தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டுத் தொடக்க விழா !
நமது தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது ஆண்டு நிறைவு விழா, அதாவது மூன்றாம் ஆண்டுத் தொடக்க விழா இன்று நடைபெற்று வருகின்றது. தமிழ்நாட்டில் இன்று அரசியல் களத்தில் ஒரு மிகப்பெரிய கட்சியாக, நாம் வளர்ந்திருக்கிறோம் என்றால், அதற்கு முழுமுதற்காரணம் நீங்கள்தான். அதோடு மட்டுமல்லாமல், நம்மை நேசிக்கின்ற கோடிக்கணக்கான பொதுமக்களும்தான் இந்த வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணம். நீங்கள் ஒவ்வொருவரும்தான் என்னுடைய மிகப்பெரிய பலம். உங்களை முழுமையாக நம்பித்தான் நானும், நமது கழகமும் இருக்கிறோம். இதை நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டிய அவசியமில்லை. இது உங்கள் அனைவருக்கும் நன்கு தெரிந்த ஒரு நிதர்சனமான உண்மை. எனவே, இன்று உங்கள் அனைவருக்கும், நமது கழகத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் தோழர்களுக்கும், தொண்டர்களுக்கும் இந்தக் கழகத்தின் ஒரு ‘தலைமைத் தொண்டன்’ என்ற முறையில் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சரி, மைக்கை பிடித்தாகிவிட்டது. இனி வெடியைக் கொளுத்திப் போட்டுவிடுவோமா? 1977-ஆம் ஆண்டு ஜூன் மாதம் என்று நினைக்கிறேன். அப்போது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் வானொலியில் ஒரு பேட்டி அளித்தார்கள். அதில் பேசும்போது. “பேரறிஞர் அண்ணா அவர்கள் இருந்த இடத்தில், இப்படிப்பட்டவர்களும் அமர்கின்ற ஒரு நிலைமை ஏற்பட்டுவிட்டதே என்று எண்ணி எண்ணி நான் கண்ணீர் வடித்தார். அன்று அந்த மக்களின் கண்ணீரைத் துடைக்க ஆரம்பிக்கப்பட்ட ஒரு இயக்கம்தான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று கூறினார்.
அதே போன்று, 2017-க்குப் பிறகு, குறிப்பாக 2021-க்குப் பிறகு தமிழ்நாட்டின் அரசியல் நிலைமையைப் பற்றிச் சிந்தித்துப் பார்த்த தமிழக மக்கள், பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் இருந்த இடத்தில், பேரறிஞர் அண்ணா அவர்கள் இருந்த இடத்தில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் இருந்த இடத்தில், இப்படிப்பட்டவர்களும் அமர்கின்ற ஒரு நிலைமை ஏற்பட்டுவிட்டதே என தமிழக மக்கள் கண்ணீர் வடித்தார்கள். இன்று இந்த கண்ணீரைத் துடைப்பதற்கு ஆரம்பித்த இயக்கம்தான் நமது ‘தமிழக வெற்றிக் கழகம்’.
நாம் இப்படி பேசுவதால், கண்டிப்பாகச் சில தரப்பினர் கொந்தளிப்பார்கள். அதைப் பற்றியெல்லாம் நாம் கவலைப்படக் கூடாது. ஏனென்றால், கொந்தளிப்பதுதான் அவர்களது வேலையே. இது உங்களுக்குப் புரிகிறது அல்லவா? எம்.ஜி.ஆர் அவர்கள் கட்சி ஆரம்பித்தபோதும், ஏன் அவர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு கூட, சட்டசபையில் அவரைப் பார்த்து, “ஏதோ ஒரு நடிகர் கட்சி ஆரம்பித்து வந்திருக்கிறாராம், ஏதோ ஒரு புதிய கட்சி வந்திருக்கிறதாம், புரட்சித் தலைவர் என்று ஒருத்தர் வந்திருக்கிறாராம்” என்று கேலியும் கிண்டலும் பேசுவதுதான் அவர்களின் மரபாக இருந்தது. யார் அரசியலுக்கு வந்தாலும் கொந்தளிப்பதுதான் அவர்களது வேலை.
