விஷ்ணுவின் அவதாரங்கள்! ஆன்மீகப் பயணம் – தொடர் 11
உலகத்தில் தர்மம் அழிந்து அதர்மம் ஓங்குகிற சமயம் நான் உலகத்தில் அவதாரம் எடுக்கின்றேன் என்று கிருஷ்ண பரமாத்மா கீதையில் கூறுகிறார். வைகுண்டத்தை இருப்பிடமாகக் கொண்டிருக்கும் பரம்பொருள் திருமால் பூலோகத்தை காப்பதற்காக பல சமயங்களில் பல்வேறு அவதாரங்கள் எடுத்தார். அவருடைய அவதாரங்களை சிறப்பாக தசாவதாரம் என்று குறிப்பிடுவர்.
பெருமாள் எடுத்த பத்து அவதாரங்களை ஒவ்வொன்றாக விரிவாக பார்ப்போம்.
- மச்ச அவதாரம் (மீன் அவதாரம்)
- கூர்மா அவதாரம் (ஆமை அவதாரம்)
- வராக அவதாரம் (பன்றி அவதாரம்)
- நரசிம்ம அவதாரம் (சிங்க அவதாரம்)
- வாமன அவதாரம் (குள்ள அவதாரம்)
- பரசுராம அவதாரம்
- ராம அவதாரம்
- பலராம அவதாரம்
- கிருஷ்ணா அவதாரம்
- கல்கி அவதாரம் (எதிர்கால அவதாரம்)
1.மச்ச அவதாரம்:- (மீன் அவதாரம்)
திருமாலின் மச்ச அவதாரம் மத்ஸய புராணத்தின் படி விஷ்ணுவின் முதல் அவதாரமாகும். மச்சம் என்ற சமஸ்கிருத சொல் தமிழ் மொழியில் மீன் எனப் பொருள் தரும். பரிணாம வளர்ச்சியில் உயிரினங்கள் முதன் முதலில் நீரில் தோன்றியது என்பது டார்வினின் பரிணாம கோட்பாடு ஆகும். அதேபோலத்தான் திருமாலின் முதல் அவதாரம் நீரில் மீனாக தோன்றியது. இந்த அவதாரத்தில் விஷ்ணு நான்கு கைகளுடன் உடலில் மேற்பாகம் தேவ ரூபமாகவும், கீழ்பாகம் மீனின் உருவமாகவும் கொண்டவராக தோன்றினார். அதாவது, பிரளய காலத்தில் மச்ச அவதாரம் எடுத்து திருமால் உலகை காப்பாற்றியதாக புராணங்கள் கூறுகிறது. சித்திரை மாத சுக்ல பட்சத்தில் பிரையோதது திதியில் ஹரியானவர் உலகத்தை காப்பதற்காக மீன் உருவம் எடுத்தார். இந்த அவதாரமானது கிரதயுகத்தில் நடந்ததாக கொள்ளப்படுகிறது.

குறிப்பாக பிரளய காலத்தில் மீனாக திருமால் அவதாரம் எடுத்து வேதங்களை அபகரித்துக் கொண்டு போய் கடலில் ஒழித்து வைத்திருந்த சோமுகாசுரனை கொன்று அளித்து வேதங்களை காப்பாற்றியதாக கூறுகிறது. மச்ச அவதாரத்தை குறித்து பற்பல மாறுபட்ட விளக்கங்கள் இருப்பினும் கரு ஒன்றே! வடிவங்கள் தான் வேறு வேறானவை. சத்திய கிரித யுகத்தில் பிரசாபதி என்னும் படைப்பு கடவுளான பிரம்மன் உறக்க மயக்கத்தில் கொட்டாவி விட்டபோது அவர் வாயிலிருந்து நான்கு வேதங்களும் வெளியே தோன்றின. அப்போது, அங்கு வந்த சோமுகாசுரன் என்னும் குதிரை முகம் கொண்ட அரக்கன் தன் யோக சித்தியினால் அந்த வேதங்களை களவாடி கடலுக்குள் புகுந்து அவற்றை ஒழித்து மறைத்து விட்டான். பிரம்மன் இந்த நிகழ்வை அறியாமல் ஆழ்ந்து தூங்கி விட்டார். வேதங்கள் தன்வசம் இல்லையேல் அவருக்கு படைப்பு (சிருஷ்டி) தொழிலை செய்ய இயலாது. உலகத்தில் சாரம் ஒழுங்காக நிறைவேற வேதத்தின் துணை மிக அவசியம்.
