பிரம்படி படிப்பை தராது….
ஆசிரியர்கள் கையில் இருந்து பிரம்பை பிடுங்கிய பிறகும் இந்த காட்சி என்றால் சட்டம் வருவதற்கு முன்பு எவ்வளவு கோரமாக இருந்திருக்கும்.
கல்வியை கொண்டாட்டமாக மாற்ற வேண்டும். அதற்கு ஆசிரியர்கள் கையில் பிரம்பு தேவையில்லை. அன்பும் பொறுப்புணர்வும் மட்டுமே வேண்டும்.
நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பொழுது மகிழ்ச்சியாக வகுப்புக்கு போனதாக அறியவில்லை.
ஒவ்வொரு நாளும் பெரும் பயத்தோடு தான் பள்ளிக்குச் சென்று இருக்கிறேன். காரணம் மிகக் கொடுமையாக தண்டனை கொடுக்கும் தலைமை ஆசிரியர்.
அவரிடம் பல நற்பண்புகளும், கற்றுத் தரும் நுணுக்கமும், மாணவர்களிடம் தலைமை பண்பை வளர்க்கும் ஆற்றலும் பெற்றிருந்தாலும் அவரின் மிகக் கொடுமையான தண்டனைகள் வகுப்பறை மீதான அதீத வெறுப்பை உருவாக்கி வைத்திருந்தது.
அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்று அந்த ஆசிரியர் இன்று பள்ளிக்கு வரக்கூடாது என்று வேண்டிக் கொள்ளும் அளவிற்கு அவரின் தண்டனைகள் இருக்கும்.
ஆனால் அதே பள்ளியில் பணியாற்றிய மற்ற ஆசிரியர்கள் மிகக் கனிவோடு மாணவர்களை நடத்துவார்கள்.
இணைக்கப்பட்டுள்ள படத்தில் உள்ள மாணவரை அடித்து துன்புறுத்திய ஆசிரியர் நல்லாசிரியர் விருது பெற்றவர் என்று சமூக வலைதளத்தில் இன்னொரு ஆசிரியர் Maha Lakshmi பதிவிட்டு இருக்கிறார்.
ஆசிரியர்களே விண்ணப்பித்து நல்லாசிரியர் விருது பெறுவதை அரசுகள் மீள்பார்வை செய்ய வேண்டும். நல்லாசிரியர் விருதுக்கு உரிய ஆசிரியரை தேர்வு செய்வதற்கு முன்பு அவர் நடத்தும் வகுப்பில் படிக்கும், படித்த மாணவர்களின் கருத்தை கேட்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு மாணவரை தாக்கிய ஆசிரியருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும். அவருக்கு வழங்கிய நல்லாசிரியர் விருதை திரும்பப் பெற வேண்டும்.
— ஆசிரியர் மெய்ச்சுடர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.