அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஓர் அலசல்!
தர்மபுரி அரசு மருத்துவமனையை பொறுத்தவரை 5 மாடி உயரமான கட்டிடம், 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு என கட்டிடங்கள் எல்லாம் பார்ப்பதற்கு நன்றாக தான் இருக்கும், ஆனால் மக்களுக்கு சரியான சிகிச்சை கிடைக்கிறதா என்றால் கேள்விக்குறி ?தான் பதில். அவசர சிகிச்சை பிரிவில் நுழைந்தால் எங்கிருந்து வேண்டுமானாலும் நாம் நடக்கும் போது எலி நம் கால் மீது ஏறி ஓடும். எலியை கடந்து வலியோடு yellow zone (ஒரு சிகிச்சை பிரிவு) சென்றால் உட்கார இடம் இல்லாமல் ஒரே பெட்டில் 4 பேர் உட்கார்ந்து இருக்க வேண்டியது தான். அந்த 4 பேரில் 2 பேர் 70 வயதுக்கு மேலான முதியவர்களாக இருப்பார்கள். அவர்களால் எவ்வளவு நேரம் உட்கார்ந்து இருக்க முடியும்?
ஒரு சிலர் தனியார் மருத்துவமனையில் பார்த்துக் கொள்ளலாம் என எழுந்து சென்று விடுகிறார்கள். உட்கார்ந்து உட்கார்ந்து சலிப்பின் உச்சிக்கு சென்ற பின்பு எக்ஸ்ரே எடுக்க செல்ல வேண்டும் என்றால் சக்கர நாற்காலியை தள்ளிக் கொண்டு செல்பவருக்கு நாம் 50 ரூபாய் தள்ள வேண்டும். அறுவை சிகிச்சை செய்வதற்கு முன் உடலில் இருக்கும் ரோமங்களை ஷேவ் செய்பவருக்கு 50 கொடுக்க வேண்டும். அதற்கான உபகரணங்களையும் நாமே வாங்கிக் கொண்டு வர வேண்டும். அறுவை சிகிச்சை முடிந்து வெளியே வந்தவுடன் நோயாளியை வண்டியில் வைத்து தள்ளிக் கொண்டு வருவோர்க்கு ரூபாய் 200 (வார்டில் விடுவதற்கு) கொடுக்க வேண்டும்.
தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்லும் அரசு மருத்துவமனையில் 2 மின்தூக்கி மட்டுமே வேலை செய்கிறது. அதில் ஒன்று எப்போது வேண்டுமானாலும் பாதியிலே பழுதாகி நின்றுவிடுகிறது. வெகு நேர போராட்டத்திற்கு பிறகு மேலே வார்டுக்கு சென்றால் அங்கு மருத்துவர் வந்து blood checkup செய்ய ரத்தம் எடுத்து கொடுத்தால் அதை ஆய்வகத்தில் கொடுக்க மணி கணக்கில் காத்திருக்க வேண்டும். ஆய்வு முடிவுகளை வாங்க சென்றாலும் இதே நிலைமை தான். வரிசையில் நின்று பக்கம் சென்றவுடன் இந்த முடிவு இங்கு இல்லை வேறு இடத்தில் என்று சொல்வார்கள். படித்த நமக்கே இந்த நிலை என்றால் படிக்காத முதியவர்கள் நிலையை சற்று சிந்தித்துப் பாருங்கள்.
மீண்டும் வேறு இடத்திற்கு சென்று முடிவுகளை வாங்கிக் கொண்டு 4 மாடி படியில் ஏறி நடக்க வேண்டும். வார்டுக்கு சென்றால் எப்போது செவிலியர் ஊசி போடுவார் என தூங்காமல் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். வார்டை சுத்தம் செய்பவர்கள் தான் க்ளுகோஸ் போட்டு விடுவார்கள். அவர்களக்கு ரூபாய் 50 கொடுக்க வேண்டும். நோயாளி, நோயாளி உடன் இருப்பவர் என வார்டில் 50 பேர் இருந்தால் அவர்கள் அனைவருக்கும் 2 அல்லது 3 கழிப்பறைகள் தான் இருக்கும். அதில் இரண்டுக்கு தாழ்ப்பாள் இருக்காது. ஆண்கள் பெண்கள் அனைவரும் ஒரே கழிப்பறையை பயன்படுத்த வேண்டிய நிலையே உள்ளது.
