எல்ஃபின் மோசடி வழக்கில் போலீசார் வெளியிட்ட முக்கியமான அறிவிப்பு !
எல்ஃபின் மோசடி! போலீசார் வெளியிட்ட முக்கியமான அறிவிப்பு !
வழக்கமாக போலீசில் புகார் அளித்தும் போலீசார் உரிய நடவடிக்கை என்பதாக எழும் குற்றச்சாட்டை கேள்விப்பட்டிருக்கிறோம். சற்றே, வித்தியாசமாக புகார் அளித்ததோடு கடமை முடிந்துவிட்டது என்று அமைதியாக இருக்கும் புகார்தாரர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கும் சம்பவம் அரங்கேறியிருக்கிறது.
தமிழகத்தில் பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் சிறப்பு விசாரணைக்குழு அமைத்து கையாண்டு வரும் வழக்குகளுள் முக்கியமானது எல்ஃபின் மோசடி வழக்கு. திருச்சி மன்னார்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கிளை நிறுவனங்களை ஏற்படுத்திக் கொண்டு, சுமார் 400 கோடிக்கும் அதிகமான மோசடிப்புகாரில் சிக்கிய நிறுவனம்தான் எல்ஃபின்.

இந்நிறுவனத்துக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் 17 வழக்குகள் பதிவான நிலையில், இந்த வழக்குகளையெல்லாம் ஒருங்கிணைந்த முறையில் விசாரிக்கும் வகையில், திருச்சி மாவட்ட பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசு டி.எஸ்.பி. லில்லிகிரேஸ் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு வழக்கு புலனாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.
17 வழக்குகளையும் தனித்தனியாக கையாண்டு, அவற்றுக்கு எதிராக தனித்தனியாக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து வருகிறார்கள். பல ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை தேடிப்பிடித்து அடுத்தடுத்து கைது செய்து அதிரடி காட்டி வருகிறது, சிறப்பு விசாரணைக்குழு.
குறிப்பாக, கடந்த 2024 ஆண்டின் மத்தியிலிருந்து தற்போது வரையிலான ஓராண்டு காலத்தில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட நீண்ட நாள் தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்திருக்கிறார்கள். இதன் தொடர்ச்சியாக, செப்-19 ஆம் தேதியன்று எல்ஃபின் நிறுவனத்திற்கு எதிராக இராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கடந்த 2022 ஆம் ஆண்டில் பதிவான 3/22 என்ற எஃப்.ஐ.ஆர். இல் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளி திருச்சி எடமலைப்பட்டி புதூரை சேர்ந்த மணிகண்டராஜன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். இவரது தந்தை பால்ராஜூம் மோசடியில் தொடர்புடையவர் என்றும் அவரும் தற்போது வரையில் தலைமறைவாக இருந்து வருவதாகவும் தெரிவிக்கிறார்கள்.

இந்நிலையில்தான், கவனத்தைப் பெற்ற அந்த அறிவிப்பை பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசின் சிறப்பு விசாரணைக்குழுவின் தலைவர் டி.எஸ்.பி. லில்லிகிரேஸ் வெளியிட்டிருக்கிறார். அதாவது, எல்ஃபின் மோசடி வழக்கில் இதுவரை 8389 பேர் புகார் அளித்திருக்கிறார்கள். இதில், வெறும் 2873 பேர் மட்டுமே, உரிய ஆவணங்களுடன் போலீசு நிலையத்திற்கு நேரில் வந்து தங்களது தரப்பு சாட்சியத்தை அளித்திருக்கிறார்கள். வழக்கை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்வதற்கு, புகார்தாரர்களின் சாட்சியம் அடிப்படையானது என்ற நிலையில் எஞ்சியுள்ள புகார்தாரர்களிடமிருந்தும் சாட்சியங்களை பெற்றாக வேண்டும்.
இதனையடுத்தே, R.M.W.C, ELFIN E.com.pvt Ltd..Sparrow Global Trade Trichy ஆகிய நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாந்து, அவர்களின் மிரட்டல் அல்லது சமரச பேச்சுக்கு உடன்பட்டு இதுவரை புகார் அளிக்காதவர்கள், பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம், மன்னார்புரம், திருச்சிராப்பள்ளியில் புகார் அளிக்கலாம் என்றும்; ஏற்கெனவே, புகார் அளித்தவர்கள் கட்டாயம் உரிய சான்றாவணங்களுடன் நேரில் ஆஜராகி தங்களது தரப்பு சாட்சியங்களை அளிக்க ஒத்துழைக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
— ஆதிரன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.