10 கிலோ தங்கம் … வடமாநில கொள்ளையர்களை தட்டித் தூக்கியது எப்படி ? திகில் ஸ்டோரி !
10 கிலோ தங்கம் … வடமாநில கொள்ளையர்களை தட்டித் தூக்கியது எப்படி ? திகில் ஸ்டோரி !
தமிழகமே திரும்பிப் பார்க்கும் வகையில் தரமான சம்பவத்தை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள், எஸ்.பி. செல்வநாகரத்தினம் தலைமையிலான திருச்சி மாவட்ட போலீசார்.
திருச்சி – சமயபுரம் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்ட காரில் இருந்தவர்கள் மீது மிளகாய்பொடி வீசி அவர்களிடமிருந்து சுமார் 10 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற வடமாநில கொள்ளையர்களை கொத்தாக தட்டித் தூக்கியிருக்கிறார்கள்.

கடந்த செப்-13 ஆம் தேதி இரவு சுமார் 8 மணி அளவில் திருச்சி மாவட்டம் சமயபுரத்தையடுத்து எஸ்.ஆர்.எம். கல்லூரி அருகில் இயற்கை உபாதை கழிப்பதற்காக காரில் பயணித்தவர்கள் காரை ஒரமாக நிறுத்தியிருக்கிறார்கள். அந்த காரை பின் தொடர்ந்து வந்த கும்பல் ஒன்று, கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்களின் கண்களில் மிளகாய்ப்பொடியைத் தூவி தாக்கிவிட்டு, அவர்கள் காரில் வைத்திருந்த 10 கிலோ தங்க நகைகளுடன் மாயமானது. போலீசு கேஸானது.
தலைவலியாக மட்டுமல்ல; சவாலாக மாறிய வழக்கு !
ஒரே நாளில் இரண்டு முறை கூட தங்கத்தின் விலை ஏறிக்கொண்டே இருக்கும் நிலையில், அதுவும் ஒரு கிராம் ரெண்டு கிராம்னு கிராம் கணக்குல தங்கத்தை சேர்க்கிறதுக்கே பெரும்பாடு படும் நிலையில், சுளையா 10 கிலோ தங்க நகைகள் கொள்ளை போன சம்பவம் ஊடகங்களில் தலைப்பு செய்தியானது. திருச்சி மாவட்ட போலீசாருக்கு தலைவலியாக மட்டுமல்ல; சவாலான பணியாகவும் மாறியது.
வீடியோ லிங்
சென்னையை சேர்ந்த தங்கநகை வியாபாரி குணவந்த் என்பவர், தன்னிடம் பணியாற்றும் ஊழியர்கள் மகேஷ் ராவல் மற்றும் தினிஷ் ராவல் ஆகியோருடன் கோயம்புத்தூர், மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் தங்க நகை சில்லரை விற்பனையாளர்களிடம் விற்பனை செய்தது போக மீதமுள்ள சுமார் 10 கிலோ தங்க நகைகளோடு சென்னைக்குத் திரும்பியபோதுதான் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க கார் ஓட்டுநர் பிரதீப் ஜாத் சாலையோரம் காரை நிறுத்திய போது இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

