வலுப் பெறும் குடியுரிமை கோரிக்கை !
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இயக்கங்களும் சமூக செயற்பாட்டாளர்களும் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக இவர்கள் அகதிகளாக இருக்கின்ற நிலை மாற வேண்டும். எனவே அனைத்து இலங்கைத் தமிழ் அகதிகளுக்கும் இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. எனினும் இந்திய அரசு இந்த நியாயமானக் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை!
உயர்நீதிமன்றத் தீர்ப்பு !
இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிப்பேராணை ( WRIT ) வழக்கில் குறிப்பிடத்தக்கத் தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கு எண்: WP(MD) No 11623/2017. பி. லோகநாதன் மற்றும் பலர் எதிர் இந்திய அரசு என்ற இந்த வழக்கில் மாண்பமை நீதியரசர் ஜி. ஆர். சுவாமிநாதன் அவர்கள் 17.06.2019 இல் தீர்ப்பு வழங்கினார்.
இலங்கை அகதிகளாக உள்ள இந்திய வம்சாவளியினர் இந்தியக் குடியுரிமை கோரி மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர்கள் ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்ப வேண்டும். ஒன்றிய உள்துறை அமைச்சகம் இவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதைப் பரிசீலிக்க வேண்டும். என்பதே இந்தத் தீர்ப்பின் சாராம்சமாகும்.
இதனடிப்படையில் நூற்றுக்கணக்கானோர் விண்ணப்பித்தனர். இவ்வாறு விண்ணப்பித்த அனைவருக்கும் “நீங்கள் சட்டவிரோதக் குடியேறிகள்( Illigel Migarnts) எனவே உங்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க இயலாது” என்ற பதில் இந்திய அரசினால் அனுப்பப்பட்டது.
குடியுரிமைத் திருத்த சட்டம் 2019 !
குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019,பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இடம் பெயர்பவர்களுக்கு மட்டுமே குடியுரிமை வழங்க வகை செய்கிறது. இச்சட்டத்தின்படி 2014 ஆம் ஆண்டு மேற்குறித்த நாடுகளிலிருந்து இடம் பெயர்ந்து வருவோர் சட்டப் பூர்வ இடம் பெயர்வோராக ஒன்றிய அரசு அங்கீகரித்துள்ளது. எனவே இவர்கள் இந்தியக் குடியுரிமை பெறுவதில் எந்தத் தடையும் இல்லை.
இலங்கையில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள் குறித்து இச்சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. எனவே சட்ட ரீதியாகவே இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதை இந்திய அரசு தடுத்துள்ளது குறிப்பிடத் தக்கது.

குடியுரிமை வழங்குவதில் உள்ளத் தடைகள் !
தமிழ்நாட்டிலுள்ள அகதி முகாம்களில் செயல்பட்டு வரும் OFFER என்ற தொண்டு நிறுவனம் இலங்கையரால் நடத்தப்படுகிறது. இந்த நிறுவனம் ஒன்றிய அரசுடன் தொடர்பில் உள்ளது. இந்த நிறுவனமும் இலங்கைத் தூதரகமும் அகதிகளுக்கான ஐநா ஆணையமும் இணைந்து அகதி முகாம்களில் பிறக்கும் குழந்தைகளுக்கும் இந்தியரை திருமணம் செய்து பிறக்கும் குழந்தைகளுக்கும் இலங்கைக் குடியுரிமையும் இலங்கை பிறப்பு சான்றிதழும் பெற்றுக் கொடுப்பது அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை கிடைப்பதற்குத் தடையாக உள்ளது.
ஐநா ஆணையமும் அகதிகளை மீண்டும் இலங்கைக்கு அனுப்பிவிடுவதையே விரும்புகிறது.
தொடரும் …
வழக்கறிஞர் தமிழகன் MA., BL., PGDJ.






Comments are closed, but trackbacks and pingbacks are open.