113 ஆண்டுகள் பழமையான தேவாலயம் புதிய இடத்திற்கு மாற்றம்!
பொதுவாக நம்ம ஊர்களில் புதிதாக நெடுஞ்சாலைகள் அல்லது சுரங்க பாதைகள் போடும்போது அங்க இருக்குற கட்டடங்களை இடிச்சு தரமாட்டம் ஆகிட்டு போடுறது தான் வழக்கம். ஆனா ஸ்வீடனின் ஆர்க்டிக் பகுதியில் தரை இடிவு (landslide) மற்றும் நிலத்தடி இரும்புத்தாது சுரங்க விரிவாக்கத்தால் அங்கு இருக்கிற புகழ்பெற்ற கிறூனா தேவாலயத்தை இடிக்காமல் நவீன முறைகள் மூலம் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு இடம் மாற்றம் செய்து வைத்திருக்கிறார்கள். 600 டன் எடையுள்ள, 113 ஆண்டுகள் பழமையான இந்த மரக் கட்டடம், சிறப்பு வாகனத்தில் ஏற்றப்பட்டு சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புதிய கிறூனா நகர மையத்திற்கு வெறும் இரண்டு நாட்களில் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த தேவாலயம், ஸ்வீடனின் மிகப்பெரிய மரக் கட்டடங்களில் ஒன்றாகவும், மிக அழகான கட்டடங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. இதுவரை இருந்த இடத்தை விட்டு தேவாலயம் நகர்த்தப்படுவதால், மக்களிடையே கலவையான உணர்வுகள் நிலவுவதாக கூறப்படுகிறது. இந்த தேவாலயம் மட்டுமல்லாமல் மொத்தம் 3,000க்கும் அதிகமான வீடுகள் மற்றும் பல பொதுக் கட்டங்கள் புதிய நகர மையத்திற்கு மாற்றப்படுகின்றன. சில கட்டடங்கள் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்படுகின்றன.
சில கட்டடங்கள் தேவாலயம் போல முழுமையாக மாற்றப்படுகின்றன. இந்த சுரங்க நிறுவனம் எல்கேஏபி (LKAB) இதற்காக கடந்த ஒரு வருடமாக சாலை விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் ஐரோப்பாவின் இரும்புத்தாதுவில் 80% உற்பத்தி செய்யும் எல்கேஏபி நிறுவனம், இந்த நகர மாற்றத்தால் சுரங்கத்தை பல தசாப்தங்கள் நீட்டிக்கத் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
— மு. குபேரன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.