கல்வியில் சிறந்த தமிழ்நாடு !
இனியன், விழியன், மகாலட்சுமி, அகரம், இன்னும் பலர் செய்ததைத்தான் ஸ்டாலின் அரசும் செய்திருக்கிறது. ஆனால் ஓர் அரசே இறங்கி அதைத் துல்லியமாகச் செய்தால் சமூகத்தில் என்னவெல்லாம் நிகழும் என்பதைக் காட்டிய விழாதான் நேற்று மாலையில் நிகழ்ந்த கல்வியில் சிறந்த தமிழ்நாடு பெருவிழா !
அகரம் இன்று ஆலமரமாய்ச் செழித்து அதன் விழுதுகளே மரங்களாகிப் போனாலும், விதை சிவகுமார் போட்டது. எனவே அவருக்கு முன்வரிசை அழைப்பு. விழா துவங்கும் முன்னரே வந்தவர் இறுதிவரை அமர்ந்திருந்து பார்த்தார்.
என் மூளையில் உதித்த திட்டமிது என்று ஸ்டாலின் அரசு எங்கும் எதிலும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளவில்லை.
இந்த விழா மிகச் சிறப்பாக நடக்க வேண்டும். பலனடைஞ்ச பசங்க அவங்க இஷ்டத்துக்கு என்ன பேச ஆசைப்படுறாங்களோ பேச விடுங்க, நான் நிகழ்ச்சி முழுமைக்கும் இருப்பேன் என விழாவுக்கான முன்னேற்பாடுகளின்போது முதலமைச்சர் பெருமுனைப்போடு இருந்திருக்கிறார் !
அதனால்தான் முதலமைச்சர், துணை முதலமைச்சர் வரும் முன்பே விழா தொடங்கிவிட்டது. அரசுப்பள்ளி மாணவர்களில் பலர் புகழ்பெற்ற டிவி ஷோ பாடகர்களாக உள்ளனர்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் பயனடைபவர்கள், அந்தச் செயலாக்கத்திற்கு உறுதுணையாய் இருப்பவர்கள் முதலில் வந்தனர்.
அந்தத் திட்டத்தை எப்படி செயல்படுத்துகிறார்கள் எனப் பார்த்தபோது சிலிர்த்தது. எங்களுடைய ராயபுரம் மண்டலத்திலிருந்து தினமும் 1000 குழந்தைகளுக்கு காலை உணவு தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. அத்தனை துல்லியம். முதலமைச்சர்தான் அதற்கு தலைமை. அவருக்கு கீழ் கல்வி அமைச்சர், செயலர், உயர் அதிகாரிகள், ஆசிரியர்கள் என கண்காணிப்பு குழு. உணவின் தரம், ருசிக்கான சோதனையை பெரிய அதிகாரி செய்து அதை மேலிடங்களுக்குச் சொல்ல வேண்டும். பின்னரே அது விநியோகிக்கப்படுகிறது !
அதற்கான வேலை முன்னதிகாலை 4 மணிக்கு துவங்கி விடுகிறது. ஆறு – ஆறரைக்குள் அத்தனையும் தயாராகி ஹாட்பேக்குகளில் வைக்கப்படுகிறது. மேலே சொன்ன சோதனை முறைகள் முடிந்ததும் ஏழு மணிக்கு வாகனங்களில் ஏற்றப்படுகிறது. எட்டு மணிக்குள் அத்தனை வாகனங்களும் பள்ளிகளுக்குள் அதை இறக்கி வைத்துவிடுகின்றன. இடையில் யாரும் அந்த உணவைப் பார்க்கவோ, தொடவோ, மாற்றவோ, கெடுக்கவோ முடியாது. அந்தளவு சீல் வைக்கப்பட்டு, முழுமையான கண்காணிப்புடன் அது செயல்படுத்தப்படுகிறது !

சரியாக 8:15 முதல் மாணவர்களின் வருகை ஆரம்பமாகிறது. அவர்களுக்கு சுடச்சுட காலை உணவு வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு முன் அதைப் பரிமாறுபவரும், பொறுப்பாசிரியரும் சுவை பார்க்க வேண்டும். அதைக் காட்சிகளாகப் பதிந்து வாட்ஸ்அப் குழுக்களில் ஏற்ற வேண்டும். அதைத்தான் முதலமைச்சர் வரை கண்காணிக்கிறார்கள். இப்படி இந்தத் திட்டம் ஒரு முழுமையானச் செயல்பாட்டுனான உலகத்தரமான ஒரு திட்டம்.