அப்படிதான் நாம் அரசியலுக்கு வந்த பிறகு கூட, “இந்த விஜய்க்கு என்ன அரசியல் அனுபவம் இருக்கிறது? எம்.ஜி.ஆர் அவர்களுக்கு எவ்வளவு அனுபவம் இருந்தது தெரியுமா? 1952-லிருந்து 1972 வரை சுமார் இருபது ஆண்டுகள் திமுகவிலேயே இருந்து அவர் பெற்ற அரசியல் அனுபவம் எவ்வளவு தெரியுமா? விஜய்க்கு என்ன பெரிய அனுபவம் வந்துவிட்டது?” என்று கேட்ட அதே வாய்தான், அன்று எம்.ஜி.ஆர் அவர்களைப் பார்த்து “இவர் அரசியல் அரிச்சுவடி தெரியாதவர், மக்கள் கவர்ச்சியை மட்டுமே நம்பி அரசியலுக்கு வந்திருப்பவர், வெறும் ‘அட்டக்கத்தி’ வீரன், விளம்பரத்திலேயே வாழ்பவர், இவருக்குக் கேள்வி கேட்க மட்டும்தான் தெரியும் – பதில் சொல்லத் தெரியாது, செய்தியாளர்களைச் சந்திக்க மாட்டார், டெல்லிக்கு அஞ்சுபவர், மேலிடத்திலிருந்து அவருக்கு அவ்வளவு அழுத்தம் இருக்கிறது” என்று சொன்னதும் அதே வாய்தான். அன்று எம்.ஜி.ஆர் அவர்களை மட்டுமல்ல, அவருடைய உண்மையான தொண்டர்களைக் கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை. ஜொலி ஜொலிப்பா ஜொலிஜொலிப்பை பார்த்து பல்லிழிப்பவர்கள் என்று கேவலமாக விமர்சித்தார்கள்.
இப்படியெல்லாம் அவர்கள் கிண்டலும் கேலியும் செய்தபோது, தமிழக மக்கள் அமைதியாக எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார்கள். இறுதியில் மக்கள் என்ன செய்தார்கள் என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். அவர் அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, அரசியலில் “பழுத்த அனுபவசாலிகள்” என்று தங்களைச் சொல்லிக் கொண்டவர்களுக்குக் கூட கோட்டை என்பது பகல் கனவாகவே மாறிவிட்டது. 1977-இல் கையாண்ட அதே பழைய, தேய்ந்து போன, துருப்பிடித்த, நைந்து போன ஆயுதங்களையே இப்போதும் கையில் எடுக்கிறார்கள். எனவே, அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது ஒன்றுதான்: “ஜெண்டில்மேன், தொழில்நுட்பம் வளர்ந்து இன்று எங்கேயோ சென்றுவிட்டது. தயவுசெய்து உங்கள் உத்திகளையாவது கொஞ்சம் மாற்றிக் கொள்ளுங்கள் பாஸ்!”
அவர்கள் பெருந்தலைவர் காமராஜர் அவர்களையும் விட்டுவைக்கவில்லை. “அவருக்கு இலக்கியம் என்றால் என்ன தெரியுமா? அவர் என்ன மாபெரும் புலவரா?” என்று கிண்டல் செய்தார்கள். நான் முன்பே சொன்னது போல, தங்களை எதிர்த்து யார் நின்றாலும் அவர்களைச் சிறுமைப்படுத்துவதுதான் இவர்களின் வேலை. நாம் அவர்கள் செய்கின்ற தவறுகளைச் சுட்டிக்காட்டினால், அவர்கள் செய்கின்ற அராஜகங்களைப் பற்றிப் பேசினால், அவர்கள் செய்கின்ற ஊழல்களைப் பற்றி நாம் அம்பலப்படுத்தினால் – குறிப்பாக நாம் அதைச் செய்தால் – உடனே ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த அதே பழைய ‘தகர டப்பாவை’ எடுத்து உருட்ட ஆரம்பித்துவிடுவார்கள். பவளவிழா பாப்பாவிற்கு வேறு என்ன தெரியும்? பழைய டப்பாவை உருட்டதான் தெரியும். அதற்காக அவர்கள் செய்கின்ற தவறுகளை நாம் சொல்லாமல் இருக்க முடியுமா? கண்டிப்பாகச் சொல்வோம், தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருப்போம். நம்மைத் தவிர அவர்களை எதிர்த்து நின்று கேள்வி கேட்கும் ‘தில்’ வேறு யாருக்கு இருக்கிறது? மக்களின் உண்மையான பிரதிநிதி நாம் மட்டும்தான்.
இன்றைய டிஜிட்டல் உலகில் திருவள்ளுவர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால், இந்தத் தீய சக்திகளைப் பற்றி என்ன திருக்குறள் எழுதியிருப்பார் என்று ஒரு கற்பனை செய்து பாருங்கள்.
