96,000 வழக்குகளுக்கு தீர்ப்பெழுதிய நீதிநாயகம் சந்துரு ! ( 16 )
முனைவர் ஜா.சலேத் - கண்ணெதிரே போதிமரங்கள்! ( அறியவேண்டிய ஆளுமைகள் )
96,000 வழக்குகளுக்கு தீர்ப்பெழுதிய நீதிநாயகம் சந்துரு ! – முனைவர் ஜா.சலேத்
நீதிமன்றத்தினுள் நுழையும்போதும் வெளியில் செல்லும்போதும் தனக்கு பணிவிடை செய்வதற்காக வந்த ஊழியரை, அது ஆடம்பரம் என சொல்லி நிறுத்திவிட்டார். தனது பாதுகாப்புக்காக உதவி ஆய்வாளர் அல்ல சாதாரண காவலர் கூட வேண்டாம் என மறுத்துவிட்டார். அவர்தான் நீதிமன்றத்தின் வழக்கமான சம்பிரதாயங்கள், மரபுகள், ஆடம்பரங்கள் ஆகியவற்றின்மீது சம்மட்டி அடி வைத்து, உடைத்தெறிந்தவர் நீதி நாயகம் சந்துரு.
கே.சந்துரு என்கிற கிருஷ்ணசாமி சந்திரசேகரன் இவர் திருச்சிராப்பள்ளி ஸ்ரீரங்கத்தில் கிருஷ்ணசாமி சரஸ்வதி இணையருக்கு மகனாகப் பிறந்தவர். வெகுநாட்களாக பிள்ளைவரம் இல்லாமல் திருச்சி மலைக்கோட்டை இறைவன் தாயுமானவர் சுவாமி அருளால் பிறந்தவர் எனக்கூறி இவருக்கு தாயுமானவர் சுவாமியின் திருவடிப்பெயரான சந்திரசேகரன் என்ற பெயரையே இவருக்கு சூட்டினர். சந்துருவின் ஐந்தாவது வயதில் தந்தையையும், 15ஆவது வயதில் தாயாரையும் இழந்தார் சந்துரு.

தம் கல்வியைச் சென்னையில் உள்ள பள்ளியில் கற்ற இவர் சோசலிச ஆர்வலராக இருந்தார். சென்னை லயோலா கல்லூரியில் கல்வி கற்ற இவர், மாணவர் போராட்டங்களை வழிநடத்தியதால் அங்கு தொடர்ந்து கல்வி கற்க இயலாத நிலையில் தனது இளங்கலை படிப்பை நிறைவு செய்ய கல்லூரியின் மூன்றாம் ஆண்டில் சென்னைகிறிஸ்தவக் கல்லூரியில் சேர்ந்தார் .
இந்திய மாணவர் சங்கக் கொள்கைகளில் அதீத ஈடுபாடு கொண்ட இவர் சென்னையில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான விடுதிகளில் ஏற்பட்ட பிரச்சினைகள் தொடர்பான போராட்டங்களில் கலந்து கொண்டார். 25.12.1968 அன்று வெண்மணி என்னும் சிற்றூரில் நடந்த 44 தாழ்த்தப்பட்ட மக்களைத் தீயிட்டுக் கொளுத்தியக் கொடூரத்தைக் கண்டித்து விவசாயத் தொழிலாளர்களின் ஊர்வலத்தை முன்னின்று நடத்தினார்.
பின்னர் அவர் 1973 இல் சட்டக் கல்லூரியில் சேர்ந்தார், அங்கு அவர் ஒரு மாணவர் தலைவராக இருந்ததால் அவருக்கு விடுதி இடம் வழங்கப்படவில்லை, பின்னர் கல்லூரி வளாகத்தின் முன் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்குச் சென்ற பிறகு அவருக்கு இடம் கிடைத்தது. இலங்கை உள்நாட்டுப் போரில் இந்திய தலையீட்டை எதிர்த்ததற்காக சிபிஐ (எம்) அதை ஆதரித்தபோது சந்துரு அதை எதிர்த்தார். எனவே 1988 இல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் ,
அறிவர் பிஆர் அம்பேத்கரால் ஈர்க்கப்பட்ட சந்துரு நீதிக்கான தனது சமரசமற்ற பயணத்தைத் துணிவுடன் தொடர்ந்த இவர், 1976 இல் வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கி 1997 இல் சீனியர் வழக்கறிஞர் ஆனார். பல பொது நல வழக்குகள் மனித உரிமை வழக்குகள் பெண்கள் உரிமை வழக்குகள் ஆகியவற்றில் வாதாடினார். 1993 ஆம் ஆண்டில் கடலூரின் முதனை கிராமத்தில் நிகழ்ந்த ராஜாக்கண்ணு கொலை வழக்கிற்கு 13 ஆண்டுகளுக்குப் பிறகு 2006 இல் தீர்ப்பு வழங்கப்பட்டது.