வழக்கம்போல, போலீசாரின் முதற்கட்ட விசாரணையிலேயே கார் ஓட்டுநர் பிரதீப்ஜாத் துணையோடுதான் இந்த கொள்ளை சம்பவம் நடந்திருப்பதை உறுதிபடுத்தியிருக்கிறார்கள். உடனடியாக, இலால்குடி டி.எஸ்.பி. தினேஷ்குமார் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் கருணாகரன், ரகுராமன், முத்தையன், குணசேகரன், கண்ணதாசன், வீரபாண்டியன் எஸ்.ஐ.க்கள் வினோத், ஜெகதீசன், ரியாஸ்கான், வேலழகன், சந்திரசேகர், ஜோதிலட்சுமி, அருண்குமார் மற்றும் காவல் ஆளிநர்கள் உள்ளிட்டு சுமார் 40 பேரை கொண்ட சிறப்புதனிப்படையை அமைத்து விசாரணையை முடுக்கிவிட்டார் எஸ்.பி. செல்வநாகரத்தினம்.
எல்லை கடந்தும் கெத்து காட்டிய தமிழக போலீசார் !
இதற்கிடையில், இலால்குடி டி.எஸ்.பி. தினேஷ்குமார் பணிமாறுதலில் சென்றுவிட, டி.எஸ்.பி. ராஜமோகன் தலைமையில் களமிறங்கிய தனிப்படை போலீசார் 6 மாநிலங்களில் தொடர்ந்த தேடுதல் வேட்டை, இரவு பகல் பாராத 25 நாட்கள், கடும் உழைப்பின் பலனாக, கொள்ளையில் ஈடுபட்ட வடமாநில கும்பல் 12 பேரையும் கூண்டோடு கைது செய்திருக்கிறார்கள்.
பிரதீப் ஜாட், மனோகர் ராம், பன்னாராம் தேவாசி (எ) வினோத், சொகைல்கான் (எ) முகமது சொகைல், கைலாஷ் , ஹனுமான் ஜாட், மங்கிலால், விக்ரம் ஜாட், மனிஷ் (எ) மனிஷ் சிரோகி, பரத் ராம், ராகேஷ், லட்சுமி தேவி என பெங்களூரில், சென்னையில், மகாராஷ்டிராவில் என அடுத்தடுத்து 12 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
எல்லாமே, இளம் குற்றவாளிகள் !
இதில், இந்த கொள்ளை சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட மங்கிலால் என்பவனின் வயது 22. மற்றொருவனான விக்ரம் ஜாட் வெறும் 17 வயதேயான சிறுவன். கைதான பன்னிரண்டு பேரில், இருவரைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் 25 வயதுக்கு கீழானவர்கள் என்பது பேரதிர்ச்சி. அதிலும், ராகேஷ், லட்சுமி தேவி ஆகியோர் கணவன் – மனைவி.
இந்த சிறப்பு நடவடிக்கையில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இன்னொரு தனிச்சிறப்பு, கொள்ளைப் போன நகையின் மதிப்பில் சுமார் 97% திரும்பக் கைப்பற்றியிருக்கிறார்கள் என்பது.

இந்த வழக்கில் முதல் நாள் முதல் இறுதி வரையில் என்ன நடந்தது என்பதை திருச்சி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்தித்திப்பில் எடுத்துரைத்த எஸ்.பி. செல்வநாகரத்தினம், இந்த வழக்கு விசாரணை அனுபவத்திலிருந்து சில விசயங்களை விழிப்புணர்வு செய்தியாகவும் பகிர்ந்திருக்கிறார்.
“முதலில் இதுபோன்று விலையுயர்ந்த பொருட்களை எடுத்துக்கொண்டு காரில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும். இரவு நேர பயணங்களை தவிர்க்க வேண்டும். பயணத்திட்டங்களை பிறரிடம் பகிர்வதை தவிர்க்க வேண்டும். கார் ஓட்டுநர் உள்ளிட்ட தன்னிடம் பணியாற்றும் நபர்களின் குற்றப்பின்னணி குறித்து கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். பயணங்களின் போது, எப்போதும் ஆள் நடமாட்டம் உள்ள பெட்ரோல் பங்குகள் ஹோட்டல்கள் போன்றவற்றில் மட்டுமே நிறுத்த வேண்டும். ” என்பதாக, சுட்டிக்காட்டியிருக்கிறார்.
மேலும், “இந்த காரில் நெம்பர் பிளேட் மாற்றப்பட்டிருக்கிறது. மாற்றப்பட்ட நெம்பர் பிளேட்டுக்கு பாஸ்ட்டாக் கார்டு விநியோகிக்கப்பட்டிருக்கிறது. கார் பற்றிய அசல் ஆவணங்களை சரிபார்க்காமல் யாரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.” என்ற எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார், எஸ்.பி.
சாத்தியமானது எப்படி ?
கொள்ளை போனது 10 கிலோ தங்கம். இதன் காரணமாகவே, தமிழகம் தழுவிய பரபரப்பு செய்தியாகியது. இது திருச்சி மாவட்ட போலீசாருக்கு ஏற்பட்ட முதல் தலைவலி. அடுத்து, அவர்கள் அனைவருமே வடமாநிலத்தை சேர்ந்தவர்கள். 6 மாநிலங்களுக்கு பயணித்து, அதுவும் 25 நாட்களில், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து கொள்ளையர்களையும் பிடித்திருக்கிறார்கள். ஒரு மாவட்டத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் போலீசார் பக்கத்து மாவட்டத்திற்கு விசாரணைக்கு சென்றாலே, பல சமயங்களில் அவர்கள் எதிர்பார்க்கும் ஒத்துழைப்பு கிடைக்காத சூழலில், மொழிப்பிரச்சினை, எல்லை பிரச்சினை இவற்றையெல்லாம் சமாளித்து, இது சாத்தியமானது எப்படி? இதுதான் இங்கே மையமான கேள்வியாகிறது.

