தொண்டர்களின் எதிர்பார்ப்பு : பேரம் பேசும் அரசியலா ? விவேகம் மிக்க அரசியலா ?
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு, வணக்கம். விரைவில் தன் கட்சிக்கான தேர்தல் கூட்டணியை இறுதி செய்து, தேர்தலில் நீங்கள் நினைக்கும் வெற்றியைப் பெற வாழ்த்துகள்.
2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட தேமுதிக 10% வாக்கு வங்கியைப் பெற்றது. விருத்தாசலத்தில் திமுக, அதிமுகவைத் தாண்டித் தனியொருவராக தலைவர் விஜயகாந்த் வெற்றி பெற்றார். இதனைதொடர்ந்து, 2011 தேர்தலில், ஜெயலலிதாவே கொஞ்சம் கீழே இறங்கி வந்து கூட்டணி அமைத்துப் போட்டியிட்டார். அதிமுக ஆட்சிக்கு வந்தது. திமுக எதிர்க்கட்சி என்னும் தகுதியை இழந்தது. 29 சட்டமன்ற உறுப்பினர்களோடு அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்த் புகழின் உச்சத்திற்குச் சென்றார்.
முதல்வர் ஜெயலலிதாவை எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் நாக்கைத் துருத்திக்கொண்டு விரல் நீட்டி எச்சரிக்கும் தொணியில் சட்டசபையில் பேசியது சர்ச்சையானது. அதிமுக – தேமுதிக கூட்டணி சிதறியது. தேமுதிகவின் 8 சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுக அணிக்கு தாவினர். இந்த நேரத்தில் தன் அரசியல் சாணக்கியத் தனத்தை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்தும் அவற்றையெல்லாம் விஜயகாந்த் பயன்படுத்தாமல் தனக்கு அரசியல் செய்யத் தெரியவில்லை என்று கையை விரித்துக் காட்டி, அரசியல் களத்தில் தனிமைப்பட்டுப் போனார்.
தமிழகம் தாண்டி 1971 இல்தான் திமுக பெங்களூரு, கோலார் தங்கவயல் மற்றும் கேரளாவின் தேவிகுளத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றன. அதற்குப் பிறகு ஒரு மாநிலக் கட்சி மற்ற மாநிலங்களில் போட்டியிட்ட வரலாறில்லை என்பதை மாற்றி, விஜயகாந்த் ஒருவரே இந்தியாவின் தலைநகர் தில்லி சட்டமன்றத்தில் போட்டியிட்ட பெருமையைப் பெற்றார். ஆனாலும், அவருடைய அரசியல் வளர்ச்சி என்பது நினைத்ததுபோல், அமையவில்லை என்ற உண்மையை உணர்ந்துகொள்ள வேண்டும்.
அரசியலுக்கு வருவதற்கு முன்பு, விஜயகாந்த் தன்னுடைய இரசிகர் மன்றம் வைத்து மக்கள் நலப் பணிகளைச் சிறப்பாகச் செய்துவந்தார். அரசியல் களத்திற்கு வந்து பெரியளவில் சொத்து சேர்த்துக்கொள்ளாமல், ஏழை மக்களின் மனதில் பெரிய இடத்தைப் பிடித்துக்கொண்டார். அரசியல் சதுரங்க விளையாட்டில் தன்னால் வெற்றிபெற முடியவில்லையே என்று எண்ணி வருந்தினார்.
2016 இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியால் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். உளுந்தூர்பேட்டையில் போட்டியிட்ட முதல் அமைச்சர் வேட்பாளர் விஜயகாந்த் அதிமுகவால் தோற்கடிக்கப்பட்டு மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டு, கட்டுத்தொகையை இழந்து பரிதாபத்திற்கு ஆளானார். தொடர்ந்து நடந்த 2019, 2021 தேர்தல்களில் தேமுதிக குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறாமல் அரசியல் களத்தில் பலவீனமான கட்சியாக இருந்த நிலையில் விஜயகாந்த் அவர்களின் மறைவு கட்சியை மீண்டும் நிலைபெறச் செய்யுமா? என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில்தான் நீங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பில் தங்களை இணைத்துக்கொண்டீர்கள். தங்களை அண்ணியார் என்று கட்சித் தொண்டர்கள் அழைத்தனர். உங்கள் தம்பியைக் கட்சியின் தலைவராகவும், தன் மகன் விஜய பிரபாகரனை இளைஞர் அணி செயலாளர் பொறுப்பில் அமர்த்திக் கட்சிப் பணியை மாநிலம் முழுவதும் விரைவு படுத்திய உங்களின் பாங்கு பாராட்டத்தக்ககே. மாற்றுக் கருத்தில்லை.

2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மகன் விஜய் பிரபாகரனை விருதுநகர் தொகுதியில் போட்டியிட வைத்துச் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை உங்கள் மகன் இழந்தார். இதனைத் தொடர்ந்து அதிமுக கூட்டணியிலிருந்து விலகி, கட்சிப் பணியை வேகம் கொள்ள வைத்தீர்கள். கடந்த மாதம் ஜனவரியில் கடலூரில் நடத்திய உங்கள் கட்சி மாநாடு மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது என்பது சிறப்பு. ஆனால், கூட்டணியை இறுதி செய்யாமல் நீங்கள் காலம் கடத்துவது என்பதும், நாங்கள் கூட்டணியில் பேரம் பேசுகிறோம் என்று வெளிப்படையாகப் பேசுவது உங்களுக்கான செல்வாக்கு மக்களிடம் குறைத்துவிடாதா?
விஜயகாந்த் அவர்களின் அரசியல் வாழ்வில் நிகழ்ந்த வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் கவனத்தில் கொண்டு அரசியலை நேர்மையாக வெளிப்படையாக நடத்தாமல் வீரத்தோடும் விவேகத்தோடும் நடத்தவேண்டும் என்றே எதிர்பார்க்கிறார்கள். 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுத் தமிழக அரசியலில் தேமுதிக சிறப்பாகச் செயல்பட வாழ்த்துகள்.
— அன்புடன், ஆதவன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.