தேர்தலில் விஜய்யை எதிர்த்து நிற்க திமுக தயார் செய்யும் நட்சத்திர வேட்பாளர் !
தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம், ஜனநாயகன் பட விவகாரம் வரையில் அடுத்தடுத்து அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. கரூர் சம்பவத்தோடு கதை முடிந்தது என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், அதிமுகவின் செங்கோட்டையன் தொடங்கி அரசியலில் பழம்தின்று கொட்டை போட்டவர்கள் பலரும் ஐக்கியமாகிவரும் கட்சியாகவும் உருவெடுத்திருக்கிறது. ஈரோட்டில் மக்கள் சந்திப்பையும் நடத்தி முடித்திருக்கிறார், விஜய்.
இந்த பின்புலத்தில், நேருக்கு நேர் விஜயை களத்தில் எதிர்கொள்ளப்போகும் அந்த நட்சத்திர வேட்பாளர் யார்? என்ற எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது. மதுரை மாநாட்டில், தமிழகத்தின் 234 தொகுதியிலும் இந்த விஜய்தான் நிற்கப்போகிறார் என பஞ்ச் பேசியிருந்தாலும், தற்போதைய நிலையில் விஜய் டிக் செய்திருக்கும் 3 தொகுதிகளில் முக்கியமான தொகுதி திருச்சி கிழக்கு என்கிறார்கள் த.வெ.க. வட்டாரத்தில். முன்னோட்டமாக, ஒரு முறைக்கு 3 முறை கள சர்வேயை சத்தமில்லாமல் எடுத்து அனுப்பியிருப்பதாகவும் தகவல்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில், திமுக சார்பில் களம் காணப்போகும் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு கடைசிவரையில் எகிறிக்கிடந்தது. தொகுதியின் பொறுப்பு அமைச்சர் என்ற முறையில் அன்பில் மகேஷ் அந்த தொகுதிக்கு மல்லுக்கட்ட, சீனியர் அமைச்சர் கே.என்.நேருவும் காய்நகர்த்த, சாதுர்யமான முடிவால் ஞானப்பழத்தைப் பெற்ற முருகனைப் போல, கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் என்ற அமைப்பின் தலைவர் என்ற முறையில் அறிவாலயத்தை வலம் வந்து கிறிஸ்துவ வெள்ளாளர் சமூகத்தினர் நிறைந்திருக்கும் தொகுதிக்கு வந்தமர்ந்தவர்தான் முனைவர் இனிகோ இருதயராஜ் என்கிறார்கள்.

மேலிடத்துச் செல்லப்பிள்ளையாக சீட்டு வாங்கி புதுமுகம் என்கிற அடையாளத்துடன் ஜெயித்திருந்தாலும், எம்.எல்.ஏ. என்ற முறையில் தொகுதியில் செய்ய வேண்டியதையெல்லாம் இம்மி பிசகாமல் செய்வதில் வல்லவர் என்றே சொல்கிறார்கள். முனைவர் பட்டம் பெற்றவர். மேடைப்பேச்சில் அசத்துபவர். உலக அரசியல் குறித்தெல்லாம் ஆய்ந்தறிந்து கட்டுரை எழுதும் ஆற்றல் பெற்றவர். ஆனாலும் என்ன, அரைநூற்றாண்டை கடந்த அரசியல் அனுபவ முதிர்ச்சி கொண்ட உடன்பிறப்புக்களின் லோக்கல் பாலிடிக்ஸை அவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை என்பதுதான் சிக்கல் என்கிறார்கள்.
அதிகாரிகள் என்னை மதிப்பதில்லை; அமைச்சர்கள் சொல்வதைத்தான் கேட்கிறார்கள் என்று வெளிப்படையாக குற்றஞ்சாட்டியதோடு, ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்த நிலையிலும் ரோட்டில் இறங்கி போராட்டமும் நடத்தியிருந்தார். சிறுபான்மையினரின் குரல் கேட்க வேண்டியவர்களுக்கு கேட்கவில்லை என்றும் கூட்டமொன்றில் குறைபட்டுக்கொண்டார். இவரது பேச்சுக்களை, திமுக எதிர்ப்பை தாரக மந்திரமாக கொண்ட தினசரியே கூட பிரசுரிக்கும் அளவுக்கு நிலை போனது என்கிறார்கள்.
இந்த பின்னணியில்தான், திருச்சி மாவட்டத்தில் ”உலகம் உங்கள் கையில்” என்ற திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கான லேப்டாப் வழங்கும் நிகழ்வில், தான் உள்ளிட்டு லோக்கல் எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு விடுக்காமலேயே, சீனியர் அமைச்சர் கே.என்.நேரு அதிகாரிகளை வைத்து அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டதாகவும் சலசலப்பு ஏற்பட்டது. ஏற்கெனவே, சீனியர் அமைச்சர் நேரு தன்னை தரக்குறைவாக பேசிவிட்டார் என்ற மனக்குமுறலில் இருந்த நிலையில், அவருடன் சுமுகமான பேச்சுவார்த்தையை கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தவிர்த்து வந்த நிலையில், தற்போது இந்த விவகாரம் அவரது சுயமரியாதை உணர்வை சீண்டியது என்கிறார்கள்.