ஒரு நாளைக்கு வார்டை 2 முறை துடைக்கிறார்கள் தினமும் பெட்ஷீட் மாற்றுகிறார்கள். இதற்கு இடையே மருத்துவர்கள் புண்களை சுத்தம் செய்யும் போது நோயாளிகளின் அழுகுரல் பக்கம் இருப்பவர்களை பதறச் செய்யும். உள் நோயாளியாக போனால் இப்படிப்பட்ட நிலமை என வெளி நோயாளியாக போனால் நாம் என்ன சொல்ல வருகிறோம் என்பதை கூட முழுமையாக கேட்காமல் மாத்திரை எழுதிவிட்டேன் போய் வாங்கிக் கொள்ளுங்கள் என விரட்டி அடிக்கப் படுகிறார்கள். இதில் ஏதாவது வெளி நோயாளிகளுக்கு ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று எழுதிக் கொடுத்தால் அதை எடுத்துக் கொண்டு ஸ்கேன் சென்டர் போனால் 1 மாதம் விட்டு வந்து ஸ்கேன் எடுத்துக் கொள்ளுங்கள் என்பது பதிலாக வரும்.
எங்கு சென்றாலும் மெத்தனப் போக்கு அலச்சியம், நோயாளியை தள்ளிக்கொண்டு செல்ல சக்கர நாற்காலிகள் இல்லை, மின்தூக்கி வேலை செய்வது இல்லை, இப்படி இல்லை இல்லை என சொல்லிக் கொண்டே போகலாம். வெளியில் சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் கொதிநீர் வழங்கும் நிலையம் என இருக்கும். ஆனால் அதில் கொதிநீரும் வராது, சொல்லப்போனால் ஒரு நீரும் வராது. அருகில் இருக்கும் கடையில் கொதிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலையே உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சாலையை இந்தப் பக்கம் இருந்து அந்தப் பக்கம் கடக்கிறார்கள். ஆனால் அவர்கள் சாலையை கடக்க முறையான வசதிகள் இல்லை. முதியவர்கள் எல்லாம் எப்படி சாலையை கடப்பர்கள் ?
உழைக்கும் மக்களே இவ்வளவு சிக்கல்கள் அரசு மருத்துவமனையில் பைப் உடைந்த கழிவுநீர் போல ஓடிக் கொண்டிருக்கிறது. இவ்வளவு நேரம் இங்கு இருக்கும் சிக்கலை பார்த்தோம். ஏன் அரசு மருத்துவமனையில் நல்ல தரமான சிகிச்சை கிடைப்பதில்லை என்று சற்று சிந்தித்து பாருங்கள் மக்களே! எங்கும் எதிலும் தனியார் மயம் தாராளமயம். எல்லாமே தனியார் தனியார் என தனியாருக்கு தாரை வார்ப்பதால் வரும் சிக்கல்கள் தான் இவை எல்லாமே அரசு மருத்துவமனையில் இலவசமாக கிடைத்து விட்டால் தனியார் மருத்துவமனை முதலாளி எப்படி பிழைப்பான்? அவன் எப்படி கல்லா கட்டுவான்? இங்கு மெத்தனம் காட்டினால், சரியான சிகிச்சை கிடைக்காமல் போனால் அவன் தாராளமாக தனியார் மருத்துவமனைகளை நோக்கி நகர்வான். இங்கு தான் தனியார் மயத்தின் தந்திரம் ஒழிந்து இருக்குறது.
தனியார் மயம் தாராளமய கொள்கையை ஒழிக்காமல் உழைக்கும் மக்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை என்பது பல்லு இல்லாதவன் பட்டாணி சாப்பிடலாம் என நினைப்பதற்கு சமம். குறிப்பாக நோயாளியுடன் அரசு மருத்துவமனைக்கு வந்தால் கூட வருபவரும் மனதளவில் மண்டைக் கோளாறாக வேண்டிய நிலை என்பதை மறக்க வேண்டாம். மாடல் அரசாக இருந்தாலும் சரி மாற்றத்தை தருவேன் என மாடலாக நம்மிடம் கூறுபவர்களும் சரி எல்லாருமே தனியார் மய கொள்கையை தேடலாக கொண்டு வருபவர்கள் தான் என்பதை மறக்க வேண்டாம் மக்களே!
— மு. குபேரன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.