“குண்டு போடும் தெரு” ஒரு சின்ன கேள்வியிலிருந்து வெடித்த அனுபவம்!-அனுபவங்கள் ஆயிரம் (4)
பலருக்குள்ளும் சில சின்னச்சின்ன கேள்விகள் இருக்கும்… குழந்தைத்தனமான, ஆனா மனசை விட்டு போகாத கேள்விகள்.
அதை யாரிடமாவது கேட்டால் உடனே வடிவேலு பாணியில் “என்ன சின்ன பிள்ளைத்தனமான கேள்வி ராஸ்கல்… போய் வேலைய பாரு!” ன்னு சொல்லிவிடுவாங்க!
அது மாதிரி தான் எனக்கும் ஒரு கேள்வி. நான் சேலம். சனிக்கிழமை தோறும் கோட்டை பெருமாள் கோவில் செல்வது வழக்கம்.
கோவில் செல்லும் வழியில் ஒவ்வொரு முறையும் ஒரு தெருவை கடந்து செல்வேன். அதுல ஒரு பெயர் பலகை எப்போதும் கண்களில் விழும் “Fire Gun Street” தமிழில் சொன்னா “குண்டு போடும் தெரு!”
அடா, ,ரூம் போட்டு யோசிச்சாங்களோ?
எப்போதும் மனசுக்குள்ள யோசனை “யாரிடயாச்சும் கேட்டுடலாமா?”
ஆனா கேட்டது இல்லை…
இப்போ தான் நினைச்சேன் “கூகிள் இருக்கே! அதைத்தான் கேட்டுப்பார்ப்போம்!”
கூகிள் சொன்ன கதை கேட்கணுமா?
அது வெறும் தெரு பெயர் இல்ல, பீரங்கி வரலாறு!
1760-1820 காலகட்டத்தில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி இந்த பகுதியில் ஒரு பீரங்கி கொண்டு வந்தது. அது சேலம் கோட்டையை பாதுகாக்க வைக்கப்பட்டது.
பிறகு கோட்டை இடிக்கப்பட்ட பின்பு, அந்த பீரங்கியை இப்போதைய குண்டு போடும் தெருவில் நிறுத்தினர்.
அதன் பின் என்னன்னா. அவர்கள் தினந்தோறும் நண்பகல் 12 மணிக்கு பீரங்கி வெடித்து நேரம் அறிவித்தாங்க!
அது பின் 1873க்குப் பிறகு இரவு 8 மணிக்கு வெடித்தது.
அப்போ அந்தக் குண்டின் சத்தத்துக்கே மக்கள் நேரம் பார்த்தாங்க!
“அடா 8 மணி ஆச்சு, பீரங்கி சத்தம் வந்துச்சு!”
அந்தக் காலத்து அலாரம் அதுதான்!
1950க்குப் பிறகு பீரங்கி ஓய்வுபெற்றது.
ஆனால் அந்தத் தெருவுக்கு பெயர் மட்டும் ஓய்வு பெறல!
அது இன்றும் பெருமையோடு “குண்டு போடும் தெரு” என்றே அழைக்கப்படுகிறது.
இப்போ அந்த தெருவை கடக்கும்போதெல்லாம் அந்த காலத்தில் மக்கள் இதை எப்படி எடுத்துக்கொண்டார்கள் , இப்போ இங்கு இருக்கும் மக்கள் அட்ரஸ் எழுதும் போது எப்படி இருக்கும் என்று நினைக்கும் போது சிரிப்பு வந்துதான் தீரும்.
— மதுமிதா







Comments are closed, but trackbacks and pingbacks are open.