”எஸ்.பி. செல்வநாகரத்தினம் இதற்கு முன்னதாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் எஸ்.பி.யாக பணியாற்றியபோது, இதுபோலவே சுமார் 2 கிலோ அளவுக்கு தங்க நகைகளை கொள்ளையடித்த கும்பலை நான்கு மாநில போலீசாரின் உதவியோடு சுற்றி வளைத்து பிடித்திருக்கிறார். களவுப்போன நகையில் குண்டுமணி அளவு குறையாமல் மீட்டிருக்கிறார். அந்த முன் அனுபவமும் இந்த வழக்கில் எஸ்.பி.க்கு கை கொடுத்தது” என்கிறார்கள், போலீசு வட்டாரத்தில்.
“அதுமட்டுமல்ல; எஸ்.பி. செல்வநாகரத்தினம் டபுள் கேடர் ஐ.பி.எஸ். அதிகாரி. முதல்முறை யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதி மணிப்பூர் கேடரில் சில ஆண்டுகள் பணியாற்றியவர். பின்பு மீண்டும் யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதி தமிழக கேடருக்கு மாறியவர். அந்த வகையில் இரண்டு பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மத்தியில் அவருக்கு தனிப்பட்ட பழக்கம் இருக்கிறது. வடமாநிலங்களில் பணியாற்றிய அனுபவத்தில், தமிழ், ஆங்கிலம் அடுத்து இந்தி மொழியிலும் சரளமாக பேசக்கூடியவர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் ஒவ்வொருவரிடமும் அவரே இந்தி மொழியில் நேரடியாக விசாரணையை நடத்தினார்.

பல்வேறு மாநிலங்களில் பணியாற்றும் தனது பேட்ச் அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு அவர்களின் உதவியை கோரினார். தமிழகத்திலும் உயர் அதிகாரிகளிடம் இந்த விசயங்களை கொண்டு சென்று அவர்களிடமிருந்தும் சில தனிச்சிறப்பான அனுமதிகளை வாங்கினார். நள்ளிரவு 2 மணிக்கு தனிப்படை போலீசார் அழைத்தாலும் அழைப்பை ஏற்று உரிய வழிகாட்டுதல்களை வழங்கினார். டீமை தட்டிக் கொடுத்து வழிநடத்தினார்.” என்பதாக சொல்லும்போதே சிலாகித்து பேசுகிறார்கள் போலீசு வட்டாரத்தில்.
திருச்சி மாவட்ட போலீசு வரலாற்றில் முதல்முறையாக … என்பதாக மட்டுமின்றி, தமிழக போலீசாரின் தனித்துவம் வாய்ந்த சக்சஸ் ஸ்டோரிகளுள் ஒன்றாகவும் சேர்ந்துவிட்டது இந்த வழக்கு விவகாரம்.
ஆதிரன்.
வீடியோ லிங்
Comments are closed, but trackbacks and pingbacks are open.