த காகிதத்திற்கு 5 சதவீதம் குறைக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் 18 சதவீதத்திற்கு உயர்த்தி உள்ளதால் 6 சதவீதம் காலண்டர் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விலை உயர வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு காலண்டர் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், காகிதத்தை மூலப்பொருளாகக் கொண்டு இயங்கும் சிறு – குறு நிறுவனங்களை பாதிக்கும் என்பதை கருத்தில் கொண்டு அரசு பரிசீலிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து சிவகாசி தமிழ்நாடு காலண்டர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் எஸ்.கே.ஜெய்சங்கர் மற்றும் செயலாளர் பி.ஜீவானந்தம் ஆகியோர் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”வரி சீர்திருத்தம் செய்யப்பட்ட ஜி.எஸ்.டி. 56-வது ஆலோசனை கூட்டத்தில், அத்தியாவசிய பொருட்களை 5% வரி அடுக்கிற்கு கொண்டு வந்ததை வரவேற்கிறோம். கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பயிற்சி புத்தகங்கள், நோட் புத்தகங்கள், மேப், சார்ட் போன்ற காகிதத்தால் ஆன அறிவு சார்ந்த பொருட்களுக்கு முழுவதும் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதை வரவேற்கும் அதே வேளையில் காகிதத்திற்கு 12 சதவீதம் வரி இருந்த நிலையில் 5 சதவீத அளவிற்கு குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 18% வரி உயர்த்தப்பட்டிருக்கிறது.
இந்த அறிவிப்பால், காலண்டர் நாட்காட்டி, மாத நாட்காட்டி, டைரிகள் உள்ளிட்ட காகிதத்தால் உருவாக்கம் பெறும் பொருட்களுக்கு ஆறு சதவீதம் வழக்கத்தை விட, கூடுதலாக விலை உயர்வை சந்திக்க வழிவகுக்கும். இந்த வரி உயர்வு காகிதத்தை மூலப்பொருளாகக் கொண்டு இயங்கும் சிறு, குறு நிறுவனங்களை பாதிக்கும் என்பதை கருத்தில் கொண்டு அரசு பரிசீலிக்க வேண்டுமென” வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.