திருப்பரங்குன்றம் : பாஜக பிளான் – திமுக வைத்த செக் !
கார்த்திகை தீபத் திருவிழா சர்ச்சையைத் தொடர்ந்து, திருப்பரங்குன்றத்தை மீண்டும் குறிவைக்கும் பாஜக, நேரடியாக களமிறங்கி பதிலளிக்குமா திமுக? என்ற விவாதம் அரசியல் வட்டாரத்தை கலங்கடித்து வருகிறது.
கார்த்திகை தீபத் திருவிழாவின் போது தூணில் விளக்கு ஏற்றுவது தொடர்பாக இந்து முன்னணி மற்றும் தமிழ்நாடு அரசுக்கு இடையே கடுமையான சச்சரவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கிலும் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படாமல், விவகாரம் மீண்டும் தீவிரமடைந்தது.
இந்த நிலையில், புதிய பாஜக தேசிய தலைவராக பொறுப்பேற்றுள்ள நிதின் நபீன் தனது முதல் உரையில், திருப்பரங்குன்றத்தில் இந்துக்கள் தீபம் ஏற்ற அனுமதிக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டினார். இதன் பின்னணியில், பாஜக திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியை குறிவைத்து அரசியல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. இதனை எதிர்க்கொள்ள கூட்டணிக்கட்சிகளுக்கு தராமல் நேரடியாக களம் இறங்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
திருப்பரங்குன்றம் தொகுதி ஒரு பார்வை :
மதுரையின் முக்கிய அடையாளங்களாக விளங்கும் திருப்பரங்குன்றம் முருகன் கோவில், சர்வதேச விமான நிலையம், காமராஜர் பல்கலைக்கழகம், வடபழஞ்சி ஐ.டி. பார்க் ஆகியவை அமைந்துள்ள பகுதியாக திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி விளங்குகிறது. மேலும், 2015 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டு, தற்போது அதிவேகமாக கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனையும் இத்தொகுதியில் அமைந்துள்ளது.
திருப்பரங்குன்றம், திருநகர், ஹார்விபட்டி, அவனியாபுரம் ஆகிய முக்கிய பகுதிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு, இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன. இது மாவட்டத்தின் இரண்டாவது பெரிய சட்டமன்றத் தொகுதியாகும். தே.மு.தி.க. கட்சி துவங்கப்பட்டது உட்பட, பல அரசியல் கட்சிகளின் பிரமாண்ட மாநாடுகள் இத்தொகுதியில் நடைபெற்றுள்ளன. மேலும், தொடர்ச்சியாக இரண்டு முறை இடைத்தேர்தல்களைச் சந்தித்த தொகுதியாகவும் இது விளங்குகிறது.

இத்தொகுதியில், தனியார் பொறியியல் மற்றும் கலை – அறிவியல் கல்லூரிகள் அதிகளவில் செயல்பட்டு வருகின்றன. விவசாயிகள், அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பரவலாக வசித்து வருகின்றனர். வைகை பாசனக் கால்வாய் அமைக்கப்படாதது, நறுமணத் தொழிற்சாலை நிறுவப்படாதது, பூக்களுக்கான குளிர்விப்பு கிடங்கு இல்லாமை, சர்வதேச நாடுகளுக்கான விமான சேவை விரிவாக்கம் செய்யப்படாதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இப்பகுதியில் நீண்ட காலமாக உள்ளன.
தொகுதியில் முக்குலத்தோர் அதிகளவாகவும், அதற்கு அடுத்த நிலையில் சவுராஷ்டிரா, முத்தரையர், கோனார், ஆதி திராவிடர் மற்றும் கிறித்துவ சமூகங்களைச் சேர்ந்த மக்களும் வாழ்ந்து வருகின்றனர்.
திமுக வேட்பாளர்கள் :
பலரும் இத்தொகுதியில் குறிவைத்து வரும் நிலையில், திருமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்க பாண்டியனின் மனைவியும், மதுரை தெற்கு மாவட்ட திமுக மகளிரணி அமைப்பாளருமான கிருத்திகா பாண்டியன் முன்னணியில் தெரிகிறார். கடந்த தேர்தலில் 2021 தேர்தலில், இவர் போட்டியிடுவார் என்று பேசப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்னுத்தாய் போட்டியிட்டு ராஜன் செல்லப்பாவிடம் தோல்வியுற்றார்.

இந்த நிலையில், கிருத்திகா தங்கபாண்டியன் கடந்த சில ஆண்டுகளாக இத்தொகுதியில் தினசரி மக்களிடையே தென்பட்டு வருவதாகவும், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, கட்சியினரிடமும் பொதுமக்களிடமும் குறிப்பிடத்தக்க செல்வாக்கைப் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில், திமுகவின் ஏர்போர்ட் பாண்டியன், இளைஞரணியின் விமல் ஆகியோரும் கடுமையாக போட்டியிடுகின்றனர், ஆனால் பொருளாதாரப் பின்புலம் மற்றும் களத்தில் பங்கேற்பு ஆகியவற்றில் பின்தங்கியுள்ளனர்.
அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர்கள் :

அதிமுகவைப் பொருத்தவரை, புறநகர் மாவட்டச் செயலாளரும் முன்னாள் மேயருமான ராஜன் செல்லப்பாவே மீண்டும் களமிறங்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக களம் இறங்கி வெற்றி பெற்ற மருத்துவர் சரவணனும் இத்தொகுதியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அவர் எடப்பாடி பழனிசாமியிடம் நேரடியாகவே இந்தத் தொகுதியைக் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், திருப்பரங்குன்றம் தீபத் திருவிழா தொடர்பான பிரச்சினையில் மிகத் தீவிரமாக செயல்பட்டு வரும் பாஜகவும், இத்தொகுதியை குறிவைத்து அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அக்கட்சியின் புதிய தேசிய தலைவர் நபீன், அமித் ஷா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நேரடியாக குரல் கொடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இத்தொகுதியில் ‘இந்து விரோத திமுக’ என்ற பிம்பத்தை உருவாக்க, பாஜக நேரடியாக களமிறங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் பாஜக மூத்த தலைவர் பேராசிரியர் சீனிவாசன் போட்டியிட வாய்ப்புள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அனைத்து வகையிலும் முக்கியத்துவம் பெற்றுள்ள இத்தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு தமிழ்நாட்டு அரசியலில் அதிகரித்து வருகிறது. பாஜக நேரடியாக களமிறங்கும் நிலை ஏற்பட்டாலும், அதிமுக சார்பில் ராஜன் செல்லப்பா போட்டியிட்டாலும், அவர்களை எதிர்கொண்டு வெற்றி பெற திமுக தயாராகி வருகிறது. எனவே, இத்தொகுதியை கூட்டணிக் கட்சிகளுக்கோ அல்லது புதிய வேட்பாளருக்கோ வழங்காமல், திமுக தானே நேரடியாக களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
— மணிபாரதி








Comments are closed, but trackbacks and pingbacks are open.