சாகித்ய அகடாமி மட்டுமல்ல, பத்மஸ்ரீ, பத்மபூஷன் உள்ளிட்ட பத்ம விருதுகள் அறிவிக்கப்படும்போதெல்லாம் எனக்கு இருவர் நினைவிற்கு வருவதுண்டு.
ஒருவர் தோழர் இன்குலாப். அவருக்கு கொடுக்கப்பட்ட சாகித்ய அகடாமி விருதினை அவர் குடும்பமே புறக்கணிப்பு அறிவிப்பு செய்தது.
அதற்கு காரணியாக, “எனக்கு விருதுகள் வரும் என்று எதிர்பார்த்து எழுதுவதில்லை. ஆனால் எதிர்ப்பும், கண்டனமும், தாக்குதலும் வரலாம் என்பதை எதிர்பார்த்தே உள்ளேன். அவ்வப்பொழுது விசாரணைக்காக இந்த அரசாங்கம் என்னை அழைப்பதே எனக்கான பரிசுகளின் தொடக்கமாகும்” என்ற இன்குலாபின் வரிகளை மேற்கொள் காட்டிய அவரது குடும்பத்தினர் அவர் வாழ்ந்த காலத்தில் எந்த அரசு விருதுகளையும் ஏற்கவில்லையென்பதைச் சுட்டிக்காட்டினர்.
தவிர,”விமர்சிப்பவர்கள்,எதிர்ப்பவர்களையெல்லாம் படுகொலை செய்யும் இந்நேரத்தில் இவ்விருதை ஏற்றுக்கொள்வது என்பது இன்குலாப் வாழ்ந்த வாழ்க்கைக்கும், எழுதிய எழுத்துக்களுக்கும் துரோகம் இழைப்பதாகும்” எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
அடுத்ததாக மலையாள எழுத்தாளர் சுகுமார் அலீகோடு. இவர் தத்துவமஸி என்ற நூலுக்காக சாகித்ய அகடாமி விருது பெற்றிருந்தாலும், பின்னாளில் இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீயை ஏற்க மறுத்தார்.

அதற்கு அவர் சொன்ன காரணம், ‘இதே விருதினை 17-18 வயதில் நாட்டியமாடின இளம்பெண்ணிற்கும் கொடுக்கிறார்கள், 88 வயதான எனக்கும் அளிக்கிறார்கள். இத்தனை எழுத்துக்களை இந்த சமூகத்திற்காக எழுதிக் குவித்துள்ள மூத்த எழுத்தாளரும், ஒரு நாட்டியச் சிறுமியும் எப்படி ஒன்றாகி ஒரே விருதினை பெறலாம். இது என்னையல்ல, என் எழுத்தை சிறுமைப்படுத்துவதாகும்” என்றார்.
அநேகமாக சுகுமார் அலிகோடுக்கு விருது அறிவிக்கப்பட்ட காலம் பா.ஜ.க அரசு அல்ல என்று நினைக்கிறேன்.
இன்குலாப்புக்கு விருது பா.ஜ.க அரசு காலத்தில்தான் அறிவிக்கப்பட்டது. எனக்குத் தெரிந்து இந்த இவர்கள் இருவர் தவிர பாசிச பா.ஜ.க அரசு என கூவி கடும் பிரச்சாரத்தை நாடு முழுக்க செய்யும் அரசியல்வாதிகள், அரசியல்தலைவர்கள் அதற்குள் இரண்டறக் கலந்து பயணிக்கும் எழுத்தாள/கவிஞ/ பேராசிரியப் பெருந்தகைகள் யாரும் பா.ஜ.க ஆட்சியை காரணம் காட்டி இக்கால கட்டத்தில் தமக்களிக்கப்பட்ட விருதினை புறக்கணித்த மாதிரி தெரியவில்லை.
ஒரு வேளை சாகித்ய அகடாமி, பத்ம விருது கமிட்டிகள் பாசிச பா.ஜ.க சார்பில்லாமல் இயங்கி இருப்பதாக அவர்கள் கருதி இருக்கலாம். அல்லது விருது பெறும், விருதுக் குழுவில் இடம் பெறும் எழுத்தாளர், கவிஞ, அறிஞ பெருமக்கள் தாம் சார்ந்திருக்கும்/ உறுப்பினராக/நிர்வாகியாக இருக்கும் அரசியல் கட்சிக்கும் அப்பாற்பட்ட ‘பொதுத் தன்மையிலானது’ தம் எழுத்து என கருதுகோள் கொண்டிருக்கலாம்.
