பாஜக தலைவர் போட்டியிடும் “ஸ்டார் தொகுதியின்” தற்போதைய நிலைவரம் என்ன?
தமிழ்நாட்டிலேயே உருவாகி, தமிழ்நாட்டில் ஓடி கடலில் கலக்கும் சிறப்புப் பெற்ற ஜீவநதியான தாமிரபரணி இத்தொகுதியில் பாய்ந்து ஓடுகிறது. மேலும், இந்நதியால் வளம்பெறும் நெல் விவசாயமும், நெல்லையப்பர் கோவிலும் இத்தொகுதியின் முக்கிய அடையாளங்களாகும். சமீபத்தில் தமிழ்நாட்டின் பாஜக மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நயினார் நாகேந்திரன், சட்டமன்ற உறுப்பினராக உள்ள இந்தத் தொகுதி தற்போது “ஸ்டார் தொகுதி”யாக மாறியுள்ளது. இத்தொகுதியை தக்கவைத்துக்கொள்ள பாஜக–அதிமுக கூட்டணியும், வென்று காட்ட வேண்டும் என்ற தீவிர கால பணியில் திமுக கூட்டணியும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இத்தொகுதியில், திருநெல்வேலி மாநகராட்சியில் 20 வார்டுகளும், சங்கர்நகர், நாரணம்மாள்புரம் பேரூராட்சிகள் மற்றும் 58 ஊராட்சிகளும் இணைந்துள்ளன. இத்தொகுதியில் 1,47,016 ஆண்கள், 1,55,616 பெண்கள் மற்றும் 83 மாற்றுப்பாலினத்தவர் உள்ளிட்ட மொத்தம் 3,02,715 வாக்காளர்கள் உள்ளனர். இத்தொகுதியில் பிள்ளைமார், தாழ்த்தப்பட்டோர், தேவர், யாதவர் சமூகத்தினர் அதிகளவில் உள்ளனர்; மேலும் பேட்டை பகுதியில் கணிசமான முஸ்லிம் வாக்காளர்கள் வசித்து வருகின்றனர்.

தற்போது நடைபெற்று வரும் திமுக ஆட்சிக் காலத்தில், கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் புதிய சோலார் ஆலைகள், 1,679 கோடி ரூபாய் மதிப்பிலான தாமிரபரணி–கருமேனியாறு–நம்பியாறு இணைப்பு கால்வாய், 77 கோடி ரூபாய் மதிப்பிலான மெகா உணவுப் பூங்கா, புறவழிச்சாலை உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. சமீபத்தில் நெல்லையில் நடைபெற்ற ரோட் ஷோவில் முதலமைச்சருக்கு கிடைத்த பெரும் வரவேற்பு, திமுகவினருக்கு நல்ல நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன வழக்கில் மாநில அரசின் பக்கம் தீர்ப்பு வந்த நிலையிலும், ஆளுநர் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு டாக்டர் என். சந்திரசேகரனை நியமித்தது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை திமுக கையில் எடுக்க உள்ளது.

திருநெல்வேலி தொகுதி 1952 முதல் நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி மூன்று முறையும், 1967 முதல் திமுகவின் தொகுதியாகவும், பின்னர் 1977 முதல் அதிமுக உருவாக்கத்துக்குப் பின்னரும் அதன் கோட்டையாக விளங்கி வருகிறது. இடையில், அதிமுக பலவீனமாக இருந்த 1989, 1996, 2006 மற்றும் 2016 ஆண்டுகளில் மட்டும் திமுக வெற்றி பெற்றுள்ளது. கடந்த தேர்தலிலும், அதிமுக கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன், திமுக சட்டமன்ற உறுப்பினர் லெட்சுமனனை வென்று அக்கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது, அக்கட்சியின் மாநில தலைவராக உயர்ந்துள்ள நிலையில், 2001, 2011 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் வெற்றி பெற்ற இத்தொகுதியில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இத்தொகுதியில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் வேட்பாளர் தேர்தல் பெரிய மோதல்-தள்ளுமுள்ளு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட நயினார் வெற்றி பெற்றாலும், இத்தொகுதி அதிமுகவினரிடம் அதிருப்தி வெளிப்படையாகவே தெரிகிறது. சமீபத்தில், அதிமுக தலைமைக்கு நெல்லை மற்றும் பாளையங்கோட்டை கூட்டணி கட்சிகளுக்குத் ஒதுக்கக் கூடாது என திறந்த மடலை எழுதியுள்ளனர் இரத்தத்தின் இரத்தங்கள். முன்பு அதிமுக சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்தபோதும் நயினார் நாகேந்திரன் தொகுதிக்கும் கட்சிக்கும் பெரியதாக எதுவும் செய்யவில்லை என்று புகார் தெரிவிக்கின்றனர் அதிமுக-வினர்.

