பிரபுசாலமன் ‘டச்’ இல்லாத ‘கும்கி—2’
தயாரிப்பு நிறுவனம்: ஜெயந்தி லால் காடா வின் ‘பென் ஸ்டுடியோஸ்’ . தயாரிப்பு: தாவல் காடா, டைரக்டர்: பிரபுசாலமன், ஆர்டிஸ்ட்: மதி( அறிமுகம்) ஷ்ரிதா ராவ், அர்ஜூன் தாஸ், ஆண்ட்ரூஸ், ஆகாஷ், ஹரிஷ் பெராடி, ‘மைனா’ சூசன் மேத்யூ, ஸ்ரீநாத் , பெரேரா, கொட்டாச்சி, ஒளிப்பதிவு: எம்.சுகுமார், இசை: நிவாஸ் கே.பிரசன்னா, எடிட்டிங்: புவன், ஆர்ட் டைரக்டர்: விஜய் தென்னரசு, தயாரிப்பு நிர்வாகம்: ஜெ.பிரபாகர், பி.ஆர்.ஓ.: யுவராஜ்.
சாராய வியாபாரியான அம்மா, குடிகார அப்பா இருவரும் தினசரி குடித்து அடித்துக் கொள்வதால், பாசத்திற்காக ஏங்குகிறான் பூமி. ஒருவித விரக்தியிலேயே பள்ளியில் மற்ற பிள்ளைகளுடன் சேராமல், தனித்தே இருக்கிறான். இதைக் கவனிக்கும் ஆசிரியர், “இயற்கையை நேசி, மலைகளை நேசி, காடுகளை நேசி, குறிஞ்சிப்பூவை நேசி, உன்னோட மனசு லேசாகும்” என்கிறார். இதையெல்லாம் கேட்டு உற்சாகமாகும் பூமி, ஒரு நாள் பள்ளியிலிருந்து வீடு திரும்பும் போது, சேறும் சகதியும் நிறைந்த பள்ளத்தில் விழுந்து கிடக்கும் குட்டி யானை ஒன்றை பெரும் முயற்சி எடுத்து வெளியே தூக்குகிறான். இதனால் அந்த குட்டி யானை பூமியிடம் பாசம் காட்டுகிறது.
அந்த யானைக்குட்டிக்கு நிலா என பெயர் வைக்கிறான் பூமி. கல்லூரிக்குப் போனாலும் நிலா நினைப்பாகவே இருக்கிறான். குட்டியாக இருக்கும் போதே அந்த யானையையும் பூமியையும் கவனிக்கும் தந்தம் திருடும் கும்பல் ஒன்று, பூமியின் தாயிடம் பணத்தாசை காட்டி, அது வளர்ந்ததும் தங்களிடம் ஒப்படைக்கச் சொல்கிறார்கள். பூமி கல்லூரிக்குப் போய் திரும்புவதற்குள் யானையை விற்றுவிடுகிறாள் தாய்[ ‘மைனா சூசன் மேத்யூ]
அந்த நிலாவைத் தேடி பயணத்தை ஆரம்பிக்கிறான் பூமி. நிலா கிடைத்ததா? என்பதன் க்ளைமாக்ஸ் தான் இந்த ‘கும்கி-2’.
ஏராளமான மனிதர்களின் உதவியுடன் அடர்ந்த வனப்பகுதிகளிலும் ஆபத்தான மலைப்பகுதிகளிலும் கடும் சிரமங்களுக்கிடையே பயணம் செய்து இந்த ‘கும்கி-2’வை திரைக்காட்சியாக்கியிருக்கிறார் டைரக்டர் பிரபுசாலமன். இவரின் சாகசப் பயணத்திற்கு மிகப்பெரிய சப்போர்ட்டராக இருந்திருக்கிறார் கேமராமேன் எம்.சுகுமார்.