“அநீதி, அராஜகம், தில்லுமுல்லு இவையெல்லாம்
திமுக முதற்றே உலகு”
என்றுதான் அவர் எழுதியிருப்பார்.
அடுத்து, இந்த மும்முனைப் போட்டி, நான்கு முனைப் போட்டி என்றெல்லாம் ஊடகங்களில் பேசுகிறார்கள். சரி, அவர்களைப் பொறுத்தவரை அது அப்படியே இருக்கட்டும். ஒரு பக்கம் மாபெரும் மக்கள் சக்தியாக நாம் நிற்கிறோம். இன்னொரு பக்கம் திமுக தலைமையில் சில கூட்டணிக் கட்சிகள் இருக்கின்றன. மற்றொரு பக்கம் பாஜக தலைமையில் மற்றும் பலர். ஏன் சிரிக்கிறீர்கள்? உண்மையைத்தானே சொல்கிறேன். இப்படி எத்தனை சக்திகள் வந்தாலும், எத்தனை பேர் அணி திரண்டு வந்தாலும், திமுகவை வீழ்த்துவதற்கு மாபெரும் மக்கள் சக்தியான நம்மால் மட்டும்தான் முடியும். நமது தமிழக வெற்றிக் கழகத்தால் மட்டும்தான் அது சாத்தியம்.
இப்படிப்பட்ட சூழலில், “விஜய் வீட்டை விட்டு வெளியே வா” என்று சிலர் கூவுகிறார்கள். எனக்கு அது எப்படிக் கேட்கிறது தெரியுமா? ஒவ்வொரு வீட்டிலும் இருக்கின்ற ஒவ்வொரு ‘விஜய்யையும்’ அவர்கள் கூப்பிடுவது போலத் தோன்றுகிறது. அதனால் பொறுமையாக இருங்கள் பாஸ்! அவர்கள் வருவார்கள், முறையாக வருவார்கள். வாக்குப்பதிவு அன்று வாக்காளர் அடையாள அட்டையைக் கையில் எடுத்துக்கொண்டு, ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் ஒவ்வொரு ‘விஜய்யும்’, ஒவ்வொரு ‘விஜியும்’ வாக்குச்சாவடிகளில் காலையிலேயே வந்து அணிவகுத்து நிற்பார்கள் பாருங்கள், அன்று உங்களுக்குத் தெரியும் – “ஏன்டா இந்த விஜய்யை கூப்பிட்டோம்?’ என நீங்கள் வருத்தப்படுவீர்கள்.
நான் இப்படிப் பேசினாலே உடனே, “இது என்ன சினிமாவா?” என்று ஆரம்பித்து விடுவார்கள். நான் சினிமாவை விட்டாலும், நீங்கள் சினிமாவை விடமாட்டேன் என்கிறீர்கள். அப்புறம், சமீபகாலமாக இந்த ‘கருத்துக் கணிப்பு’ என்ற பெயரில் ஒரு விஷயம் போய்க்கொண்டிருக்கிறது. அதில் பலர் உண்மையான கருத்துக்கணிப்புகளைச் சொல்கிறார்கள், அதை நான் தவறாகச் சொல்லவில்லை. ஆனால், சில கணிப்புகள் சிலருக்கு ஏற்பட்ட ‘கடுப்பில்’ விடப்பட்ட கணிப்புகளாக இருக்கின்றன. அத்தகைய கடுப்பில் விட்ட கணிப்பாளர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது ஒன்றுதான்: “தயவுசெய்து ஊர் ஊராக, தெருத் தெருவாக, வீடு வீடாகச் சென்று கருத்துக்கணிப்பு எடுத்துப் பாருங்கள். ஒவ்வொரு வீட்டிலும் தமிழக வெற்றிக் கழகம் இருப்பதைக் காண்பீர்கள். ஒருவேளை அந்த முடிவு உங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தால், ரப்பரை வைத்துக் கொண்டு எல்லாவற்றையும் அழித்துவிட்டு, மீண்டும் முதலிலிருந்து கணிப்பு எடுங்கள். அப்போதும் அதே முடிவுதான் வரும்.”
