மாமூல் வாங்குபவர்கள் பிச்சை எடுத்து சாப்பிடலாம் … ஓப்பன் மைக்கில் எஸ்.பி. விட்ட டோஸ் !
கள்ள லாட்டரி பிசினஸ் எஸ்.பி விடுத்த எச்சரிக்கை
”மாமூல் வாங்குபவர்கள் பிச்சை எடுத்து சாப்பிடலாம்” என்று ஓப்பன் மைக்கில் கடலூர் எஸ்.பி. ஜெயக்குமார் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகம் முழுவதுமே, கள்ள லாட்டரி பிசினஸ் அரசல் புரசலாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்தந்த மாவட்டத்தின் தலைமை போலீசு அதிகாரியின் கண்டிப்பை பொறுத்து இதில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். ஆனால், தமிழகத்தில் கள்ள லாட்டரி முற்றிலும் தடை செய்யப்பட்டுவதாக சொல்வதற்கில்லை. சில மாவட்டங்களில், கணக்குக்காக மாதத்திற்கு ஒரு வழக்கு பதிவு செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் சொல்லப்படுகிறது.
கடலூர் மாவட்டத்தை பொறுத்தமட்டில், குறிப்பாக சிதம்பரத்தில் லாட்டரி தொழில் தங்கு தடையின்றி போலீசின் ஆதரவோடு நடைபெற்று வருவதாகவே குற்றச்சாட்டு இருந்து வருகிறது. ஏற்கெனவே, சிதம்பரத்தை சேர்ந்த பிரபல லாட்டரி வியாபாரி நசீர் என்பவர் கைது செய்யப்பட்டார். அப்போது, அவருக்கு உடந்தையாக லோக்கல் போலீசாரே பலர் இருந்து வந்ததும் அம்பலமாகியிருந்தது. விவகாரம் வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ராகார்க் வரை சென்றது. அதன் எதிரொலியாக, சிதம்பரம் டி.எஸ்.பி. லாமேக், இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு உள்ளிட்டு 7 போலீசார் அதிரடியாக வேலூர் மாவட்டத்துக்கு தூக்கியடிக்கப்பட்டனர்.

இந்த பின்னணியில்தான், தனது அதிகாரத்திற்குட்பட்ட கடலூர் மாவட்டத்தில், கள்ள லாட்டரி விற்பனையை முற்றிலும் தடை செய்ய வேண்டுமென்ற நோக்கில் இந்த அதிரடியை அரங்கேற்றியிருக்கிறார், எஸ்.பி. ஜெயக்குமார். செப்-03 அன்று கடலூர், ப ண்ருட்டி, சிதம்பரம், நெய்வேலி, விருத்தாசலம், சேத்தியாத்தோப்பு, திட்டக்குடி உள்ளிட்ட ஏழு உட்கோட்ட காவல் அதிகாரிகளையும் மைக்கில் அழைத்து டோஸ் விட்டிருக்கிறார்.
“சிதம்பரம் பகுதியில் காலம் காலமாக லாட்டரி விற்பனையில் போலீசார் மாமூல் வசூலித்து வந்தது தெரிகிறது. இதில் விதிவிலக்காக ஒரு சில அதிகாரிகள் மட்டும் நேர்மையாக பணியாற்றி வருகின்றனர். இனியும் லாட்டரி விற்பனையாளர்களிடம் தொடர்புகொள்ள நினைப்பவர்கள் கண்டிப்பாக, வேறு மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்படுவார்கள்” என்று எச்சரித்ததோடு, ஹைலைட்டாக, “லாட்டரி, கஞ்சா விற்பனைக்காக மாமூல் வாங்குபவர்கள், பிச்சை எடுத்து சாப்பிடலாம்” என்பதாக துணிச்சலோடு பேசியிருக்கிறார்.
எஸ்.பி. ஜெயக்குமாரின் வெளிப்படையான இந்த கருத்துக்கு பெரும்பாலோனோர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், சிலர் எதிர்ப்பு கருத்துக்களையும் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார்கள். சிபிசிஐடி போலீசாரின் விசாரணையில் இருந்துவரும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் ஒன்றான திருச்சி – ராமஜெயம் கொலை வழக்கை முக்கிய கட்டத்திற்கு நகர்த்தியதில் முக்கிய பங்காற்றியவர் எஸ்.பி. ஜெயக்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.
— ஆதிரன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.