ஆசிரியர்களை ஆட்கொண்டிருக்கும் அச்சம் … ஐபெட்டோ அண்ணாமலை வெளியிட்ட புள்ளி விவரம் !
ஆசிரியா்கள் தகுதி தேர்வு உச்சநீதிமன்றத் தீர்ப்பு
பணியில் இருக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும் பணியை தொடர டெட் தேர்வு கட்டாயம் என்ற விதியால், பீதிக்குள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். இரண்டரை இலட்சம் ஆசிரியர்களின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கியிருக்கும் இந்த விவகாரம் குறித்து, தமிழகத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு முதலாக தற்போது வரையில் ஆசிரியர் நியமனம் தொடர்பான எத்தகைய விதிமுறைகள் பின்பற்றப்பட்டிருக்கின்றன என்பதையும் தற்போதைய உச்சநீதிமன்றத் தீர்ப்பு எவ்வாறு முரண்பட்டிருக்கிறது என்பதையும் ஆதாரங்களுடன் எடுத்துரைத்திருக்கிறார் மூத்த ஆசிரியர் இயக்கவாதியும் ஐபெட்டோ அகில இந்திய செயலருமான வா.அண்ணாமலை.
இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், ”தமிழ்நாட்டில், 2009ஆம் ஆண்டு வரை District Seniority / TRB Exam மூலமும், 2009ஆம் ஆண்டு முதல் 2011 ஆண்டுவரை State Seniority / TRB Exam மூலமும் +2 மற்றும் D.T.Ed (ஆசிரியர் பயிற்சி) படித்தவர்கள் இடைநிலை ஆசிரியர்களாகவும், +2, UG மற்றும் B.Ed படித்தவர்கள் பட்டதாரி ஆசிரியர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.

அதன்பிறகு, கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம்-2009ன்படி 23.08.2010 அன்று வெளியிடப்பட்ட NCTE Notification, 15.11.2011 அன்று தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணை 181 மற்றும் 07.03.2012 அன்று TRB வெளியிட்ட TET Notification No.04/2012 ஆகியவற்றின் அடிப்படையில், 23.08.2010க்கு பிறகு, இடைநிலை ஆசிரியர்களாகப் பணிவாய்ப்பு பெறுவதற்கு +2 மற்றும் D.T.Ed (ஆசிரியர் பயிற்சி) கல்வித்தகுதியுடன் TET – Paper – I ல் தேர்ச்சி பெறுவது அவசியம் எனவும், பட்டதாரி ஆசிரியர்களாகப் பணிவாய்ப்பு பெறுவதற்கு +2, UG மற்றும் B.Ed கல்வித்தகுதியுடன் TET – Paper – II ல் தேர்ச்சி பெறுவது அவசியம் எனவும் நிர்ணயிக்கப்பட்டது.
இதன்மூலம் 23.08.2010 -க்கு முன்பு நியமனம் பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் TET தேர்வு எழுத வேண்டியதில்லை என்று கூறப்பட்டுள்ளது.
அதன்பிறகு, 29.07.2011 அன்று வெளியிடப்பட்ட NCTE Notification மற்றும் 22.05.2013 அன்று TRB வெளியிட்ட TET Notification No.03/2013 ஆகியவற்றின் அடிப்படையில், 23.08.2010க்கு முன்பு நியமனம் பெற்றவர்களும், 23.08.2010க்கு முன்பு நியமனம் சார்ந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நியமன நடைமுறைகள் தொடங்கி அதன் அடிப்படையில் நியமனம் பெற்றவர்களும் TET தேர்வு எழுத வேண்டியதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

அதன்பிறகு, 20.07.2018 அன்று தமிழக அரசின் கொள்கை முடிவின்படி வெளியிடப்பட்ட அரசாணை 149ன் படி, தமிழ்நாட்டில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதிகள் + TET தேர்ச்சி + TRB போட்டித்தேர்வில் கட்டாயத் தேர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் 20.07.2018 முதல் தற்போது வரை ஆசிரியர்கள் நியமனம் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு, மத்திய அரசு வெளியிட்ட NCTE Notification, தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணைகள் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட TET Notification ஆகிய அனைத்திலும், 23.08.2010க்கு முன்பு நியமனம் பெற்றவர்களும், 23.08.2010க்கு முன்பு நியமனம் சார்ந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நியமன நடைமுறைகள் தொடங்கி அதன் அடிப்படையில் நியமனம் பெற்றவர்களும் TET தேர்வு எழுத வேண்டியதில்லை என்று 29.07.2011 அன்றே குறிப்பிட்டுவிட்டு, தற்போது, 29.07.2011க்கு முன்னரும் 29.07.2011க்கு பின்னரும் பணியில் சேர்ந்த அனைத்து ஆசிரியர்களும் பணியில் தொடர்வதற்கும் பதவி உயர்வு பெறுவதற்கும் TET தேர்ச்சி கட்டாயம் என்று கூறப்பட்டு வருவதால் தங்களது வேலை பறிக்கப்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்படுமோ என்று ஆசிரியர்கள் அச்சம் கொண்டிருக்கிறார்கள்.” என்பதாக தெளிவுபடுத்துகிறார், ஐபெட்டோ அண்ணாமலை.
— அங்குசம் செய்திப்பிரிவு
Comments are closed, but trackbacks and pingbacks are open.