எனக்கென்னமோ ஸ்டாலின் அடுத்தமுறை இந்த விழாவிற்கு இலங்கை, பர்மா, ஆஃப்ரிக்க நாட்டு அதிபர்களை விருந்தினர்களாக அழைப்பார் என நினைக்கிறேன். தான் மட்டும் செஞ்சுட்டு தனக்கான பெயரை மட்டும் தக்க வச்சிப்போம்ன்னு மனுஷனுக்கு குறுகிய எண்ணம் 1% கூட இல்லை. பஞ்சாப், தெலங்கனா என அதைப் பரவச் செய்தவர் இதை உலகமயமாக்கிவிடுவார்.
37000 ப்ளஸ் பள்ளிகளுக்கு அனுப்பப்படும் இந்தக் காலை உணவு, இருபது இலட்சத்திற்கும் மேலான மாணவர்களுக்கு தினமும் வழங்கப்படுகிறது. கொஞ்சம் கற்பனை செய்துப் பாருங்கள்.
பாரதி பாஸ்கரின் தந்தை பள்ளியின் தலைமை ஆசிரியர். தினமும் காலையில் பள்ளிக்கு கிளம்பும்போது நாலு டிபன் கேரியர்களை உடன் எடுத்துச் செல்வாராம்.
ஏம்பா உங்களுக்கு மட்டும் நாலு கேரியர் சாப்பாடா ?
பிரேயர்ல எப்படியும் நாலு பசங்களாவது மயங்கி விழுவாங்க. வெறும் வயித்துல வருவாங்க. அதுக்கு பல காரணங்கள் அவன் வீட்ல இருக்கும். அதுக்காகத்தாம்மா என்று சொல்வாராம்.
பெரியவங்க பசில இருந்தா நம்ம உடம்புல இருக்கிற கொழுப்பு கரைஞ்சி கொஞ்சம் அதைத் தாக்குப்பிடிக்கச் செய்யும். ஆனால் குழந்தைகளுக்கு அப்படி இல்லை. முறையான காலை உணவு இல்லாவிட்டால் மயக்கம், கல்வித்திறன் குறைபாடு, உடல் வலிமையின்மை, ரத்தசோகைன்னு ஏகப்பட்ட பிரச்சினைகள் உருவாகும். அது அப்படியே இப்ப தடுக்கப்பட்டிருக்கு. இதையெல்லாம் ஆராய்ந்து பார்த்துதான் சொல்கிறோம். இந்தத் திட்டத்தால் மூளையால் மட்டுமல்ல உடலாலும் வலுவான மாணவர்களைக் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உருவாகுமென டாக்டர் அருண்குமார் விளக்கினார் !

பசிதான் திருட்டைத் தூண்டும். அந்தப் பசியைப் போக்கிவிட்டால் உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல சமூகமும் ஆரோக்கியமாக இயங்கும். நான் பசியால்தான் வாழைப்பழம் திருடினேன். அதைப் படத்திலும் காட்டினேன் என்றார் மாரி செல்வராஜ்.
தமிழரசன்(லப்பர் பந்து) பேசியதுதான் சிறப்பு.
இளையராஜா படிக்கல, ரஹ்மான் படிக்கலைம்பானுக, அவர்களெல்லாம் விதிவிலக்குகள். விதிவிலக்குகளை என்றுமே சான்றாக எடுத்துக் கொள்ளக் கூடாது. விதிவிலக்குகளைத் தாண்டி கல்வியால் சாதித்தவர்களின் எண்ணிக்கைதான் மிக அதிகம். அதனாலத்தான் படிங்க படிங்க படிங்க என்று முதலமைச்சர் சொல்கிறார். நான் இன்னொரு முறை அதைச் சேர்த்து சொல்றேன், படிங்க, படிங்க, படிங்க, படிங்க !!!
(அடுத்தடுத்து எழுதுவேன்)
இந்த விழாவை நான் பார்க்க அழைப்பிதழ் தந்து அழைத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி .
— ராஜராஜேந்திரன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.