விதிமீறி அமைக்கப்படும் கல்குவாரிகள் ! எதிர்ப்பு தொிவித்த பொதுமக்கள்!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா தாயில்பட்டியில், குமரப்பன் கல்குவாரி அனுமதி குறித்து நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று பரபரப்பாக நடந்து முடிந்தது.
இதில் அரசு விதிகளை மீறி அனுமதி பெற முயற்சி செய்யப்படுவதாகக் கூறி, அப்பகுதி பொதுமக்கள் மற்றும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன், விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில துணைத்தலைவர் நேதாஜி, சமூக ஆர்வலர் ஜோயல் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
காலை 11 மணிக்கு நடக்க இருந்த கூட்டம், கோட்டாட்சியர் கனகராஜ் தாமதமாக வந்ததால் மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது. நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு “சட்ட விரோத குவாரி வேண்டாம்” என கோஷமிட்டனர்.
கல்குவாரி விதிமீறல் மோசடி குறித்து பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் சிலர், குவாரி புலங்களில் பல சட்ட மீறல்கள் நடந்துள்ளன என ஆவணங்களுடன் வெளிப்படுத்தினார்.
அதில் குவாரி புலத்திற்குள் ஓடை, கண்மாய், மின்கோபுரம் இருப்பது,
300 மீட்டர் சுற்றளவில் அய்யனார் கோவில், பட்டாசு தொழிற்சாலை அமைந்திருப்பது,
500 மீட்டர் தூரத்தில் நீர்த்தேக்கத் தொட்டி,
ஆழ்குழாய் கிணறு இருப்பது,
அனுமதி பெறும் தேதிக்கும் முன்பே சுற்றுச்சூழல் ஆய்வு நடந்தது,
மாசுக் கட்டுப்பாட்டு வாரிய இணையத்தில் ஆவணங்கள் பதிவேற்றம் செய்யாதது,
வெடி மருந்து வெடிப்பால் வீடுகளில் விரிசல், பசுமை மரங்கள், பாதுகாப்பு வேலி இல்லாமை,
“ஒரு விதிமீறல் இருந்தாலே அனுமதி வழங்க முடியாது; ஆனால் இங்கு இருபதுக்கும் மேற்பட்ட சட்டவிரோதங்கள் உள்ளன” என வலியுறுத்தினார்.
சமூக ஆர்வலர்கள் சிலர் பேசத் தொடங்கியவுடன், கல்குவாரி உரிமையாளர்களின் ஆதரவாளர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் சில நிமிடங்கள் பதட்டமான சூழ்நிலை நிலவியது.
“உண்மையைச் சொல்ல விடாமல் தடுக்கிறீர்கள்; இது கருத்து கேட்பு கூட்டமா? கலவரமா?” என கோட்டாட்சியரை நோக்கி பொதுமக்கள் கேள்வி எழுப்பினார்.
பெண்கள், விவசாயிகள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கல்குவாரி அனுமதிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
“எங்கள் நிலம், நீர், வாழ்வு காக்க வேண்டும் – சட்ட விரோத குவாரி வேண்டாம்” என முழக்கமிட்டனர்.
— மாரீஸ்வரன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.