ஆனால் படத்தில் சிறுவனாக நிலாவுடன் பூமியின் உறவும் சரி, உணர்வும் சரி, பார்வையாளனின் மனசுக்குள் ஊடுருவவில்லை என்பது தான் படத்தின் மைனஸ். குட்டி யானைக்கு நெகப்பாலீஷ் போடுவது, முகத்துக்கு பவுடர் பூசுவது, காதில் தோடு போடுவது, யானையுடன் ஃபுட்பால் விளையாடுவதெல்லாம் அண்ணன் இராம.நாராயணன் காட்டிய வித்தைகள் மாதிரியே உள்ளது.
தந்தத் திருட்டு என ஆரம்பித்து இடைவேளைக்குப் பிறகு தான் முதல்வராவதற்காக யானையைப் பலிகொடுக்க யாகம் நடத்தும் முதல்வர் பெரேரா என திரைக்கதை திக்குத் தெரியாமல் போய் நம்மையும் ரொம்ப திக்குமுக்காட வைத்துவிட்டது. யானையைப் பலி கொடுக்கும் க்ளைமாக்ஸ் சீன் உட்பட பல சீன்கள் கூட, சமீபத்தில் ரிலீசான விஜய பிரபாகரனின் ‘படைத்தலைவன்’ படத்தை அப்படியே நினைவூட்டுவது மேலும் மைனஸாகிவிட்டது இந்த ‘கும்கி-2’வுக்கு. இதுவே பிரபுசாலமன் உழைப்புக்கு வேட்டு வைத்துவிட்டது.
பூமியாக புதுமுக நாயகன் மதி. இன்னும் இன்னும் கடின உழைப்பும் விடாமுயற்சியும் இருந்தால் தான் கோலிவுட்டில் பயணத்தைத் தொடரமுடியும். இதை மதியின் சின்ன மாமா டைரக்டர் லிங்குசாமியும் உணர்ந்திருப்பார். [அதாவது லிங்குசாமியின் அண்ணன் மகள் சரண்யாவை காதலித்து கல்யாணம் செய்திருப்பவர் தான் ஹீரோ மதி]
மதியின் நண்பனாக ஆண்ட்ரூஸ் கொஞ்சம் கலகலப்பூட்டுகிறார். அதைவிட ஹீரோயின் ஷ்ரிதா ராவுடன் வரும் அந்த சிறுவன் காமெடியில் கவனிக்க வைக்கிறான்.
முதல்வரின் பிஏவாக ஆகாஷ்வருகிறார். யானையைக் கடத்திப் போய் பலி கொடுக்க உதவும் வில்லனாக அர்ஜுன் தாஸுக்கு நான்கைந்து சீன்கள் என்றாலும் வில்லத்தனத்தில் இன்னொரு முகம் காட்டுகிறார். அப்புறம் படத்தின் ஹீரோயின் பேரு ஷ்ரித்தா ராவ்னு டைட்டில்ல போட்டாயங்களே….எங்க அந்தப் புள்ளய காணோம்னு இடைவேளை முடிஞ்சு அரை மணி நேரம் வரை காத்திருந்தோம்.
அதுக்குப் பிறகு தான் திடீர்னு சவுண்ட் என்ஜினியர் ரசூல் பூக்குட்டியின் அசிஸ்டெண்ட் என்ஜினியர்னு சொல்லி ஹெட்செட்ட்டும் ரெக்கார்டரும் கையுமா எண்ட்ரியாகிறார். நிலாவைக் காப்பாத்துறதுக்கு இவர் தான் ஹெல்பாகவும் இருக்கிறார்.
படத்தின் ஜீவன் கேமராமேன் சுகுமார்னு ஆரம்பத்துலேயே சொல்லிட்டோம். இன்னொரு ஜீவன் மியூசிக் டைரக்டர் நிவாஸ் கே.பிரசன்னா தான். பாடல்களும் சரி, பின்னணி இசையும் சரி, நிவாஸ்…சபாஷ்.
— ஜெ.டி.ஆர்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.