மிரட்டல்கள், உருட்டல்கள், அதிகார அச்சுறுத்தல்கள் என எல்லாவற்றையும் கடந்து அந்த வழக்கில் ராஜாக்கண்ணுவின் குடும்பம் நீதியைப் பெற வழக்கறிஞர் கே.சந்துருவின் வாதங்கள் முக்கியமானதாக இருந்தன. பல பொது நல வழக்குகள், மனித உரிமை வழக்குகள், பெண்கள் உரிமை வழக்குகள் ஆகியவற்றில் வாதாடினார். அதேபோல சமூக, தொழிற்சங்க பிரச்னைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தார். அவர் வழக்கறிஞராக இருந்த காலத்தில் மனித உரிமைகள் தொடர்பான வழக்குகளுக்கு ஒருபோதும் கட்டணம் பெற்றதில்லை.
பல ஆண்டுகளாக வழக்கறிஞராகப் பணியாற்றிய பிறகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக, 2001 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் பரிந்துரைக்கப்பட்டார். ஆனால். ‘இவர் தீவிரவாதிகளுக்கான வக்கீல்’ என்று சொல்லி அவருக்கெதிராய்குரல் எழும்பி தடையானது.
2006 ஆம் ஆண்டு ‘வழக்கறிஞர் என்பது தொழில். யாருக்காகவும் யாரும் வாதாடலாம். இதை காரணம் காட்டி நீதிபதி பொறுப்பைக் கொடுக்காமல் இருக்க முடியாது’என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து 31.07. 2006 இல் உயர் நீதி மன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டவுடன் அவர் முதலில் செய்த காரியம், தன் சொத்து விவரங்களைத் தலைமை நீதிபதி எச்.என்.கோகலேவிடம் ஒரு சீலிட்ட கவரில் சமர்ப்பித்து பலரையும், திகைக்கவும், திடுக்கிடவும் வைத்தார்.

நீதிமன்றத்தில் ‘என்னை மை லார்ட் என அழைக்கக்கூடாது’ என வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்டு புருவம் உயர்த்த வைத்தவர் அவர். வழக்கறிஞர் ஒருவர் தன்னை நீதியரசர் என்ற அழைத்தபோது, அந்தச் சொல் தனிநபர் துதியே ஆகும். அதைப் பயன்படுத்தாதீர்கள் என்றார் அவர். ‘நீதிபதி’ ‘நீதியரசர்’ என்கிற சொற்களைவிட ‘நீதி நாயகம்’ என அழைக்கப்படுவதையே விரும்பினார்.
அவர் நீதிபதியாக பணிபுரிந்த காலத்தில் 96 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கியுள்ளார். 96 ஆயிரம் வழக்கு எனில் ஒரு நாளைக்கு 75 வழக்குகள். சராசரியாக மாதத்துக்கு 1500 தீர்ப்புகள். இந்தியாவிலேயே இவ்வளவு வழக்குகளுக்கு எந்த நீதிபதியும் தீர்ப்பு வழங்கியதில்லை என்பதே வரலாறு. இவ்வளவு வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கினார் எனில் இந்தச் சமூகத்தின்மீது அவர்கொண்டிருந்த அக்கறையும், தீர்ப்புகளுக்குத் தேவைப்படும் உழைப்பும் மிகப்பெரியது. ஆந்திராவைச் சேர்ந்த நீதிபதி ஒருவர் இது பற்றி அளித்த நேர்காணலில் ‘இந்திய நீதிமன்றங்களின் சச்சின் சந்துருதான். அவரது ஸ்கோரை முறியடிக்க யாருமில்லை’ என க் கூறியுள்ளார்.

