உயிர்பலி வாங்கும் தேசிய நெடுஞ்சாலைகளும் … சோதனைச் சாவடி சோகங்களும் !
திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூரை அடுத்து திருச்சி மாவட்டத்தின் எல்லை தொடக்கமான நெடுங்கூரில், சாலையை கடக்க முயன்ற 41 வயதான ரவி என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
”இதுபோன்று, தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரம் அமைந்துள்ள கிராம மக்கள் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழக்கும் விவகாரம் கண்டுகொள்ளப்படாமலேயே, புறக்கணிக்கப்படுவதாக” சுட்டிக்காட்டுகிறார், திருச்சியை சேர்ந்த சாலை பயனீட்டாளர் நலக்குழுவின் தலைவர் அய்யாரப்பன்.

“தேசிய நெடுஞ்சாலையில், உள்ளூர் மக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கண்டிப்பாக அணுகு சாலைகளை அமைக்க வேண்டும். அவசியமான இடங்களில், சிறு மேம்பாலங்களை ஏற்படுத்த வேண்டும். ஆனால், பெரும்பாலான இடங்களில் பல்வேறு காரணங்களால் அணுகுசாலை இல்லாமலும், மேம்பாலங்கள் இல்லாமலும் மக்கள் அவதியுற்று வருகிறார்கள்.” என்கிறார், அய்யாரப்பன்.
விவாத பொருளாக மாறிய பேரிகார்டுகள் :
“இதே நெடுங்கூரில், கடந்த பிப்-13 ஆம் தேதியன்று ஐயப்ப பக்தர்கள் பயணித்த ஆந்திரபிரதேச பதிவு எண் கொண்ட தனியார் சுற்றுலா பேருந்து நெடுங்கூர் செக்போஸ்டை கடக்கும்போது எதிர்பாராமல் விபத்தில் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. இந்நிலையில், போலீஸ் செக்போஸ்ட் இருப்பதால்தான் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதாக குற்றஞ்சாட்டி உள்ளூர் மக்கள் சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர். போலீசாரும் வேறு வழியின்றி, தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே வைத்திருந்த தடுப்பரண்களை எடுத்துவிட்டனர். உள்ளூர் மக்களின் எதிர்ப்பால், பேரிகார்டரை அகற்றாமல் இருந்திருந்தால் இந்த அநியாய உயிரிழப்பை தடுத்திருக்க முடியும்.” என்கிறார்கள், நெடுங்கூரை சேர்ந்த சிலர்.
“எதுக்கு எடுத்தாலும் எங்கள் மீதுதான் பழி போடுகிறார்கள். இதுபோன்ற செக்போஸ்ட்டுகளால்தான் முக்கியமான குற்றவாளிகளை பிடிக்க முடிந்திருக்கிறது. குற்றச்சம்பவங்களை முன்கூட்டியே தடுக்கவும் முடியும். இதை ஏன் இடையூறாக பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. உள்ளூரை சேர்ந்தவர்கள் டிப்பர் லாரிகளில் மணல் அள்ளுவதற்கு இடையூறாக இருக்கும் என்பதால் எதிர்க்கிறார்களோ என்னவோ தெரியவில்லை.” என்கிறார்கள் போலீசு வட்டாரத்தில்.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமே பொறுப்பு :
“திருச்சி மாநகரை பொருத்தமட்டில், பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரையிலான அணுகுசாலைக்கான போராட்டம் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதுவரை தீர்வு கண்ட பாடில்லை. திருச்சி மாவட்டத்தை பொருத்தமட்டில், அபாயம் நிறைந்த பகுதிகள் என்பதாக பல இருக்கின்றன. குறிப்பாக, திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் டி.பளூர் மற்றும் பள்ளிவிடை பகுதிகளை சேர்ந்த உள்ளூர் மக்கள் ஆபத்தை உணராமல் எதிர்திசையில்தான் பயணித்து வருகிறார்கள். தினம் ஏதோ ஒரு வகையில் ஒருவராவது விபத்தில் சிக்கி காயமுறும் சம்பவம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பொதுமக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது ஒருபுறமிருக்க, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தேசிய நெடுஞ்சாலை துறையுடன் இணைந்து அந்த குறிப்பான இடத்துக்கான குறிப்பான தீர்வை காண முன் வர வேண்டும்” என்கிறார், அய்யாரப்பன்.
”பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பேரிகார்டர்கள் வைப்பதில் தவறில்லை. ஆனால், இதுபோன்று வைக்கப்படும் பேரிகார்டர்கள் உயரம் அதிகம் கொண்டதாக இருக்கிறது. ஒட்டகத்திற்கான திமிழ் போன்று, பேரிகார்டின் நடுவில் விளம்பரத்துக்காக ஒன்றை வைத்திருக்கிறார்கள். இது, எதிரில் வரும் வாகனங்களை கவனிக்க முடியாத அளவுக்கு மறைக்கிறது. அடுத்து, இந்த இடத்தில் பேரிகார்டர் வைக்கப்பட்டிருக்கிறது என்பதை வாகன ஓட்டிகளுக்கு முன்னரே எச்சரிக்கும் வகையில், அறிவிப்பு பலகைகளையும் முன்கூட்டியே வைக்க வேண்டும். இவற்றையெல்லாம் அக்கறை இல்லாமல், கணக்குக்கு பேரிகார்டரை குறுக்கே வைத்தால் போதுமா?” என்று எதிர்க்கேள்வி எழுப்புகிறார்கள் போராடும் பொதுமக்கள் தரப்பில்.
“இது, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அக்கறை கொள்ள வேண்டிய விவகாரம். உள்ளூர் போலீசை குறை சொல்லி ஒன்றுமில்லை. திருச்சி மாவட்டத்தை பொருத்தமட்டில், கடந்த 2024 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், 2025 ஆம் ஆண்டில் கணிசமான அளவுக்கு சாலை விபத்துக்களை குறைத்திருக்கிறார்கள். உதாரணத்துக்கு, கடந்த 2024 ஆம் ஆண்டில் 2493 சாலை விபத்துகளில், 812 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அதுவே, 2025 ஆம் ஆண்டில், சாலை விபத்துகளின் எண்ணிக்கை 2097 ஆக குறைந்திருக்கிறது. உயிரிழப்புகளும் 730 ஆக குறைந்திருக்கிறது. திருச்சி மாவட்ட போலீசாரின் சரியான திட்டமிடலில்தான் இந்த எண்ணிக்கை குறைந்திருக்கிறது.” என்கிறார், அய்யாரப்பன்.
செக்போஸ்ட் – பரிதவிக்கும் போலீசார் :
திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தமட்டில், 13 நிரந்தர மற்றும் தற்காலிக சோதனைச்சாவடிகள் இயங்கி வருகின்றன. குறிப்பாக, மாவட்டத்தின் எல்லைப்பகுதிகளில், சோதனையை வலுப்படுத்தியிருக்கிறார்கள். 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீசார் தொடர் வாகன சோதனையில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். இரவு பணிகளில் பெண் போலீசாரும் பணி செய்கிறார்கள். ஆனால், 13 சோதனைச் சாவடிகளில் பெட்டவாய்த்தலை, கொள்ளிடம், எம்.ஐ.இ.டி, மஞ்சள்திடல் பாலம் அருகில் உள்ள சோதனை சாவடிகளில் மட்டுமே கழிவறை வசதியுடன் கூடிய சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மற்ற, சோதனை சாவடிகளில் பணியாற்றும் போலீசார் இயற்கை உபாதைக்கு கூட ஒதுங்க முடியாத நெருக்கடிக்கு மத்தியில்தான் பணியாற்றி வருகிறார்கள்.

“திருச்சி கமிஷனராக திரிபாதி கமிஷனராக இருந்தபோதுதான், பீட் சிஸ்டத்தை முதன்முறையாக தமிழகத்தில் அறிமுகப்படுத்தினார். அந்த நடைமுறைதான் இன்று வரையில் குற்றங்களை குறைப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது. அந்த முயற்சிக்காக சர்வதேச அளவிலான அங்கீகாரத்தையும் அவர் பெற்றார். இன்று அதுபோன்ற நிலைமை இல்லை. இதுக்கே சொல்றீங்க. பந்தோபஸ்துக்கு போற இடத்துல இதைவிட பல கொடுமைகளை அனுபவித்து கொண்டுதான் வருகிறோம்.” என்பதாக புலம்புகிறார்கள், போலீசார் வட்டாரத்தில்.
செக்போஸ்ட் விவகாரத்தில், பேரிகார்டு வடிவமைப்பில் உள்ள சிக்கல், போதுமான வெளிச்சம், முன்கூட்டிய அறிவிப்பு பலகை உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை கணக்கில் கொள்வதோடு, உயிரை பணயம் வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரின் அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுக்க உயர் அதிகாரிகள் முன்வர வேண்டும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.
– ஆதிரன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.