செயின்ட் ஜோசப் கல்லூரியில் பேராசிரியர் சுப.வீரபாண்டியனின் நூல் வெளியீட்டு விழா !
பேராசிரியர் சுப.வீரபாண்டியனின் எழுதியுள்ள “ஒரு நூற்றாண்டில் தமிழ்நாடு கண்ட போராட்டங்கள்” நூலை திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி ஆங்கிலத்துறைப் பேராசிரியரும், கல்லூரியின் அகத்தர உறுதிப்பிரிவு கூடுதல் இயக்குநருமான முனைவர் ரா.குர்ஷித் பேகம் மொழிபெயர்த்துள்ளார். இந்த நூலின் வெளியீட்டு விழா 02.02.2026 அன்று திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி பார்பியர் (ஜூபிலி) அரங்கில் நடைபெற்றது.
கல்லூரியின் அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல், சே.ச. தம் தலைமையுரையில் தமிழ்நாட்டின் வரலாற்றையும் சமூக நீதிக் கட்டமைப்பையும், அவற்றை மக்கள் மயப்படுத்திய சமூக அரசியல் இயக்கங்களின் முக்கியத்துவத்தையும் இந்நூல் எடுத்துரைத்துள்ளதைப் பாராட்டி உரையாற்றினார்.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திருமிகு கே.என்.நேரு இந்நூலை வெளியிட்டு இந்த மண் அடைந்திருக்கிற முன்னேற்றத்திற்கும் உரிமைக்கும் திராவிட இயக்கங்கள் எவ்வாறு அடிப்படையாக அமைந்திருக்கின்றன என்பதை தன்னுடைய அனுபவங்களின் வழி எடுத்துரைத்து பேராசிரியர் சுப. வீரபாண்டியனின் சமூகப்பணி போற்றுதலுக்குரியது. இதை மொழிபெயர்த்திருக்கிற பேராசிரியரும் பாராட்டுக்குரியவர் எனப் பதிவு செய்தார்.
நூலைப் பெற்றுக் கொண்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இளைய தலைமுறையிடையே வரலாற்று விழிப்புணர்வு மிக முக்கியமானது. அதற்கு துணை செய்யும் வகையில் இந்த நூல் அமைந்துள்ளது என்பதை எடுத்துக் கூறி சமூக நீதி போராட்டங்களில் தமிழ்நாடு கண்டுள்ள களங்களை நினைவுபடுத்தி உரையாற்றினார். மேலும் இந்த நூல் இளையோரைச் சென்றடைவதற்கு நம்மால் ஆன முயற்சியை எடுக்க வேண்டும் எனக் கூறிய அமைச்சர் பேராசிரியர் சுப வீரபாண்டியன் எழுதி முனைவர் ரா. குர்ஷித் பேகம் மொழிபெயர்த்து கிறிஸ்தவக் கல்வி நிறுவனத்தில் இந்த நூல் வெளியிடப்படுகிறது என்பதுதான் சமூக நீதியின் வெளிப்பாடு என எடுத்துக் கூறினார்.
நூல் மதிப்புரை ஆற்றிய கல்லூரி செயலர் அருள் முனைவர் ம.ஆரோக்கியசாமி சேவியர் , சே.ச. கடந்த நூற்றாண்டு காலமாக தமிழ்நாட்டை பாதித்தப் போராட்டங்களும் நடைபெற்ற சமூக சீர்திருத்தங்களும் குறித்த ஆவணமாக இந்நூல் விளங்குகிறது என்பதை எடுத்துரைத்து கல்வியாலும், கல்வி நிறுவனங்களாலும் தான் இத்தனை மாற்றங்களுக்கும் நிகழ்ந்துள்ளன என்பதைப் பதிவு செய்தார்.
கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் பெ.ரா. அலெக்ஸாண்டர் பிரவீன் துரை வாழ்த்துரை ஆற்றினார்.
மொழிபெயர்ப்பு குறித்த பகிர்வுரையில், முனைவர் ரா.குர்ஷித் பேகம், பரந்த வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கிலேதான் இந்த நூல் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டு இருக்கிறது என்பதை எடுத்துக் கூறினார்.

ஏற்புறையில் பேராசிரியர் சுப வீரபாண்டியன் இந்நூல் உருவான நோக்கத்தையும் சனநாயக மதிப்பீடுகள் மற்றும் சமூகச் சமத்துவத்தை வடிவமைப்பதில் சமூக அரசியல் இயக்கங்களின் பங்கு குறித்தும் எடுத்துக் கூறி, போராட்டம் இன்னும் ஓயவில்லை தொடர்ந்து கொண்டே இருக்கிறது அதற்கான கருத்தியல்களை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கருத்துக்களை மாணவர்களிடம் முன்வைத்து உரையாற்றினர்.
கடந்த நூறு ஆண்டுகளாக தமிழ்நாட்டின் சமூக அரசியல் அடையாளத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றிய அரசியல், சமூக, மொழியியல் மற்றும் பண்பாட்டு இயக்கங்களை ஆவணப்படுத்துகிறது. இந்நூல் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் ரூட்லெட்ஜ் – டெய்லர் அண்ட் பிரான்சிஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
விழாவில் திருச்சிராப்பள்ளி மேயர் மு.அன்பழகன், கல்லூரி மேலாண்மையினர் கள், திராவிட இயக்கத்தினர், சமூக ஆர்வலர்கள், அருள்தந்தையர்கள், ஆங்கிலத் துறைத்தலைவர் முனைவர் பிரான்சிஸ், மேனாள்துறைத்தலைவர் ஜெயபால் உள்ளிட்ட பேராசிரியர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், மாணவ மாணவியர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.