மேடை நாடங்களுக்கு, போலீஸ் கமிஷனரிடம் அனுமதி பெற தேவையில்லை
பஞ்சமி நிலங்களை, வேறு யாருக்கும் ஒதுக்கக் கூடாது
சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் நியமனத்தில், இடஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்
கோவில்களில், பெண்கள் பூஜை செய்வதற்கு எந்த தடையும் இல்லை,
மாட்டிறைச்சிக் கடைகள் நடத்த தடை நீக்கப்படும்
என்கிற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளும் இந்த 96 ஆயிரம் தீர்ப்புகளுக்குள் அடங்கும். இவர் ஓய்வுபெற்றபோது, வழக்கமாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வுபெறும்போது ஐந்து நட்சத்திர விடுதிகளில் நடத்தப்படும் பணி ஓய்வு பாராட்டு விழாவை வேண்டாம் என மறுத்து தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினார். நாடு விடுதலை அடைந்த பிறகு சென்னை இப்படி பிரிவு உபசார விழா வேண்டாம் என்று மறுத்த முதல் நீதிபதி சந்துருதான். ஓய்வுக்கு பின்னர் நீதித்துறை சம்பந்தமான பொறுப்புக்களை பெற மாட்டேன் எனவும் மறுத்துவிட்டார்.
8.3.2014 இல் ஒய்வு பெற்றவுடன் பதவி ஏற்கும்போது என் குடும்ப சொத்து விவரங்களை கொடுத்தேன். இப்போது என்னுடைய சொத்து விவரங்களை கொடுக்கிறேன். புதிதாக சொத்து வாங்கியதற்கான வருமான விவரங்களையும் குறிப்பிட்டுள்ளேன்” என்று கூறி தன் சொத்து கணக்கு விவரங்களை அறிக்கையாக அளித்தார்.

பணி ஓய்வு பெறும் நாளில் தனக்கு வழங்கப்பட்ட சொகுசு காரை ஒப்படைத்துவிட்டு தன் நண்பர்களுடன் மின்சார ரயிலில் வீட்டுக்கு சென்று வியப்பின் குறியீடாக மாறியவர். வழக்கறிஞராகவும், நீதிநாயகமாகவும் செயல்பட்ட சந்துரு அவர்களே திரைக்கலைஞர் சூர்யாவின் ஜெய்பீம் படத்தின் கதாபாத்திரமான பிறகே இளையோர் இவரைத் தம் சமூக ஊடகங்களின் பக்கங்களில் முன்வைக்கத் தொடங்கினர் என்பதைப் பதிவு செய்வது அவசியமாகிறது.
ஒவ்வொரு தீர்ப்பிலும் அம்பேத்கரின் கூற்று, தனக்கு எவ்வாறு உதவியது என்பதைப் படம் பிடித்துக் காட்டும் நூலான அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள் என்ற நுலையும், நீதி – ஒரு மேயாத மான், நானும் நீதிபதி ஆனேன் (சுயசரிதை) உள்ளிட்ட பல நூல்களையும் தந்துள்ள நீதிநாயகம் சந்துரு, வழக்கறிஞர் பணியாற்றியபோதும் – உயர் பதவி வராது தடுக்கப்பட்டபோதும் – நீதியரசராக அமர்ந்நதிருந்தபோதும் – ஓய்வு பெற்ற பிறகு என எந்நிலையிலும் தன்நிலைமாறாது நேர்மை எனும் ஆயுதமேந்தி துணிந்து பயணத்தைத் தொடர்கிறார். எனவே நீதிநாயகம் சந்துரு இளையோர் அறிந்து கொள்ள வேண்டிய போதி மரம் எத்தனை உயரத்திற்கும் சென்று நம்மால் ஓங்கி குரலெழுப்ப முடியும்.
–முனைவர் ஜா.சலேத்








Comments are closed, but trackbacks and pingbacks are open.