இதில் என்ன லாஜிக் இருக்கிறது? எல்லா வீட்டிலும் எப்படி த.வெ.க இருக்கும் என்று நீங்கள் கேட்கலாம். ஒரு சின்ன சோதனை செய்து பாருங்கள். நமது மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மேடையில் பேசும்போது சொன்னார்: “என்னுடைய கட்சிக்காரர்கள் மற்றும் சில அமைச்சர்கள் செய்கின்ற அராஜகங்களைப் பார்க்கும்போது எனக்கு இரவில் தூக்கமே வரமாட்டேன் என்கிறது” என்று வருத்தப்பட்டார். அந்த வீடியோ இப்போதும் இணையத்தில் இருக்கிறது. அப்படிப்பட்ட அவர், என்றாவது ஒரு நாள் மிக அசதியாகத் தூங்கிக் கொண்டிருக்கும்போது, அவரிடம் சென்று “ஐயா, எந்தச் சின்னத்திற்கு ஓட்டுப் போடுவீர்கள்?” என்று கேட்டுப் பாருங்கள். அவரே அறியாமல் விசில் சின்னத்திற்குத்தான் என்று சொல்வார். தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால் உண்மையைச் சொல்லிவிடுவார்கள், அதற்காகச் சொன்னேன்.
தமிழக வெற்றிக் கழகம் நகரங்களில் மட்டும்தான் இருக்கிறது, கிராமப்புறங்களில் இல்லை என்று சொல்பவர்களிடம் இத்தகைய சோதனைகளைச் செய்து பாருங்கள். விசில் சின்னம் சென்றடையாத ஊரே தமிழகத்தில் இல்லை. விசில் சின்னம் எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் தமிழக வெற்றிக் கழகம் இருக்கிறது என்று அர்த்தம். எனது அன்புத் தாய்மார்கள், அக்கா தங்கைமார்கள், அண்ணன் தம்பிகள் த.வெ.க-விற்கு வாக்களிப்பதைத் யாராலும் தடுக்க முடியாது. நம்மைத் தங்கள் சொந்த இரத்த உறவாகக் கருதுகின்ற நமது மக்களை, எந்தக் கட்சியாலும் எவ்வளவு விலை கொடுத்தாலும் வாங்க முடியாது.
இதை நான் அதீத நம்பிக்கையில் சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள். இதுதான் இன்றைய கள நிலவரம், இதுதான் கள எதார்த்தம். தீய சக்தியை வீழ்த்துவதற்குத் தூய சக்தியான நம்மால் மட்டும்தான் முடியும். 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மட்டும்தான் மக்களின் ஒரே தேர்வு. இதில் எந்த மாற்றமும் இல்லை. பழைய இன்ஜின், ஓட்டை இன்ஜின் என்று எத்தனை இன்ஜின்கள் வந்தாலும், மக்களால் அங்கீகரிக்கப்பட்ட ‘டாப் இன்ஜின்’ நமது த.வெ.க மட்டும்தான் என்பதை மக்கள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டார்கள்.
ஆகவே, நமது கழகத் தோழர்கள் இதை மனதில் ஆழமாகப் பதித்துக் கொண்டு, இன்னும் தீவிரமாகப் பணியாற்றுங்கள். நான் ஏற்கனவே சொன்னது போல, ஒன்றியம், நகரம், பேரூர், பகுதி, கிளை என அனைத்து நிலைகளிலும் வாக்குச்சாவடி வாரியாக நமது வேட்பாளர்களின் வெற்றிக்காக ஒற்றுமையாகப் பணியாற்றுங்கள். நமக்கு மிகப்பெரிய கூட்டணியாக மாபெரும் மக்கள் சக்தி இருக்கிறது. குடும்பம் குடும்பமாக மக்கள் நம்முடன் இருக்கிறார்கள். நான் முன்பே சொன்னது போல, நமது விசில் சின்னத்திற்கு மக்களை வாக்களிக்க வைப்பது மட்டும்தான் உங்கள் பணி. மற்ற அனைத்தையும் மக்களுடன் சேர்ந்து நான் பார்த்துக் கொள்கிறேன்.
தமிழக அரசியலில் “த விசில் புளோயர்” (The Whistleblower) என்பது நமது தமிழக வெற்றிக் கழகம்தான். நம் மக்கள் இந்த விசிலை ஊதுகின்ற ஊதலில், இந்தத் தீய சக்திகளும் ஊழல் சக்திகளும் சிதறி ஓட வேண்டும். அன்று, செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் தமிழக வெற்றிக் கழகம் ஆளும் கட்சியாக எழும். உங்களோடு நான் இருக்கிறேன், நம்மோடு நமது மக்கள் இருக்கிறார்கள். இதற்கு மேல் நமக்கு என்ன வேண்டும்?
நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.