பிரம்மன் உறங்கும் போது தான் “பிரளயம்” எனப்படும் உலகின் எல்லா கடல்களும் பொங்கி எழுந்து ஆழிப் பேரலைகளால் உலகம் முழுவதும் தண்ணீரில் மூழ்கடிக்கப்படும். அதன் படியே, இம்முறையும் “மகா பிரளயம்” ஏற்பட்டு மூன்று உலகங்களும் கடல் நீரில் மூழ்கின. இந்த பிரளயம் ஏற்படுவதற்கு ஏழு நாட்களுக்கு முன் ஒரு நிகழ்வு நடந்தது. அது, சத்திய விரதன் எனப்படும் ஒரு திராவிட நாட்டு மன்னர் தீவிர திருமால் பக்தர். இவர் உணவு ஒன்றும் உட்கொள்ளாமல் தண்ணீரை மட்டும் அருந்தி திருமாலை வழிபட்டுக் கொண்டு வாழ்ந்து வந்தார்.
அனேக வியக்கத்தக்க நிகழ்ச்சிகளுக்குப் பின் ஒரு சூழ்நிலையில் இறைவன் திருமால் சத்திய விரதனிடம் உலகம் முடிவுறும் சமயம் ஏழு நாட்களில் வந்துவிடும். அப்போது, நான் ஒரு பெரிய படகை அனுப்புகிறேன். நீ உலகின் அனைத்து மரம், செடி, கொடிகள், வித்துக்கள் மற்றும் உயிரினங்களின் வகைக்கு ஒன்றாக, மாதிரியாக சேகரித்துக் கொண்டு படகில் சப்த உருசிகளுடன் ஏறிக்கொண்டு பிரளய காலத்தில் உலகம் நீரில் மூழ்கி கரும் இருட்டும், பெரும் சுழற் காற்றும் உள்ளபோது ஒரு திமிங்கலமாக ஒரு பெரும் கடலில் நான் தோன்றுவேன். சப்த உருசிகள் உனக்கு ஒளிமயமாக இருந்து வழி காட்டுவர்.
அப்போது, வாசுகியை (ஒரு தெய்வீக பாம்பு) கயிறாக பயன்படுத்தி (நானான) திமிங்கலத்தில் கொம்பில் (செதில்) படகை கட்டி விடு. கடும் சுழற்காற்றில் உன் படகு அலைகழிக்கப்பட்ட கவிழ்ந்து விடாமல் காப்பாற்றி தூங்கிக் கொண்டிருக்கும் பிரம்மன் விழித்தெழுந்து அழிந்த உலகை மீண்டும் உண்டாக்கும் வரை பெருங்கடலில் ஒரே சீராக படகோடு சஞ்சரித்துக் கொண்டிருப்பேன் என்று அருளினார். அவ்வாறே எல்லாம் நடந்தேறியது. பிரம்மனின் தூக்கம் கலைந்தது. உலகத்தை கவ்வியிருந்த இருட்டு விலகி ஒளிப்படலங்கள் தோன்றின. ஓயாது பெய்த மழையும் நின்றது. பொங்கிப் பெருகிய தண்ணீர் வடிய ஆரம்பித்தது! திமிங்கலமாகவே இருந்த திருமாலும் படகை கரை சேர்த்தார். சத்திய வரதன் அந்நேரம் பிரம்மனை புது சிருஷ்டிக்காக அழிவுற்ற உலகில் மீண்டும் உயிரினங்களின் தோற்றத்திற்காக தொழுது வழிபட்டார்.
பிரம்மன் அவர் முன்பு தோன்றி அவர் கோரிக்கையை ஏற்று தம் சிருஸ்டியை தொடங்க நினைத்தபோது தான் வேதங்கள் அவரிடமிருந்து களவாடப்பட்ட விவரம் அவருக்கு தெரிந்தது. செய்வதறியாமல் காக்கும் கடவுளான திருமாலை நோக்கி தியானம் செய்தார். அது சமயம் மீனாகவே இருந்த இறைவன் வேதங்களை அயங்கிரீவன் கடலுக்குள் ஒளித்து வைத்திருப்பதை அறிந்து இடுப்பிற்கு கீழ் மீன் உருவமும் இடுப்பின் மேற்புறம் ஆயுதங்களோடு கூடிய நான்கு கைகளுடனும் உறுகொண்டு கடற் வெள்ளத்துக்குள் புகுந்தார். அங்கு, அயங்கிரீவனை கண்டு அவனுடன் போர் புரிந்து அவனைக் கொன்று வேதங்களை மீட்டு மீண்டும் பிரம்மனிடம் ஒப்படைத்து மறுபடியும் சிருஷ்டியை தொடங்கும் படி சொன்னார். பிரம்மனும் தன் கடமையான படைப்புத் தொழிலை செய்யத் தொடங்கினார். இதுவே, மச்ச அவதாரத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட சுருக்கக் கதை ஆகும்.
இரண்டாவது அவதாரத்தை நாளை பார்ப்போம் மக்களே!
– பா.பத்மாவதி








Comments are closed, but trackbacks and pingbacks are open.