மேயர் போட்டோஷூட் மட்டுமே நடத்துகிறார் !
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியில் மூன்று மாதங்களுக்கு பின் நடைபெற்ற மாமன்றக் கூட்டம் மேயர் சங்கீதா தலைமையில், துணை மேயர் பிரியா மற்றும் ஆணையர் சரவணன் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் மொத்தம் 173 தீர்மானங்கள் முன்மொழியப்பட்டன. கூட்டம் தொடங்கியவுடன் திமுக கவுன்சிலர் பாக்யலட்சுமி, மாநகராட்சி சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞரை நீக்க வேண்டும் என 30 கவுன்சிலர்கள் கையெழுத்திட்டு மனு அளித்தார். மூன்று ஆண்டுகளாக நீடித்து வரும் பூங்கா பிரச்சினையில், மாநகராட்சி ஆக்கிரமிப்பாளருக்கு ஆதரவாக தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து ஆணையர் சரவணன் விளக்கமளித்தபோது, வழக்கறிஞரை நீக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தீர்மானத்தில் ஏற்பட்ட பிழை சரிசெய்யப்படும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து திமுக கவுன்சிலர் ஶ்ரீநிகா பேசியபோது, ஆண்டுக்கு நான்கு கூட்டங்கள் மட்டுமே நடத்தப்படுவதால் மக்களின் பிரச்சினைகள் பேச முடியவில்லை என கூறினார். மேலும், “மேயர் கடந்த நான்கு ஆண்டுகளாக எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் மேற்கொள்ளாமல், போட்டோஷூட் நடத்துவதிலும் தன்னை விளம்பரப்படுத்துவதிலும் மட்டுமே ஆர்வம் காட்டி வருகிறார்.
மேயர் பதவியை உடனடியாக விட்டு விலக வேண்டும். மீதமுள்ள ஒரு ஆண்டில் நல்லவர்கள் மேயராக வரட்டும்” என வலியுறுத்தினார். இதையடுத்து கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால், எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் கூட்டம் பாதியிலேயே முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. மேயர் சங்கீதா கூட்டத்தை விட்டு வெளியேறியதால், கூட்டம் கலைக்கப்பட்டது.
— மாரீஸ்வரன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.