எங்க வீட்ல நவராத்திரிக்கும் கொலு வைப்போம் ! பிள்ளையார் சதுர்த்திக்கும் கொலு வைப்போம் !
பிள்ளையார் சதுர்த்திக்கும் கொலு வைப்போம்! அபூர்வமா 10 நாள் கொலு வருது…
எங்க வீட்ல நவராத்திரிக்கும் கொலு வைப்போம் பிள்ளையார் சதுர்த்திக்கும் கொலு வைப்போம் “எங்க வீட்டில் ஒவ்வொரு ஆண்டிலும் நவராத்திரிக்கு கொலு வைப்போம். அதுபோல பிள்ளையார் சதுர்த்திக்கும் நாங்களே கொலு வைத்து வருகிறோம். பிள்ளையார் சதுர்த்திக்கும் அனேகமாகக் கொலு வைப்பது, நாங்களாக தான் இருப்போம் என நினைக்கிறோம். முப்பத்தைந்து ஆண்டுகளாக வீட்டில் நவராத்திரி கொலு வைத்து, வழிபாடு செய்து வருகிறோம்.
அதிலும் கடந்த மூன்று ஆண்டுகளாக பிள்ளையார் சதுர்த்தி, அப்போதும் பிள்ளையார்க் கொலு வைத்துக் கொண்டாடி வருகிறோம்.” என்கிறார் மயிலாடுதுறை, காவேரி நகரில் வசித்து வரும் ராஜி பாஸ்கரன்.

இந்த ஆண்டு 22.௦9.2௦25 திங்கட்கிழமை முதல் ௦2.1௦.2௦25 வியாழக்கிழமை விஜயதசமி வரை, நிகழந்திட இருக்கிறது நவராத்திரி கொலு விழா. நவராத்திரி வழிபாடு என்பது சக்தி வழிபாட்டில் மிகவும் முக்கியமானது. துர்க்கை அம்மனின் அளவிலா அருளைப் பெறுவதற்கான உன்னதமான வழிபாடு இந்த நவராத்திரி வழிபாடு. பொதுவாக நவராத்திரி என்றாலே நம் வீடுகளில் ஒன்பது நாட்கள் தான். இந்த ஆண்டு மிக அபூர்வமாகப் பத்து நாட்களுக்கு நடைபெற உள்ளது நவராத்திரி. மயிலாடுதுறை, ராஜி பாஸ்கரன் அவர்களிடம் பேசினோம்.

“எனக்குத் திருமணம் ஆகி வந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக எங்கள் வீட்டில் நவராத்திரி கொலு வைத்து வருகிறோம். கொலு வைப்பது என்பது மனதுக்கு மகிழ்ச்சி. நம்மைச் சுற்றி வசிக்கும் குடும்பங்களில் இருப்பவர்களும், நமக்குப் பழக்கம் ஆனவர்களும், நம் வீட்டு நவராத்திரி கொலுவினை வந்து பார்த்து விட்டுச் செல்வதால், இயல்பாகவே நமக்கும் அவர்களுக்கும் இடையேயான அன்பும் ஆதரவும் மேலும் இறுகச் செய்யும். இடையிலே பிள்ளையார் சதுர்த்தி அப்போது எனக்குள் ஏதோ வித்தியாசமாகத் தோன்றியது. பிள்ளையார்க்கும் விசேசமாக கொலு வைத்து அழகு பார்த்தால் என்ன? மூன்றாண்டுகளாக எங்கள் வீட்டில் பிள்ளையார் சதுர்த்தியின் போது தொடர்ந்து மூன்று நாட்களுக்கு, நூற்றுக்கும் மேற்பட்ட விதம் விதமான விநாயகர்களை அணிவகுத்து வைத்து பிள்ளையார்க் கொலு கொண்டாடி வருகிறோம்.

நவராத்திரி கொலு பொம்மைகள் மட்டும் இரண்டாயிரத்து ஐந்நூறுக்கும் மேல் சேமித்து வைத்திருக்கிறேன். அந்தந்த ஆண்டில் மனதுக்குத் தோன்றும் பொம்மைகளை எடுத்து அலங்கரித்து கொலு வைத்து வருகிறேன். அதே நேரத்தில் ஆர்வம் மிகுதியால் புது புது பொம்மைகளும் வாங்குவதற்கு தயங்கியதும் இல்லை. இந்த ஆண்டில் ஒன்பது படிகள் கொண்ட ஒரு மேடையிலும். ஐந்து படிகள் கொண்ட இரண்டு மேடைகளிலும், நான்கைந்து அலமாரிகளிலும் கொலு பொம்மைகள் வைத்து அலங்கரித்து அழகுபடுத்தியுள்ளேன்.

சுமார் ஆயிரத்து ஐந்நூறுக்கும் மேலே விதம் விதமாகக் கொலு பொம்மைகள் அணிவகுக்க வைத்து இருக்கிறேன். இன்று 26.௦9.2௦25 வெள்ளிக்கிழமை மாலையில் எங்கள் வீட்டு கொலுவுக்கென, முப்பது பெண்கள் வந்திருந்து லலிதா சஹஸ்ரநாமம் உச்சரித்துப் பாட இருக்கின்றனர். கொலு பார்க்கவும் வழிபாடு நிகழ்த்தவும் தினசரி வந்து செல்லும் பெண்கள், ஆண்கள், சிறுவர் சிறுமியர்க்கு ஏற்றார் போன்ற பரிசுப் பொருட்கள் வழங்கி வருகின்றோம். இந்த ஆண்டு வீட்டு உபயோகத்துக்கான பீங்கான் ஜார், அன்புடன் வழங்க இருக்கின்றோம்.” என்கிறார் மயிலாடுதுறை காவேரி நகரில் வசித்து வரும் ராஜி பாஸ்கரன்.
– ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு
Comments are closed, but trackbacks and pingbacks are open.