சட்டவிரோதமாக தனியாருக்கு கைமாறியதா திருச்சி BIM ! ஓயாத சர்ச்சை !
நீயெல்லாம் க்ளாஸ் எடுத்தா எனக்கு அட்மிஷன் வராது… நீதிமன்றத்துக்கே சவால் விடும் திருச்சி BIM !
பாரதிதாசன் மேலாண்மை நிறுவன (BIM) த்தை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் தனது கட்டுப்பாட்டுக்குள் உடனடியாகக் கொண்டு வர வேண்டுமென்ற கோரிக்கையை இந்திய மாணவர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்டக்குழு முன்வைத்திருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக, அவ்வமைப்பின் மாநில இணைச்செயலர் ஜி.கே.மோகன் விடுத்துள்ள அறிக்கையில், ”பாரதிதாசன் மேலாண்மை நிறுவனம் (BIM) 1982ஆம் ஆண்டு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் “School of Excellence” என்ற சிறப்பு அந்தஸ்துடன் கல்விசார் தன்னாட்சியுடன் நிரந்தர இணைப்புடன் பல்கலைக்கழக விதி பிரிவு 2(k) இன் கீழ் நிறுவப்பட்டது. தொடக்கம் முதல் BIM, பல்கலைக்கழகத்தின் உட்பிரிவாக, ஒரு அங்கமாக செயல்பட்டு, கல்வி அனுமதிகள், ஒழுங்குமுறை அங்கீகாரங்கள் மற்றும் மாணவர்களின் பட்டச் சான்றிதழ்கள் அனைத்தும் பல்கலைக்கழகத்தின் பெயரிலேயே வழங்கப்பட்டன.
ஆனால், 2003ஆம் ஆண்டில் பல்கலைக்கழகத்தின் அறிவும் அனுமதியும் இன்றி BIM Society அமைப்பில் செய்யப்பட்ட சட்டவிரோத திருத்தங்களின் மூலம், BIM ஒரு தனியார் சுயாதீன Society மூலம் நிர்வகிக்கப்படுவதாக மாற்றிக் காட்டப்பட்டுள்ளது. இந்த மாற்றங்களுக்கு பல்கலைக்கழக Syndicate, உயர்கல்வித் துறை, மாநில அரசு அல்லது Chancellor ஆகியோரின் எந்த அதிகாரப்பூர்வ அனுமதியும் பெறப்படவில்லை என்பது பதிவுகள் மூலம் தெளிவாகிறது. மேலும், அசல் Bylaws-இல் இருந்த “University” மற்றும் “State” என்ற சொற்கள் நீக்கப்பட்டிருப்பது கடுமையான சட்டப்பூர்வ சந்தேகங்களை எழுப்புகிறது.
ஒழுங்குமுறை ஆவணங்களில் BIM இன்னும் “பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் School of Excellence” என்றும், பல்கலைக்கழகத்தின் ஒரு வளாகமாகவும் குறிப்பிடப்பட்டுக் கொண்டிருக்க, அதே நேரத்தில் பல்கலைக்கழகம் BIM மீது கட்டுப்பாடு இல்லை என கூறுவது முரண்பாடாகும். இதன் காரணமாக மாணவர்களுக்கு பட்டச் சான்றிதழ்கள் வழங்குவதும் நிறுத்தப்பட்டுள்ளது (விபரம் – வழக்கு எண் WA(MD)No.765 of 2023). இவ்விவகாரம் தற்போது உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. மேலும், WP(MD) No.19133 of 2023 வழக்கில் BIM என்பது பல்கலைக்கழகத்தின் அலகு (Unit) மற்றும் School of Excellence என நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
இதற்கிடையில், ரூ.250 கோடி மதிப்பில் காலமாவூரில் புதிய BIM வளாகம் கட்டப்பட்டமை, பல்கலைக்கழகம் அல்லது அரசின் அனுமதியின்றி தனியார் ஒப்பந்தத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட பொதுநிதி இத்திட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், நிர்வாகத் தெளிவுத்தன்மை மற்றும் நிதி பொறுப்புணர்ச்சி குறித்து தீவிர சந்தேகங்கள் எழுகின்றன.
மேலும், நிர்வாகம், மாணவர்கள் சேர்க்கை, ஆசிரியர் நியமனங்கள் (Ghost Faculty உட்பட), மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் அரசு விசாரணையில் உள்ளன. இந்நிலையிலும், பல்கலைக்கழகம் தனது பொறுப்பிலிருந்து விலக முயல்வது மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகிறது.
எனவே, இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்துவது:
BIM-ஐ உடனடியாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். சட்டவிரோத Society நிர்வாகத்தை ரத்து செய்ய வேண்டும். நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து நீதிபதி தலைமையிலான சுயாதீன விசாரணை நடத்த வேண்டும். கல்வி கட்டணங்களை அரசு முறைப்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தின் பெயரில் பட்டச் சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும். மாணவர்களின் கல்வி உரிமை மற்றும் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும். மாணவர்கள், பெற்றோர் மற்றும் கல்வி சமூகத்தின் நலனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு மற்றும் உயர்கல்வித் துறை உடனடி தலையீடு செய்து இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்” என்ற வேண்டுகோளை முன்வைத்திருக்கிறார்கள்.
– அங்குசம் செய்திப்பிரிவு.








Comments are closed, but trackbacks and pingbacks are open.