மேலும் கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட ஏற்பாடுகள் செய்திருந்த அக்கட்சியின் மாவட்ட செயலாளர் கணேசராஜா மாற்றுத்தொகுதியான நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடையவே, அதிமுகவினர் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். எனவே, நேரடியாக இத்தொகுதியில் அதிமுக களம் இறங்க வேண்டும் என ஏற்பாடுகளை செய்து வருகிறார் கணேசராஜா. இதற்கிடைய நயினார் கோவில்பட்டித் தொகுதியில் போட்டியிடுவார் என்று ஒரு செய்தி கிளம்பியவுடனே அவர் நேரடியாக மறுக்கவும் செய்துள்ளார். எனவே, இம்முறை கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் பிரச்சனை இருக்கலாம். அப்படியே, பாஜகவிற்கு தொகுதி சென்றாலும், அதிமுகவினரின் ஆதரவையும் ஓட்டுகளையும் பெறுவது எளிதாக இருக்காது.
திமுக சார்பில் இத்தொகுதியை கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற முனைப்பில் உள்ளனர், ஏற்கனவே கூறியதுபோல், இத்தொகுதியில் திமுக வெற்றிப்பெற்றது அனைத்தும் அதிமுக-வின் பலவீனமான நேரத்தில் மட்டுமே. கடந்த 2016ம் தேர்தலில் வெற்றிப்பெற்ற ஏ.எல்.எஸ்.லட்சுமணன், நயினாருடன் போட்டியிட்டு மிகக் குறைந்த வாக்குவித்தியாசத்திலேயே வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியிடும் பட்சத்தில், அவரை தோற்கடித்து பலத்தை காட்ட வேண்டும் என்று திமுக நினைக்கிறது. எனவே, இம்முறை நேரடியாகவே நெல்லை மேற்கு மாநகர பொறுப்பாளர் சுப்பிரமணியன் களம் இறக்கப்படலாம் என்று தொகுதியில் பேசப்படுகிறது. அவருக்கு அடுத்த வேட்பாளர் பட்டியிலில் முன்னாளர் எம்.எல்.ஏ., ஏ.எல்.எஸ்.லட்சுமணன் மற்றும் அடுத்த இடத்தில் 2006ம் தேர்தலில் வெற்ற மாலை ராஜா உள்ளனர். ஆனால், பலமான பாஜக–அதிமுக வேட்பாளர்களை எதிர்கொள்வதில் பிள்ளைமார் சமூகத்தை சார்ந்த சுப்பிரமணியன் களமிறங்குவது சரியாக இருக்கும் என்று உடன்பிறப்புகள் கருதுகின்றனர்.

தொகுதி பிரச்சினைகள்: தாமிரபரணி ஆற்றில் இருந்து வெள்ள நீர் கால்வாய் அமைத்து, மானுரிலிருந்து கங்கைகொண்டான் வரை, விவசாயம் மற்றும் குடிநீருக்கு பைப் லைன் குழாய் அமைத்து தர வேண்டும். தொழில் சார்ந்த தேவைகள், சிப்காட் தொலைவில் உள்ளது, சுத்தமல்லி பகுதியில் ஏற்படுத்தலாம். நெல்லையப்பர் கோவில் சாலை, ஆக்கிரமிப்பு பிரச்சனை சரிசெய்திட வேண்டும். ராமையன்பட்டி உரக்கிடங்கு பிரச்சனை சரி செய்ய வேண்டும், திருநெல்வேலி நகரத்தின் மேற்கு பகுதிகளில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பல கோரிக்கை உள்ளது.
— மணிபாரதி
 
			 
											







Comments are closed, but trackbacks and pingbacks are open.