சாலை பணியில் தாமதம் ! விபத்து ஏற்படும் அபாயம் !
திருச்சி மாவட்டம், துறையூர் பாலக்கரை முதல் முசிறி பிரிவு ரோடு வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் நெடுஞ்சாலை துறையினர் சாலையை சீரமைக்கும் பணிக்காக தற்போது சாலையின் இருபுறமும் மில்லிங் இயந்திரம் மூலம் தார் சாலையை பறித்து வைத்துள்ளனர். கடந்த சில நாட்களாக தார்ச்சாலை அமைக்கும் பணி நடைபெறாததால் , தினந்தோறும் அந்த சாலையின் வழியாக மருத்துவமனை, பள்ளிக்கூடம் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்காக இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்க கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இரவு நேரங்களில் தார்ச்சாலையை பறித்துப்போட்டதால் ஜல்லித்துகள்கள் ஒரு சேர சில இடங்களில் குவிந்துள்ளதால் அது தெரியாமல் வாகன ஓட்டிகள் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். மேலும் துறையூர், முசிறி பிரிவு ரோட்டில் இருந்து துறையூர் நகருக்குள் வரக்கூடிய பேருந்துகள் முதல் கனரக வாகனம் மற்றும் இருசக்கர வாகனங்கள் அதிவேகத்தில் வருவதால், குறிப்பாக தாலுகா அலுவலக வளாகத்திற்குள் சார்பதிவாளர், கிராம நிர்வாக அலுவலகம், கருவூலம், வனத்துறை , பொதுப்பணித்துறை உள்ளிட்ட அலுவலகங்கள் ஒன்று சேர அமைந்துள்ளதாலும், அங்கு வரக்கூடிய பொதுமக்கள் மற்றும் அருகில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிக்கு சென்று வரும் மாணவர்களும் விபத்தில் சிக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் சாலையின் இருபுறமும் வேகத்தடை அமைத்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
துறையூர்–திருச்சி மாநில நெடுஞ்சாலைப் பகுதியில் புதிய சாலை அமைக்கும் பணியை விரைந்து செயல்படுத்திட வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக பிரதான சாலையை சீரமைத்து, போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள சாலை இருபுற ஆக்கிரமிப்புகளை அகற்றி, பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.






Comments are closed, but trackbacks and pingbacks are open.