இதை காரணமாக காட்டி, தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறேன் என நேரடியாக தலைவருக்கே மெசேஜ் அனுப்பியிருக்கிறாராம். தனது ஆதரவாளர்களையெல்லாம் கூட்டிவைத்து, இதுவே கடைசி இனி நான் எந்த தேர்தலையும் சந்திக்கப்போவதில்லை என்றும் உருகியிருக்கிறார். இந்த விவகாரம் மாவட்டத்தில் புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக, எம்.எல்.ஏ. இனிகோவை தொடர்புகொண்டபோது, அவரது செல்பேசி வாய்ஸ் மெசேஜ் மோடுக்கு மாற்றப்பட்டிருந்தது.
திமுக போன்ற பாரம்பரியமான கட்சியில் மா.செ.வுக்குத்தான் முக்கியத்துவம் தரப்படும். தொகுதியின் எம்.எல்.ஏ. என்பதால் தொகுதிக்கே தான்தான் என்ற ரீதியிலான அவரது அணுகுமுறைதான் சிக்கல். மாவட்டத்தில் நடக்கும் விவகாரங்களையெல்லாம், தலைவருடனான தனது தனிப்பட்ட பழக்கத்தின் காரணமாக நேரடியாக தலைவரின் கவனத்திற்கே புகாராக கொண்டு சென்றுவிடுவதை வாடிக்கையாக வைத்திருந்ததும் சிக்கலானது என்கிறார்கள்.
கட்சி ரீதியான விசாரணையில் இதையெல்லாம் தலைமையின் கவனத்திற்கு கொண்டு சென்றதன் காரணமாகத்தான், ” தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்திட்ட சிறப்புக்குழுவின் உறுப்பினர்” என்ற பதவியை கொடுத்து, தொகுதியிலிருந்து அவரை மெல்ல கிளப்பிவிட்டதாகவும் சொல்கிறார்கள்.

இதுஒருபுறமிருக்க, திருச்சி கிழக்கு தொகுதியை குறிவைத்து திருச்சியை சேர்ந்த தொழிலதிபர் எம்.எம்.எம். முருகானந்தம் காய் நகர்த்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. விஜய்க்கு போட்டியாக நேருக்கு நேர் களம் காணும் தகுதியுடைய வேட்பாளரை அடையாளம் காண வேண்டிய நிலையில் கழகம் இருக்கும் நிலையில், அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் விருப்பத் தேர்வாக MMM முருகானந்தம் இருக்கிறார் என்கிறார்கள்.
ஏற்கெனவே, அன்பில் மகேஷ் வழியாக துணை முதல்வர் உதயநிதியுடன் அறிமுகமாகி ரோட்டரியின் உலகளவிலான மாநாடு ஒன்றை சென்னையில் நடத்தியிருந்தார். திருச்சியின் டிரேடு சென்டர் தலைவராகவும் ஆனார். சமீபத்தில் அமைச்சர் கே.என்.நேருவையும் சந்தித்து நட்பு பாராட்டியிருந்தார்.

கட்சியில் மூன்று மாதத்திற்கு முன்பாக சேர்ந்த ஒருவருக்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்க கட்சியின் துணைவிதி இடம் கொடுக்காது என்ற நிலையில், மக்கள் நீதி மையத்தின் வழியாக அவரை களமிறக்குவதற்கான ஏற்பாடுகள் நடப்பதாகவும் சொல்கிறார்கள்.
முருகானந்தம் ஏற்கெனவே, ம.நீ.மையத்தின் வேட்பாளராக கடந்த சட்டமன்றத்தேர்தலில் திருவெறும்பூரில் போட்டியிட்டவர். பின்னர், தனிப்பட்ட காரணங்களுக்காக கட்சியிலிருந்து விலகியிருந்தார். ஆனாலும், சமீபத்தில் ம.நீ.மையத்தின் தலைவர் நடிகர் கமலஹாசனை அழைத்து திருச்சியில் விழா ஒன்றை நடத்தியிருந்தார். அந்த விழாவில் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் பங்கேற்றிருந்தார். இவையெல்லாம், அரசியல் ரீதியான காய்நகர்த்தல்கள்தான் என்கிறார்கள்.
திருச்சி கிழக்கு தொகுதியை பொறுத்தமட்டில், குறிப்பிட்ட மத அடையாளத்தோடு, குறிப்பான சாதி அடையாளத்தோடு களம் இறங்கியவர்கள் யாரும் இதுவரை சோபித்ததில்லை என்கிறார்கள். அந்த வகையில், இனிகோ இருதயராஜுக்கு கசப்பான அனுபவமாகவும் மாறிவிட்டது என்கிறார்கள். அந்த இடத்தை இட்டு நிரப்புவதற்காகவே, எம்.எம்.எம். முருகானந்தம் தயார் செய்யப்படுகிறார் என்பதும்தான் திமுக தரப்பில் டாக்காக மாறியிருக்கிறது.
இதில் இன்னொரு டிவிஸ்டும் இருக்கிறது. ஆளும்கட்சிக்கு எதிரான மனநிலையில், மனக்கசப்பில் இருக்கும் இனிகோவை தங்கள் பக்கம் இழுப்பதற்கு த.வெ.க.வும் தருணம் பார்த்துக் கொண்டிருப்பதாக சொல்கிறார்கள். அதிரடி திருப்பங்களால் ஆனதுதானே அரசியல்!
– அங்குசம் புலனாய்வுக்குழு.








Comments are closed, but trackbacks and pingbacks are open.