நாடு முழுக்க அகடாமி விருதுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் காரணத்தால் ஞானோதயம் வந்து இப்போதுதான் ஆளும் பா.ஜ.க அரசியல் தலையீடு என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கலாம்.
ஆனால் ஒன்று எனக்குத் தெரிந்து சிந்தாநதி ல.ச.ரா, காதுகள் வெங்கட்ராம், சாயாவனம் சா.கந்தசாமி போன்றவர்கள் இதே சாகித்ய அகடாமி விருதுகள் வாங்கின காலத்தில் விருதுகளுக்குள் கட்சி அரசியல் தலைகளின் தலையிடல் இருந்ததாகத் தெரியவில்லை.
அதிகபட்சம் பார்ப்பன லாபி என்பார்கள். ஆயினும் அதையும் தாண்டி விருது பெற்றவர்கள் நிஜத்திலேயே எழுத்தாளர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு கட்சி அரசியல்வாதிகள் அல்லாத ஏகோபித்த வாசகர் பரப்பு இருந்தது. விருதுக்காகவே எழுத்தாளர் ஆனவர்கள் – விருதுக்காகவே POD -யில் 10 புத்தகங்கள் பதிப்பித்தவர்கள் இல்லவே இல்லை.
அன்று 1200 பிரதிகள் அச்சடித்தே தீர வேண்டும். நூலகத்தில் அது நிச்சயம் வாங்கப்பட்டிருக்கும். அதை விட அவை முக்கியமாக வாசகர்களால் வாசிக்கப்பட்டு பேசப்பட்டு இருக்கும். அந்த எழுத்தாளர்கள் நாடி, நரம்பு, மூச்சு, பேச்சு என சகலத்திலும் எழுத்தாக – மனித சமூகத்தோடு இரண்டறக் கலந்து வாழ்ந்தார்கள்.
கடந்த 10-20 ஆண்டுகளாக இந்த எழுத்தாளர் துறை அப்படியில்லை. அரசியல் தெரிந்தவர்கள். அரசியலில் ஊறியவர்கள். அரசியலில் புடம் போட்டவர்கள். அரசியலே மூச்சாய் வாழ்கிறவர்கள் எல்லாம் எழுத்தாளர்கள் ஆகி விட்டார்கள்.
ஏனென்றால் இங்கே இப்போது எழுத்தாளன் ஆவது வெகு சுலபம். 10 – 20 புத்தகம் PODயில் அச்சிட்டால் அவன் எழுத்தாளன்.
முனைவர் பட்டத்திற்கு ஆய்வேடு சமர்ப்பித்த பேராசிரியன் அதையே உல்டாவாக்கி இலக்கியப் போர்வையில் மூடினால் அவன் இலக்கியவாதி.
யாரிடமாவது முனைவர் பட்ட ஆய்வேட்டை வாங்கி அதற்கு கண், காது, மூக்கு, வாய் வைத்து ஒரு நாவலாக்கினால் அவன் நாவலாசிரியன்.
எதுவும் வேண்டாம். இருக்கவே இருக்கு Google. அதில் ஒரு தலைப்பிட்டு Content எடுத்தால் சரம் சரமாய் வரும் குப்பைகளை எடுத்துக் கோர்த்து தலையனை சைசில் ஒரு புத்தகத்தை முடைந்தால் அவன் ஆகப் பெரும் திறனாய்வாளன்.
அட போங்க சார். இதெல்லாம் இப்போ எதுக்கு? வந்தே வந்து விட்டது Al. அதற்கு ஒரு தலைப்பு தந்தால் போதும் நாவலோ, கதையோ, கவிதையோ, திறனாய்வோ எது கேட்டாலும் தந்து விடுகிறது. அதை புத்தகம் ஆக்கினால் நானும் ஓர் எழுத்தாளன் என்கிறார்கள் சில இளவல்கள்.
இவர்கள் எல்லாம் விருதுகளுக்கு மட்டுமல்ல, விருதுகளின் குழுக்கள், கமிட்டிகளில் எல்லாம் இடம் பிடிக்க ஆளாளுக்கு அரசியல் செய்து க்யூவில் நிற்கிறார்கள்.
