முதலாளித்துவப் பணி கலாச்சாரத்திற்கு பலியான மற்றொரு இளம் மருத்துவர்…
திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த , முதுநிலை அறுவை சிகிச்சை துறையின், முதுநிலை மருத்துவ மாணவர் டாக்டர் விஜயகுமார்.
எமது அஞ்சலி. ஆழ்ந்த இரங்கல்.
இளம் மருத்துவர்களின் வேலை பளு மற்றும் மனிதநேயமற்ற பணிச் சூழல் என்பது மிகவும் ஆழமான சமூகப் பொருளாதாரப் பிரச்சினையாகும்.
இதை , லாப நோக்குடைய , நமது முதலாளித்துவ சமூகத்தின் மருத்துவக் கட்டமைப்பு அதிகப்படுத்திக் கொண்டே வருகிறது.
குறைந்த மருத்துவர்களை வைத்துக் கொண்டு கூடுதல் வேலையை வாங்க வேண்டும்.
மருத்துவர்களுக்கான ஊதியச் செலவை குறைக்க வேண்டும் என்ற நோக்கம் இந்நிலைக்குக் காரணம்.
இதற்கு அடிப்படையாக இருப்பது , முதலாளித்துவ உழைப்புச் சுரண்டல் முறைதான்.
அதாவது, கூலி அடிமை முறைதான்.
அந்த மாடல் , இந்த மாடல் என, எந்த மாடல் பெயரைச் சூட்டிக் கொண்டாலும் , சாராம்சத்தில் , நமது மருத்துவ மாடலும் ” கூலி அடிமை முறை” மாடல் தான்.
அந்நிய மூலதனத்தை ஈர்ப்பது உட்பட ,மூலதன ஈர்ப்பால் வேலை வாய்ப்பை பெருக்குவதாகக் கூறப்படுகிறது.
ஆனால், உண்மை என்னவெனில்…
மூலதன பெருக்க விகிதத்திற்கு ஏற்ப வேலை வாய்ப்புகள் பெருகுவதில்லை.
மூலதன பெருக்கத்தின் விகிதத்திற்கு ஏற்ப தொழிலாளர் நலன் மேம்படுவதில்லை.
இது முதலாளித்துவத்தில் , முதலாளிகளின் லாப வேட்கை உருவாக்கும் இழி நிலை.
அதாவது, முதலாளிகள் மேலும் மேலும் லாபம் பெற, மூலதனத்தை குவிக்க , மேலும் மேலும் மூலதனத்தை முதலீடு செய்வார்கள்.
அவ்வாறு செய்யும் பொழுது, உற்பத்திச் சாதனங்களுக்கான முதலீடை ,அதாவது மாறா மூலதனத்தை ( Constant Capital ) அதிகரித்துக் கொண்டே செல்வார்கள்.
அதே சமயம், உழைப்புச் சக்தியை வாங்குவதற்கான மாறும் மூலதனத்திற்கான (Variable Capital ) முதலீட்டு விகிதத்தை குறைத்துக் கொண்டே செல்வார்கள்.
அவ்வாறு செய்வதின் மூலம் தங்கள் , உழைப்புச் சுரண்டலை தீவிரப் படுத்தி தங்கள் லாபத்தை மேலும்,மேலும் அதிகரித்துக் கொள்ள முடியும்.
அதே சமயம், வேலை இன்மை பெருகும்.வேலை இழப்பு பெருகும். உழைப்புச் சுரண்டல் தீவிரமாகும்.
இன்று நமது முதலாளித்துவ அரசின் மருத்துவத் துறையிலும் இது தான் நடைபெறுகிறது.
புதிய மருத்துவமனைகள் உருவாகின்றன. ஆனால் அதற்கேற்ப புதிய பணியிடங்கள் உருவாக்கப்படுவதில்லை.
மருத்துவத்துறைக்கான முதலீடு அதிகரித்தாலும், அந்த அதிகரிப்பு விகிதத்திற்கேற்ப , ஊழியர்களின் ஊதியம், வாழ்க்கை நிலை மேம்படுவதில்லை.
இந்தப் போக்கை ஊக்கப்படுத்துவது, சர்வதேச நிதி மூலதனமும் , உலக வங்கியும் தான்.
இவைகளின் லாபம் பெருகுகிறது.
நமது மருத்துவர்களின், ஊழியர்களின் வாழ்வு சீரழிகிறது.
இளம் மருத்துவர்களின் பணிச்சுமை அதிகரிக்கிறது.
அவர்களின் தற்கொலைகளும் அதிகரிக்கிறது.
மருத்துவ மாணவர்களே, மருத்துவர்களே ,
நமது பிரச்சனைகளைப் பற்றியும் புரிந்து கொள்ள
“மார்க்சியம் – லெனினியம்” படியுங்கள்.
— டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்








Comments are closed, but trackbacks and pingbacks are open.