இந்திய விவசாயிகளை காவு வாங்கும் கார்ப்பரேட் காவாலிகள்! ‘மருதம்’ பேசும் பகீர் உண்மை!
‘அறுவர் பிலிம்ஸ்’ பேனரில் சி.வெங்கடேசன் தயாரித்து வரும் அக்டோபர் 10-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீசாகிறது ‘மருதம்’ என்ற படம். அடையாறு திரைப்படக் கல்லூரில் டைரக்ஷன் கோர்ஸ் முடித்து இயக்குனர்கள் ஷரவண சுப்பையா, ‘சாட்டை’ அன்பழகன், மோகன்ராஜா, தெலுங்கு இயக்குனர் ‘பொம்மரிலு’ பாஸ்கர் ஆகியோரிடம் உதவி, இணை இயக்குனராக பணியாற்றிய கஜேந்திரன் என்பவர் இப்படத்தின் மூலம் இயக்குனராகியுள்ளார். இயக்குனராகும் முயற்சி கைகூடும் வரை, எஸ்.ஆர்.எம்.கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஸன் டிபார்ட்மெண்டில் பேராசிரியராகவும் வேலை பார்த்துள்ளார், பார்த்துக் கொண்டும் இருக்கிறார். இவருக்கு கல்லூரி நிர்வாகம் பெரிதும் உறுதுணையாக இருக்கிறது.
இப்படிப்பட கஜேந்திரன், இந்திய விவசாயிகளைச் சுரண்டிக் கொழுத்து, அவர்களையே காவு வாங்கும் கார்ப்பரேட் காவாலிகளை ‘மருதம்’ மூலம் தோலுரித்துள்ளார். மனித சமூகத்தின் ஆணிவேரான விவசாயிகளின் வாழ்வியலையும் துன்பங்களையும் பேசும் இப்படத்தின் நாயகனாக விதார்த், நாயகியாக ரக்ஷனா, மற்ற கேரக்டர்களில் அருள்தாஸ், மாறன், ஷரவண சுப்பையா, ‘தினம்தோறும்’ நாகராஜ், மாத்யூ வரகீஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.
படத்தின் ஒளிப்பதிவு : அருள் சோமசுந்தரம், இசை : என்.ஆர்.ரகுநந்தன், எடிட்டிங் : பி.சந்துரு, பாடல்கள் : நீதி, எக்ஸ்கியூட்டிவ் தயாரிப்பாளர் : ஜெயக்குமார், பி.ஆர்.ஓ : ஏ.ராஜா.
அக்டோபர் 10-ஆம் தேதி ‘மருதம்’ ரிலீசாவையொட்டி, படத்தின் பாடல்க்ள் & டிரெய்லர் வெளியீட்டு விழா, செப்டம்பர்.27—ஆம் தேதி சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.
அனைவரையும் வரவேற்றுப் பேசி, படத்திற்கு ஆதரவும் ஊக்கமும் தந்து உதவும்படி மீடியாக்களுக்கு வேண்டுகோள் வைத்து, படத்தின் கலைஞர்கள், தொழிநுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி சொன்னார் படத்தின் தயாரிப்பாளர்.
ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்க சம்மதித்ததையும் கேரக்டருக்கு தேவையென்றால் எத்தனை குழந்தைகளுக்கும் தாயாக நடிப்பேன் என்பதையும் மனப்பூர்வமாக சொன்னார் ஹீரோயின் ரக்ஷனா.
‘சிட்டிசன்’ படத்தில் தன்னிடம் ஏழாவது அசிஸ்டெண்டாக சேர்ந்து, இப்போது மருதம் மூலம் இயக்குனராகியுள்ள கஜேந்திரனின் திறமையை வெகுவாக பாராட்டிப் பேசினார் டைரக்டர் ஷரவண சுப்பையா. ”இந்த பூமியில் நல்லவனாக, உண்மையானவனாக அதிலும் விவசாயியாக இருப்பவனை கார்ப்பரேட் காவாலிப்பயலுக எப்படி சாகடிக்கிறான் என்பதை நேர்மையுடன் பதிவு செய்துள்ளார் கஜேந்திரன்” என்றார் ஷரவண சுப்பையா.
இயக்குனர்கள் ‘சாட்டை’ அன்பழகன், பத்ரி வெங்கடேஷ் ஆகியோரும் கஜேந்திரனின் ‘மருதம்’ கதையையும் படம் வெற்றி பெற வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்திப் பேசினார்கள்.
பத்து வருடங்களுக்கு முன்பே கஜேந்திரன் தன்னை வைத்து குறும்படம் இயக்கியதையும் இப்போது மருதம் படத்தில் நடிப்பதையும் பெருமையுடன் நினைவு கூர்ந்தார் அருள்தாஸ்.
எஸ்.ஆர்.எம்.கல்லூரி சார்பில் ராமாபுரம் கேம்பஸ் தலைவர் திருமகன், இசையமைப்பாளர் என்.ஆர்.ரகுநந்தன் ஆகியோர் படத்தின் சிறப்பு குறித்து சிலாகித்துப் பேசினார்கள்.
ஹீரோ விதார்த், “இந்தக் கதை ராணிப்பேட்டை பகுதியில் கஜேந்திரனின் நண்பர்களுக்கு உறவினர்களுக்கு நடந்த உண்மைச் சம்பவம். இந்தியா முழுவதும் விவசாயிகளுக்கு நடக்கும் அநீதியைப் பேசும் படம் இது. அவசியம் சொல்ல வேண்டிய கதை என்பதால் நான் உட்பட யாருமே சம்பளத்தைப் பற்றி பெரிதாக நினைக்கவில்லை. மீடியாக்களின் பேராதரவு இருந்தால் இப்படம் மாபெரும் வெற்றி பெறும்” என்றார்.
டைரக்டராகும் வாய்ப்பு கிடைக்கும் வரை தனக்கு பொருளாதார ரீதியாக உதவி செய்த தனது உடன்பிறந்த அண்ணனை மேடையேற்றி நன்றி சொன்னார் டைரக்டர் கஜேந்திரன். அதே போல் தனக்கு வாய்ப்பும் வாழ்வும் கொடுத்த தயாரிப்பாளர் வெங்கடேசன், இந்தக் கதையில் நடிக்க ஒத்துக் கொண்ட விதார்த், ஹீரோயின் ரக்ஷனா, மற்ற நடிகர்கள், டெக்னீசியன்கள் , தயாரிப்பு நிர்வாகிகள், உதவி இயக்குனர்கள், குறுகிய காலத்தில் இந்த புரமோவுக்கு ஏற்பாடு செய்து சப்போர்ட்டாக இருந்த பி.ஆர்.ஓ.ராஜா ஆகியோருக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியைச் சொன்னார் டைரக்டர் கஜேந்திரன்.
— ஜெடிஆர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.