ஏனென்றால் அதில் எல்லாம் காசு, பணம், பதவி, பிரபல்யம், மீடியா வெளிச்சம்.. இதற்குள் ஜாதி இருக்கிறது. மதம் இருக்கிறது. இனம் இருக்கிறது. அரசியல் கட்சிகள் இருக்கிறது. மக்கள் பிரதிநிதிகள் இருக்கிறார்கள்.
இதைப்பற்றி சொல்லும் போது இரண்டு சம்பவங்கள் எனக்கு நினைவிற்கு வருகிறது…
சில வருடங்கள் முன்பு பத்மஸ்ரீ வாங்கினார் ஒரு தொழிலதிபர். அதை அவர் ஊரும், உற்றார் உறவினரும் ஏக போகமாய் கொண்டாடினார்.
தொழிலதிபருக்கு ஒரு சகோதரர். அவரும், இவரும் ராம லட்சுமணர் போல. வெளியுலகுக்கு அண்ணனே தெரிவார். தம்பி அவர் பின்னணியில் தொழில் மற்றும் கணக்கு வழக்குகளை கவனித்துக் கொள்பவர்.
ஒரு நாள் கூட இருவருக்குள்ளும் ஒரு சின்ன கணக்கு பிணக்கு சண்டை வந்ததில்லை.
ஆனால் இந்தாண்டு வந்து விட்டது. ஆடிட்டிங்கில் ரூ.50 இலட்சம் துண்டு விழுந்தது. உருட்டிப் பிரட்டிப் பார்த்தும் கணக்கு இடித்தது. பிரச்சனை அண்ணன் வரை சென்று விட அவர் நெற்றிக் கண் காட்டினார்.
“நீ தான் பணத்தை முழுங்கி விட்டு என்னை கேணயன் ஆக்குகிறாய்” இளையவருக்கு தாங்கவில்லை. அத்தனை ஸ்டாஃப்பையும் கூட்டி ஆராய்ந்தார். சரியாக அண்ணன் பத்மஸ்ரீ வாங்கும் சில மாதங்கள் முன்புதான் கணக்கில் உதை விழுகிறது.
“ஆங். ஞாபகம் வந்து விட்டது. நீ பத்மஸ்ரீ வாங்க கறுப்புல அந்த அமைச்சருக்குக் கொடுத்தமே, ஐம்பது எல். அது உங்க மாமனார் வீட்டுப் பணமா?” தம்பி கேட்க, அப்போதுதான் அண்ணனுக்கு மூச்சே வந்தது. ”பரவால்லே விடு” என்றார்.
இதேபோல் ஒரு பப்ளிஷிட்டி ப்ரிய டாக்டர் பத்மஸ்ரீ வாங்கி விட்டார். அவரால் பெருமை தாங்க முடியவில்லை. தமிழ்நாடு முழுக்க போஸ்டர் அச்சிட்டு ஓட்டித்தள்ள சொல்லி விட்டார்.
பிறிதொரு நாளில் அந்த டாக்டரின் ஆஸ்பத்திரி விழாவுக்கு ஜனாதிபதி அப்துல்கலாம் வந்தார். அவரிடமும், மேடையிலும் கூட டாக்டரிடம் பத்மஸ்ரீ பெருமிதமே ஓங்கி ஒலித்தது.
சகிப்புத் தன்மைக்கு பெயர் பெற்ற அப்துல்கலாமே அதை இழந்து விட்டார். டாக்டரிடம் கேட்டார் : “பத்மஸ்ரீ வாங்க எத்தனை பணம்யா கொடுத்தே?!”
சரி, பத்மஸ்ரீ போகட்டும். சாகித்ய அகடாமிக்கு வருவோம்.
10 -20 ஆண்டுகள் இருக்கும். நிலாச்சுவாந்தார், பண்ணையார் என்று போற்றப்படும் முற்போக்கு எழுத்தாளர் ஒருவர். சில பல பிரச்சார நூல்கள் எழுதி விட்டார்.
அவருக்கு ரொம்ப நாளாக அகடாமி விருதின் மீது ஒரு ஏக்கம். அவரிடம் அவ்வப்போது சில்லரை வாங்கும் சகாக்கள் சிலர் தம் கட்சி சார்ந்த 2 எம்.பிக்களை பிடித்து விட்டார்கள்.
அவர்கள் மூலம் அகடாமி குழுவிற்கு பரிந்துரைக்க ஏற்பாடும் செய்து விட்டார்கள்.
