பட்டா வில் திருத்தம் செய்ய இரண்டு இலட்சம் இலஞ்சம்! கைதான தாசில்தார்!
பட்டாவில் திருத்தம் செய்ய இரண்டு இலட்சம் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் தாசில்தார் கைது செய்யப்பட்ட விவகாரம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டையை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவரது உறவினருக்கு சொந்தமான நிலம், திருச்சி கே.சாத்தூரில் இருக்கிறது. 11070 சதுர அடி கொண்ட அந்த நிலத்திற்கான வருவாய்த்துறை பதிவில் தவறுதலாக, “ஆணையர், திருச்சி மாநகராட்சி” என்பதாக இருந்திருக்கிறது.
இந்த பிழையை நீக்கி தமது பெயருக்கு பட்டாவை மாற்றித் தருமாறு திருச்சி வருவாய் கோட்டாட்சியருக்கு விண்ணப்பித்து இருக்கிறார். இந்த மனுவை பரிசீலித்த கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளரும் வட்டாட்சியருமான அண்ணாதுரை என்பவர், இந்த காரியத்தை அலைச்சல் இன்றி கச்சிதமாக முடிக்க இரண்டு இலட்சம் ரூபாய் இலஞ்சம் கேட்டிருக்கிறார்.
வழக்கம்போல, இலஞ்சம் கொடுக்க விரும்பாத கிருஷ்ண குமார், திருச்சி மாவட்ட இலஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் முறையிட்டிருக்கிறார்.
திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவின் துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையிலான போலீசாரின் வழிகாட்டுதலில், பவுடர் தடவிய நோட்டுகளை இலஞ்சமாக பெறும் போது கையும் களவுமாக பிடிபட்டிருக்கிறார் தாசில்தார் அண்ணாதுரை. அலுவலகத்தில் நடைபெற்ற விசாரணையையடுத்து துவாக்குடி அண்ணா வளைவில் உள்ள அவரது இல்லத்திலும் போலீசாரின் விசாரணை தொடர்கிறது.
— அங்குசம் செய்தி பிரிவு








Comments are closed, but trackbacks and pingbacks are open.