இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும். (குறள் – 448)
“நல்லது செய்யும் ஓர் அரசு அல்லதை செய்யும் நேரத்தில் அதில் உள்ள குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும்” என்று திருக்குறளுக்கு உரை எழுதிய திமுகவின் தலைவர், முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி என்று குறிப்பட்டுள்ளார்.
கடந்த வாரத்தில் 4 நாள்கள் தமிழ்நாடு சட்டமன்றத்தின் கூட்டத் தொடர் நடத்தப்பட்டது. நான்காவது நாளில், தமிழ்நாட்டில் உள்ள தனியார் கல்லூரிகள் (உதவிபெறும் மற்றும் சுயநிக் கல்லூரிகள்) பல்கலைக்கழகமாக மாற்றிக் கொள்ள வகையும் பழுப்புப் பல்கலைக்கழகச் சட்டம் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. இப்பல்கலைக்கழகத்தால் தமிழ்நாடு உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உள்கட்டுமானங்கள் உயரும். குறைந்தக் கல்விக் கட்டணம் மற்றும் இடஒதுக்கீடு நடைமுறை செய்தல் போன்றவற்றை அரசு கண்காணிக்கும் என்று தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்பு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் எந்தவொரு தனிநபரும், தனியார் நிறுவனங்களும் ‘பச்சைப் பல்கலைக்கழகம்’ என்னும் புதிய பல்கலைக்கழகத்தைத் தொடங்கலாம். அதற்கான தடைகள் எதுவும் கிடையாது. அப்படி தமிழ்நாட்டில் பல தனியார் பல்கலைக்கழங்கள் தொடங்கப்பட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அப்பல்கலைக்கழங்களில் இளநிலை (UG) பட்டப்படிப்பிற்கு பருவத்திற்கு ஒரு இலட்சமும் முதுநிலை (PG) பட்டப் படிப்பிற்கு 2 இலட்சமும் செலுத்திதான் படித்து வருகின்றனர். இது சட்டப்படியாக நடக்கின்றது என்பதில் இதை நாம் குறைசொல்லவில்லை.
ஆனால், தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ‘பழுப்புப் பல்கலைக்கழகம்’ என்பது தற்போது செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் / சுயநிதி கல்லூரிகளைப் பல்கலைக்கழகமாக மாற்றிக்கொள்ள வகை செய்கின்றது. இதில் பிரச்சனை என்னவென்றால், சுயநிதிக் கல்லூரிகள் பச்சைப் பல்கலைக்கழக முறையில் புதிதாகவே பல்கலைக்கழகத்தைத் தொடங்கிகொள்ள சட்டம் வகை செய்கின்றது. அரசு உதவிபெறும் கல்லூரிகளின் உள்ள அனைத்துக் கட்டமைப்பும் அரசின் நிதிஉதவியால் ஏற்படுத்தப்பட்டவையாகும். இக் கல்லூரிகள் பல்கலைக்கழகமாக மாறும்போது, அரசின் சொத்தாக உள்ள ஆயிரக்கணக்கான கோடிகளில் உருவாக்கப்பட்டவை தனியார் சொத்தாக கைமாறிவிடும் என்பதை அரசு உணரவில்லை என்பது புலப்படவில்லை.
உதவிப்பெறும்/சுயநிதிக் கல்லூரிகள் பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டுவிட்டால், அதற்கென்று துணைவேந்தர், பதிவாளர், தேர்வு நெறியாளர், ஆசிரியர்கள் அனைத்தையும் தனியாரே செய்வார். அப் பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு, ஆட்சிப் பேரவைக்குழு (செனட்) வழிகாட்டுதலின்படியே பல்கலைக்கழகம் செயல்படும். இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற அரசின் வேண்டுகோளைத் தனியார் பல்கலைக்கழகங்கள் ஏற்கலாம்/ஏற்காமலும் இருக்கலாம். இதற்கு மேலாக, எந்தப் பட்டப்படிப்பிற்கு வரவேற்பு உள்ளதோ அந்தப் படிப்பைப் பல்கலைக்கழகம் வளர்த்தெடுக்கும். எந்தப் பட்டப்படிப்பிற்கு வரவேற்பு குறைவோ அந்தப் படிப்பை பல்கலைக்கழகம் நிறுத்துவிடும். மேலும், அரசின் நிதி உதவி இல்லாத எந்த நிறுவனத்திலும் அரசு தலையீட முடியாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு தனியார் பல்கலைக்கழங்களைக் கொழுக்க வைத்துவிடும்.
இதையெல்லாம் ஆசிரியர்கள் சங்கங்கள், மாணவர் சங்கங்கள் அறிந்து இப்பழுப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தன. எதிர்ப்பு வலுக்கத் தொடங்கியவுடன் 25.10.25ஆம் உயர்கல்வி அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்களின் அறிவுரையின்படி, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பழுப்புப் பல்கலைக்கழகச் சட்டம் கைவிடப்படுகின்றது. ஆசிரியர்களின் கருத்தறிந்து செயல்படும்” என்று தெரிவித்துள்ளார். 2010ஆம் ஆண்டு இதுபோன்றதொரு தனியார் பல்கலைக்கழகச் சட்டத்தைக் கலைஞர் அரசு கொண்டுவந்தபோது அச்சட்டம் திரும்பப் பெறப்பட்டது. இந்த முன்நிகழ்வின் வரலாற்றைக்கூட அறியாமல் திராவிட மாடல் ஸ்டாலின் அரசு ஏழை, எளிய, தாழ்ப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எதிர்கால வாழ்வில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டது என்பது ஏற்கவியலாத ஒன்றாக உள்ளது.
திராவிட மாடல் அரசுக்கு ஆலோசனை சொல்வோர் சொல்வதே வேதவாக்கு என்று இனியும் முதல்வர் ஸ்டாலின் நம்பி ஆட்சியை இழந்துவிடக்கூடாது. ஒரு சட்டத்தை இயற்றும்போது அது தொடர்பான அனைத்து ஆலோசனைகளையும் செய்து சட்டத்தை நிறைவேற்றவேண்டும் என்பதே திராவிட மாடல் ஆட்சி மக்கள் ஆட்சியின் மாண்பைப் போற்றுகின்றது என்பதற்குப் பொருள் இருக்கும். பழுப்புப் பல்கலைக்கழகச் சட்டம் திரும்பப் பெறப்பட்டதற்கு முதல் அமைச்சருக்கும், உயர்கல்வித் துறை அமைச்சருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
— ஆதவன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.