நம் முற்போக்கு பண்ணையார் இதற்காக டெல்லி விமானம் ஏறுவதை மோப்பம் பிடித்து விட்டார் இவரின் தீவிர அதி துதிபாடி எழுத்தாளர் ஒருவர்.
அவரும் பல நூல்கள் எழுதி, வெகுஜன இதழ்களிலேயே பாப்புலர் ஆனவர். ‘ஐயா உங்களுக்கு இந்தி தெரியாதே. நம் வாரணாசி சகாவை மொழிபெயர்ப்புக்கு கூப்பிட்டுக்கலாம். நீங்களும் வயோதிக காலத்தில் தனியே செல்வதாகாது. நானும் துணை வருகிறேன். பெட்டியை இப்படிக் கொடுங்க!” என எடுத்துக் கொண்டார்.
வாரணாசி மொழிபெயர்ப்பாளரும் ஓர் எழுத்தாளர். சில கதைகள் எழுதி ஒரு நூலும் வெளியிட்டுள்ளார்.
அப்படியானவர், இவர்கள் இருவர் ஆக மொத்தம் 3 பேரும் டெல்லி ஓட்டலில் தங்கினர். இரவில் மூத்தவருக்கும், இளையவருக்கும் ஒரே பேச்சு.
“ஐயா உங்கள் எழுத்து அப்படி இப்படி” என்று புகழ்ந்த சிஷ்யகோடி, “உங்க எழுத்துக்கு சாகித்ய அகடாமி விருது துக்கடா. உங்களுக்கு ஞானபீடமே தர வேண்டும்” என்று உசுப்பேற்ற உசுப்பேற்ற பழுத்த பண்ணையார் பழம் மேலும் கனிந்து குழைந்தது.
“அப்படியா சொல்றே. அப்படின்னா நாளைக்கு எம்.பிக்களிடம் சொல்லி ஞானபீட விருதுக்கே பரிந்துரை கொடுக்கச் சொல்றேன்” என்றிருக்கிறார்.
அதன் பிறகு பேச்சோடு பேச்சாக சிஷ்ய கோடி, “அப்படியே ஐயா. அந்த சாகித்ய அகடாமியை எனக்கு பரிந்துரைக்கச் சொல்லுங்க. நம்ம எம்.பி நீங்க சொன்னா கேட்பார்” என்றிருக்கிறார்.
அடுத்தநாள் இவர்களுடன் எம்.பி.ஒருவரும் சென்றார். சாகித்ய அகடாமி அலுவலகத்தில் அதன் செக்ரட்டரியும் சந்தித்தனர். பிறகு அவர்கள் பரிந்துரைக் கடிதம் எப்படிப் பெற்றனர்.
தொடர்ந்து சாகித்ய அகடாமி விருது, பாரதிய ஞான பீடம் பெற்றனரா என்பதெல்லாம் பிரம்ம ரகசியம். அதைச் சொன்னால் குட்டு வெளிப்பட்டு விடும்.
ஆனால் ஒன்று. இந்த இருவரும் ஓட்டல் அறையில் அடித்த விருது லூட்டியை பார்த்துப் பார்த்து வெம்பிக் கொண்டிருந்த வாரணாசி எழுத்தாளர் என் நண்ப எழுத்தாளரிடம் இப்படி புலம்பி உள்ளார்.
“அவனுக்கு ஞான பீடம். இவனுக்கு சாகித்ய அகடாமி. இவங்களே பங்கு போட்டுக்கறாங்க. நான் ஒருத்தன் இருக்கிறதையே மறந்துட்டாங்க. நான் மொழிபெயர்க்கக் கூட வர்றேனே, கவலைப்படாதே இந்த வருஷம் எங்களுக்கு விருது கிடைக்கட்டும். அடுத்த வருஷம் உன் நூலுக்கு இதே மாதிரி பரிந்துரைக் கடிதம் வாங்கித் தர்றேன்னு சொல்லலாம்ல? சொல்லவே இல்லை. அந்த அளவுக்கு சுயநலமிக்க. செல்ஃபிஷ்”
இந்த சம்பாஷணைக்குள் வந்த நான்கு எழுத்தாளர்கள் மட்டுமல்ல, அந்த பரிந்துரை எம்.பிக்கள் இரண்டுபேரும் கூட இப்போது உயிருடன் இல்லை.
– கா.சு. வேலாயுதன், கோவை








Comments are closed, but trackbacks and pingbacks are open.